வரைந்து கொண்டிருந்ததைப்
பாதியில் நிறுத்திவிட்டுப்
பார்க்க வருவதாகச் சொன்னாய்.
முகச் சவரம் முடித்த கையோடு
இந்த விடுமுறை நாளின்
மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.
நீ வரும்போது எல்லாம் நான்
பீங்கான் கோப்பைகளில் தேநீர் குடிப்பவனாக
இருப்பது எப்படி? தெரியவில்லை.
ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை நாம்.
நீ அழுத்திப் பிடித்ததில்
விரல் கணுக்கள் சற்று வலிக்கின்றன.
வேறு யாரின் பரிசாகவோ
என் அறை மேஜைக்கு வந்திருக்கும்
வாஸ்து மூங்கில் செடியோடு உரையாடி
அமர்ந்திருக்கிறது உன் கால்மடித்த சிற்பம்.
ஆற்றில் நெடு நேரம் நின்றுவிட்டு வந்த
தோல் சுருங்கிய துல்லியத்துடன்
உன் வலச் சிறு பாதம்.
’மழை வரட்டும், போகிறேன்’ என்றாய்.
அடர் மழையில் உன் ஸ்கூட்டி புகுந்து மறைகையில்
என் மிச்சத் தேநீர் மிகவும் குளிர்ந்துவிட்டிருந்தது.
அங்கே மீண்டும் வரையத் துவங்கும் பொழுது
வேறொன்று ஆகிவிடும் அல்லவா,
நீ பாதியில் நிறுத்திவிட்டு வந்த ஓவியம்?
வண்ணதாசன்