காலமும் கணங்களும்
இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் !
நினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர் !!
முருகபூபதி
காத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு. காதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை. நானும் ஒருவருக்காக காத்திருக்கின்றேன்.
“வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை கரையைத்தழுவும் அலைகளை திரும்பிப்போ என்று எவரும் கட்டளை இடுவதில்லை. குருவிகளுக்கு இதுதான் உங்கள் கூடு என்று எவரும் பாதை காட்டிவிடுவதில்லை. கவிஞனும் இப்படித்தான். அவனுக்கு எவரும் அடியெடுத்துக்கொடுக்க முடியாது, கொடுக்கவும் கூடாது.”
என்று தனது கவித்துவமான எழுத்துக்களுக்கு வாக்குமூலம் அளித்து உயிரூட்டிய இனிய நண்பனுக்காக கத்துக்கிடக்கின்றேன்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது வாழ்நாளில் எத்தனைபேரை வாய் இனிக்க அண்ணா என்று அழைத்தார் என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அவர் புதுவை அண்ணா என்று விளித்த கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக நான் காத்திருக்கின்றேன். புதுவை எனக்கு அண்ணனோ தம்பியோ இல்லை. தோழன். அவ்வப்போது மச்சான் என்று பரஸ்பரம் அழைத்துக்கொள்ளும் உரிமைகலந்த உறவு எம்மிடையே படர்ந்திருந்தது.
“ புதுவை இரத்தினதுரை இலக்கியப்படைப்பாளியாக மட்டுமன்றி, ஒரு இலட்சியப்போராளியாகவும் எமது விடுதலை இயக்கத்தில் இணைந்து நிற்பவர். இலட்சியப்படைப்பிலும், இலட்சியப்பயணத்திலும் அவரது பணி சிறப்புடன் தொடர எனது நல்லாசிகள்” என்று பிரபாகரன், 1993 ஆவணியில் வெளியான கவிஞரின் நினைவழியா நாட்கள் கவிதைத்தொகுப்புக்கு வழங்கிய வாழ்த்துரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது 2009 மே மாத பேரவலத்திற்கு முன்னர்- சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் நேசித்த தலைவரின் ஆசிச்செய்தி.
கவிஞர் அதற்கு முன்னர் நேசித்த தலைவர்கள் லெனின், ஸ்டாலின், மாஓசேதுங், சேகுவேரா. இவர்களின் கீர்த்திபற்றியும் கவிஞர் பாடியிருக்கிறார். ஆனால் அவர்கள் இவருக்கு ஆசிவழங்கவில்லை.
புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை முன்னர் அதாவது 1971-1983 காலப்பகுதியில் அதிகமாக கொழும்பிலிருந்து நண்பர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட குமரன் இதழிலேயே படித்திருக்கின்றேன். வரதபாக்கியான் என்ற புனைபெயரிலும் எழுதியிருப்பவர்.
கவிதைத்துறையில் தன்னைக்கவர்ந்தவர்கள் இருவர் என்று குமரன் இதழ்களின் முழுமையான தொகுப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார் கணேசலிங்கன். ஒருவர் புதுவை இரத்தினதுரை, மற்றவர் சாருமதி. சாருமதி மறைந்துவிட்டது இலக்கியவாதிகளாகிய எமக்கு நன்கு தெரியும்.
ஆனால்….புதுவை இரத்தினதுரை….?
புதுவையின் எழுத்துக்களை கணேசலிங்கன் இவ்வாறு விதந்துரைக்கின்றார்:-
“சமூக விழிப்புணர்வும், எழுச்சியும் கொண்ட கவிதைகள், கவிதைக்குரிய ஓசைநயத்தையும் அவர் விட்டுவிடவில்லை..’ கரியள்ளிப்போட்டிரும்பை உருக்கும் கைகள். கட்டாயம் உங்களையும் உருக்கி வார்க்கும்.’ தமிழ்நாட்டிலும் அவருக்கு நிகரான கவிஞரைக்காண்பதரிது.”
இறுதியாக 2009 இல் ஜனவரி மாதம் சென்னையில் அதாவது மே மாத அவலத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் கணேசலிங்கனை நான் சந்தித்தபோதும் அவர் புதுவைபற்றி என்னிடம் நேரடியாகவே விதந்துரைத்தார்.
