“என்ன சொல்றீங்க? கொடுக்கற பணம் அஞ்சு வருஷத்துல அஞ்சு மடங்காகுமா? நம்பற மாதிரி இல்லையே! பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தற மாதிரி சொல்லுங்கண்ணா”
“சில விஷயங்கள நம்ப முடியாது தான். ஆனா இதுல நான் பணம் போட்டு இப்படி பணம் எடுத்திருக்கேனே தம்பி!”
“அண்ணே.. ரெண்டு வருஷமா என்னை உங்களுக்குத் தெரியும்.. இத்தன நாள் சொல்லாம இப்ப ஏன் சொல்றீங்க? என்ன வச்சு எதாவது டெஸ்டு கிஸ்டு பண்றீங்களா?”
“டெஸ்டெல்லாம் இல்லப்பா, நானே இதுல அவ்ளோ நம்பிக்கை இல்லாமத்தான் இருந்தேன். ஆனாலும் ட்