புதுவையின் கவிதைகள் 1971 காலப்பகுதியில் அறிமுகமானபோதிலும் அவர் நேரடியாக எனக்கு அறிமுகமாகி இனிய நண்பராகியது 1983 இல்தான். எல்லாம் நேற்றுப்போல் இருக்கிறது.
எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு விழாக்களை நடத்திக்கொண்டிருந்தவேளையில் அவற்றில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் ராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரை இலங்கைக்கு அழைத்திருந்தது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் நிகழ்ச்சிகளை நடத்தியதுடன் நண்பர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் அவர்களின் கொட்டடி இல்லத்திலும் சந்திப்புகள் நடத்தினோம்.
நண்பர் டானியல் வீட்டில் நடந்த ஒரு பகற்போசன விருந்துக்கு புதுவை இரத்தினதுரையும் வந்திருந்தார். பேராசிரியர் ராமகிருஷ்ணனை தெணியான் அழைத்துக்கொண்டு வடமராட்சி சென்றுவிட்டார். ரகுநாதன் ஆனைக்கோட்டையில் குடும்ப நண்பரை பார்க்கச்சென்றார். அதனால் அந்த விருந்துக்கு ராஜம்கிருஷ்ணன் வந்தார். அவருடன் புதுவை நீண்டநேரம் உரையாடினார்.
தி.ஜானகிராமனின் மோகமுள், செம்பருத்தி, உட்பட பல நாவல்களை படித்திருந்த நாம் அவரது உயிரோட்டமுள்ள எழுத்துக்களினால் கவரப்பட்டிருந்த காலம். புதுவையும் ஜானகிராமனின் அபிமான வாசகர். சௌந்தர்ய உபாசகர் என்று போற்றப்படும் அதாவது அழகை ஆராதிக்கும் படைப்பாளி. என்னதான் புரட்சி, செங்கொடி என்று பேசினாலும் எழுதினாலும் மிகவும் மென்மையான உணர்வுள்ள புதுவையையும் ஜானகிராமன் கவர்ந்ததில் வியப்பில்லை.
ஆனால் ராஜம் கிருஷ்ணனின் பார்வை எமக்கு நேர்மாறானது. பொதுவாகவே ஆண் வாசகர்களை ஜானகிராமன் கவர்ந்தளவுக்கு பெண் வாசகர்களை அவர் கவரவில்லை என்றுதான் நினைக்கின்றேன். ஜெயமோகனின் தாயார் கூட, ஜானகிராமனை, “ சரஸ்வதி தேவிக்கு காதல்கடிதம் எழுதும் விடலைப்பையன்தான் ஜானகிராமன்” என்று ஒரு சந்தர்ப்பத்தில் எள்ளலாகக்குறிப்பிட்டுள்ளார். காரணம் ஜானகிராமனின் பெண்பாத்திரங்களின் சிருஷ்டிப்பு.
ராஜம்கிருஷ்ணன், டானியல் வீட்டு சந்திப்பில் முன்வைத்த விமர்சனங்களினால் புதுவை சற்றுக்கோபமடைந்தார். எனினும் விருந்துமேசையில் அந்தக்கோபத்தைக்காண்பிக்காமல் விருந்து முடிந்ததும் என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார்.
“ என்னடாப்பா… நாங்கள் கயாத்ரி மந்திரத்தையெல்லாம் எவ்வளவு சுலபமாக ஜானகிராமனின் எழுத்துக்களில் தெரிந்துகொண்டோம். ஆழகியலை எவ்வாறு படைப்பிலக்கியத்தில் புகுத்தவேண்டும் என்பதை எமக்கெல்லாம் நேரடியாக போதிக்காமலேயே தனது எழுத்துக்களின் ஊடாகச்சொன்னவரை, இந்த அம்மா ஏன்தான் திட்டுகிறார்களோ தெரியவில்லை” என்றார் புதுவை.
நான் அவரை விழியுயர்த்திப்பார்த்தேன். பொதுவாகவே இடதுசாரிச்சிந்தனையுள்ளவர்களிடம் அழகுணர்ச்சி , மென்மையான இயல்புகள் இல்லை என்றுதான் அறிந்துள்ளேன். புதுவை புரட்சி பேசினாலும் மென்மையானவராகத்தான் நான் சந்தித்த காலப்பகுதியில் இருந்தார்.
சிலாபம் முன்னேஸ்வரத்தில் தேர் நிர்மாணிப்பு பணிகளுக்காக வந்திருக்கிறார். சிறந்த சிற்பி. அவரது கையில் எழுதும் பேனை மட்டுமல்ல மரங்களை செதுக்கி அற்புதமான சிலைகளை நேர்த்தியாக வடிவமைக்கும் கூரான உளியும் இருந்ததை எத்தனைபேர் அறிவார்கள்.
முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் சில உருவச்சிலைகளைப்பார்த்துவிட்டு அவற்றின் முன்னே கண்ணீர்மல்க அவற்றின் வடிவமைப்புகளை பார்த்துக்கொண்டு அவர் நின்றதாக உடப்பு பாடசாலை ஒன்றின் அதிபர் எனக்குச்சொல்லியிருக்கிறார்.
இப்படி மென்மையான இயல்புகள் கொண்டிருந்த புதுவை இரத்தினதுரை, வெடிமருந்துகளுக்கும் சயனைற் குப்பிகளுக்கும் ஆயுதங்களுக்கும் மத்தியில் எப்படி வாழத்தலைப்பட்டார் என்பது கண்டறியமுடியாத ரிஷிமூலம், 1983 ஆடிக்கலவரத்தின் பின்னர் அவரும் மத்தியகிழக்கு நாடொன்றுக்கு வேலைக்காக குடும்பத்திற்காக சென்றுவிட்டார்.
தலைவலி தனக்குத்தனக்கு வந்தால்தானே தெரியும் என்பர். பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீளுவதற்காக புதுவையும் மத்தியகிழக்கு நாடொன்றுக்குப்புறப்பட்டார். அவர் புறப்படும் முன்னர் அவருக்கும் தினகரன் வாரமஞ்சரியில் எஸ்தி என்ற புனைபெயரில் பத்தி எழுத்துக்கள் எழுதிக்கொண்டிருந்த எஸ்.திருச்செல்வம் என்ற ஊடகவியலாளருக்கும் இடையே மனக்கசப்பு தோன்றியிருந்தது. தினகரனில் எஸ்தி புதுவை பற்றி ஏதோ தாறுமாறாக எழுதிவிட்டார். அந்தக்கோபத்துடன்தான் புதுவை மத்தியகிழக்கிற்கு பயணமாகியிருந்தார். அக்காலப்பகுதியில் ரஸஞானி என்ற புனைபெயரில் நான் வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்கள் எழுதிக்கொண்டிருந்தேன்.
மத்திய கிழக்கிலிருந்து புதுவை எனக்கு எஸ்தியுடனான தனது கசப்பை உதிர்த்து நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் ஆவேசமாக சில வரிகளை எழுதியிருந்தமையால் நான் அதனை இலக்கியப்பலகணிக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. எஸ்தி, பின்னாளில் கனடாவுக்கு புலம்பெயர்ந்து தமிழர் தகவல் என்ற அமைப்பை உருவாக்கி புலிகளை ஆதரிக்கும் அரசியல் ஆய்வாளராக மாறிவிட்டார்.
பின்னாளில் தாயகம் திரும்பிய புதுவையும் எஸ்தி போன்று புலிகளை ஆதரித்தபோதிலும் நண்பர்களானார்களா என்பது எனக்குத்தெரியாது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்று அறிவோம். ஆனால் எதிரியும் எதிரியும் ஒரு கூடாரத்துக்குள் சந்தர்ப்பவசமாக நுழையும்போது நண்பர்களாகிவிடுவார்களா? என்பதும் தெரியாது,
1984 ஆம் ஆண்டு ஒருநாள் பிற்பகல் தொலைபேசியில் எனக்கொரு அழைப்பு, மறுமுனையில் புதுவை இரத்தினதுரை. மத்தியகிழக்கிலிருந்து பேசினார். இரண்டு நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் உவர்மலையில் ஒரு இராணுவ தாக்குதல் சம்பவம் நடந்தது. அச்சமயம் புதுவையின் துணைவியார் ரஞ்சி மூத்த மகனுடன் திருகோணமலையில் உவர்மலை பிரதேசத்தில் வசித்தார்.
அந்த தாக்குதல் சம்பவம் பற்றி மத்தியகிழக்கிலிருந்து அறிந்துகொண்ட புதுவையால் தொலைபேசி ஊடாக குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் என்னுடன் தொடர்புகொண்டு அவருடைய மனைவி வசிக்கும் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் ஒரு வீட்டின் தொலைபேசி இலக்கம் தந்தார். தனது குடும்பத்தினரின் நலன்குறித்து மிகுந்த கவலையுடன் கேட்டறிய முயன்றார்.
நான் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றியபின்பு, “நாளை மீண்டும் எடுங்கள் தொடர்புகொண்டு தகவல் அறிந்து சொல்வேன்” என்று உறுதியளித்தேன். சொன்னபடி உடனடியாகவே உவர்மலைக்கு தொடர்புகொண்டு சகோதரி ரஞ்சி இரத்தினதுரையுடன் உரையாடினேன். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு, மறுநாள் புதுவையின் தொலைபேசிஅழைப்புக்காக காத்திருந்தேன். அவரும் தொடர்புகொண்டார். எனது தகவல் அறிந்து பதட்டம் நீங்கி அமைதியடைந்தார்.
“ மச்சான் இன்றுதான் எனக்கு உறக்கம் வரும்” என்று அவர் சொன்னபோது நெகிழ்ந்துவிட்டேன். ஒரு பாசமுள்ள கணவனின் – தந்தையின் – குடும்பத்தலைவனின் உணர்வுகளை புரிந்துகொண்ட எனக்கு 1986 இன் பின்னர் அவரில் தோன்றிய மாற்றங்களைத்தான் புரிந்துகொள்ள முடியாது போய்விட்டது.
அன்று எனது தகவல்களின் மூலம் ஆறுதலடைந்த புதுவை, எனக்கு நன்றி தெரிவித்து நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அவரது எழுத்துக்கள் முத்துப்போன்று அழகானவை. எனது சேகரிப்பிலிருந்த பல கடிதங்களில் அவருடையதும் இருந்தன. எனினும் இடப்பெயர்வுகளின்போது எங்கோ தொலைத்துவிட்டேன்.
சில மாதங்களுக்குப்பின்னர் 1986 இல் ஒருநாள் மதியம் அவரிடமிருந்து மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு. ஆனால் மத்தியகிழக்கிலிருந்து அல்ல. மட்டக்குளியா என்ற கொழும்பின் புறநகர் பகுதியிலிருந்து. தான் வந்துவிட்டதாகவும் மட்டக்குளியில் நண்பர் மாத்தளை செல்வா (எச்.எச்.விக்கிரமசிங்கா) வீட்டிலிருப்பதாகவும் சில நாட்களில் ஊருக்கு குடும்பத்தினரைப்பார்க்கச்செல்லவிருப்பதாகவும் அதற்கு முன்னர் வந்து சந்திக்குமாறும் சொன்னார்.
மாலை வேலைமுடிந்ததும் மட்டக்குளிக்குச்சென்றேன்.
மாத்தளை செல்வாவின் வீட்டில் சாரம் அணிந்து மேற் சட்டை ஏதுமின்றி அமர்ந்திருந்த புதுவை என்னைக்கண்டதும் வாரி அணைத்து முத்தமிட்டு அன்பை பொழிந்தார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இயக்கங்களால். வங்கித்திருட்டு, கொள்ளை, பறிமுதல் என்பன பரவலாக நடந்துகொண்டிந்தன. இயக்கங்கள் இவற்றில் ஈடுபட்டிருந்தபோதிலும் எமது பத்திரிகையில் இனந்தெரியாத நபர்களின் கைவரிசை என்று எழுதி எழுதியே பத்திரிகா தர்மத்தை (?) பேணிக்காப்பாற்றிக்கொண்டோம்.
கொள்ளைச்சம்பவங்கள் மலிந்திருந்தமையால் குடும்பத்திற்கென்று புதுவை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த சில பொருட்கள் குறித்த கவலையும் அவருக்கு வந்திருந்தது. அவற்றை மாத்தளை செல்வாவின் வரவேற்பறையில் பார்த்தேன்.
“ இந்த நாட்டை ஏன்டாப்பா இப்படி வைத்திருக்கிறீர்கள்?’ என்று ஒரு விதேசிய நாட்டவர்போன்று கோப உணர்ச்சிபொங்கக்கேட்டார்.
“ ஊருக்குப்போய் இந்தக்கேள்வியை இயக்கங்களிடமே கேளும்.” என்றேன்.
விடைபெறும்போது “ மச்சான் ஊருக்குப்போகும்போது கொண்டுவந்தவற்றை எடுத்துச்செல்லாமல் சாதாரண பயணிபோன்று சென்று பார்த்துவிட்டு மீண்டும் கொழும்பு வந்து மத்தியகிழக்கிற்கு புறப்படும். கொண்டு வந்தவற்றை பின்னர் நிலைமை அறிந்து மாத்தளை செல்வா உமது குடும்பத்தினரிடம் சேர்ப்பிப்பார்.” என்றேன்.
எனது குழந்தைகளுக்காக வாங்கிவந்த இனிப்புப்பண்டங்களை தந்து எனக்கு விடைகொடுத்தார். அவர் யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் வருவார் வந்தபின்பு மத்தியகிழக்கிற்கு செல்வார். விமானநிலையத்தில் வழியனுப்பலாம் என்று நானும் நண்பர் மாத்தளை செல்வாவும் பலநாட்கள் காத்திருந்தோம். நாட்கள் , வாரங்காளாகி மாதங்களாகின.
புதுவை வரவேயில்லை. தொடர்பும் கிடைக்கவில்லை.
1986 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாடு நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடந்தபோது அங்குசென்றேன். மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவிடம் புதுவை பற்றி விசாரித்தேன்.
“யாழ். வின்சர் தியேட்டருக்குச் சென்றால் பார்க்கலாம்.” என்றார். அங்கே அவர் வாயிலில் டிக்கட் கிழிக்கின்றாரா? அல்லது படம்காண்பிக்கும் கருவியை இயக்குகிறாரா?” என்று கேட்டேன்.
“ போய்த்தான் பாருமே…அங்கே உமது அருமை நண்பர் என்ன செய்கிறார் என்பதை அறிந்துகொள்ளுவீர்.” என்றார் ஜீவா.
வின்சர் தியேட்டருக்கு விரைந்தேன். யாழ்ப்பாணத்தில் மிகவும் அழகான கட்டிடத்தில் அமைந்த அந்த திரைப்பட மாளிகை கலை. பண்பாட்டுக்கழக அரங்காக மாற்றம் பெற்றிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே விடுதலைப்புலிகளின் அந்த அமைப்பின் கலைநிகழ்ச்சிக்கான அரங்க நிர்மாணப்பணிகளை கவனித்துக்கொண்டு நின்ற புதுவை இரத்தினதுரையிடம், “ என்னப்பா… மீண்டும் மத்தியகிழக்கிற்கு போகவில்லையா?” என்று கேட்டேன்.
“ இந்த தியேட்டரை சுவீகரித்துவிட்டோம்.” என்று வெகு சாதாரணமாக அவர் சொன்னபோது 1980களில் நான் கண்ட அந்த வசீகரமான புன்னகைகொண்ட இனிய முகத்தை அவரிடம் காணமுடியாதிருந்தது.
“ என்னப்பா…இதெல்லாம்… என்னால் நம்பமுடியாதிருக்கிறதே…” என்றேன்.
“ நம்பித்தான் ஆகவேண்டும். நான் இப்போது இவர்களுடன் இணைந்துகொண்டேன்.” என்று சொன்னவர் அரங்க நிர்மாண பணிகளிலேயே கவனத்தை செலுத்தினார். ஒரு இயக்கத்தின் கடமையை நிறைவேற்றும் அர்ப்பணிப்புள்ள தொண்டனாக அவர் உருமாறியிருந்தார்.
எமது மாநாட்டிலும் கலந்துகொண்டு தேசிய இனப்பிரச்சினை தொடர்பான ஒரு தீர்மானத்தை திருத்தி நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியதுடன் இரவு நிகழ்ச்சியில் நடந்த கவியரங்கிலும் பங்கேற்றார்.
1983 கலவரத்தின் பின்னர் அரியாலையில் இடம்பெயர்ந்து சிலமாதங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் என்னுடன் இடம்பெயர்ந்த பெருந்தொகையான நூல்கள், இதழ்களை தங்கள் இயக்கத்தின் நூலகத்துக்கு தருமாறும் கேட்டிருந்தார். அவரது விருப்பத்தையும் நிறைவேற்றினேன்.
ஒருநாள் ஒரு ஹைஏஸ் வேனில் அவரது இயக்கத்தோழர் மலரவனுடன் வந்து குறிப்பிட்ட நூல்கள் நிரம்பியிருந்த பெட்டிகளை பெற்றுச்சென்றார்.
“அந்த வாகனத்தை யாரிடம் சுவீகரித்தீர்கள்?” எனக்கேட்டேன். அவரது பதில் வெறும் புன்முறுவலாகவே இருந்தது. அடுத்த நாள் நான் வடமராட்சிக்கு செல்லவிருந்தேன். அவரிடம் விடைபெறுவதற்கு யாழ்நகரில் அமைந்திருந்த அவர்களின் அலுவலகம் ஒன்றுக்குச்சென்றேன்.
அந்த அலுவலகமும் யாரிடமோ சுவீகரித்த அழகிய வீடுதான். அந்த வீட்டுக்கு அருகில் மற்றுமொரு அழகான வீடு இருந்தது. ஒரு பெண்மணி அந்த வீட்டு வளவில் கொடியில் துணிகாயப்போட்டுக்கொண்டிருந்தார்.
அந்த வீட்டைக்காண்பித்து, “ அதனை நாளை சுவீகரித்துவிடுவோம்” என்று மிகச்சாதாரணமாகவே சொன்னார்.
“ இப்படியே சென்றால் முழுயாழ்ப்பாணத்தையுமே சுவீகரித்துவிடுவீர்கள்…. அப்படித்தானே…?” என்றேன்.
நான் இறுதியாக சந்தித்த அந்த அலுவலகத்தில்தான் யாழ். தளபதி கிட்டுவுடன் எமது எழுத்தாளர் சங்கத்திற்கு ஒரு சந்திப்பு இருந்தது. எனினும் கிட்டு வரவில்லை. மலரவன் மாத்திரம் வந்தார். புதுவையுடன் அவர்களின் இயக்கம் சார்ந்த இரண்டு எழுத்தாளர்கள் அச்சந்திப்பில் இடம்பெற்றார்கள். ஒரு இயக்கப்போராளியின் இடுப்பில் ரிவோல்வர் இருந்தது. அச்சந்திப்பில் எங்கள் சங்கப்பிரதிநிதிகளில் ஓரிருவர் மாத்திரமே உரையாற்றினர். அவர்கள் தரப்பில் புதுவை மாத்திரமே அதிகம் பேசினார். மலரவன் மௌனமாகவே உரையாடலை அவதானித்தார். நான் அந்த ரிவோல்வரையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்தச்சந்திப்பில் எந்தவொரு உருப்படியான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பது எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால், அதன் பின்பு யார் யாரோ வெளிநாடுகளிலிருந்தெல்லாம் வந்து சமாதானத்தூதுவர்களாக அவர்களின் தலைமையுடன் அரசியல் பிரிவுடன் எல்லாம் உரையாடித்தான் இருக்கிறார்கள். ஊடகங்களில் ஆய்வுமேதைகள் பக்கம்பக்கமாக எழுதியுமிருக்கிறார்கள். அவர்களை ஆய்வுமேதைகள் என்பதா? ஊடக ஊகமேதைகள் என்பதா?
அந்தச்சந்திப்புகளும் ஏமாற்றத்துடன்தானே முடிவடைந்துள்ளன என்று திரும்பிப்பார்க்கின்றபோது… எமது சந்திப்பானது ரஜினிகாந்த் மொழியில் வெறும் ஜூஜூப்பிதான்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதியுத்தகாலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் புதுவை இரத்தினதுரையும் ஒருவர்.
காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலிலிருக்கும் எனது நண்பர் புதுவைக்காக காத்திருக்கின்றேன்.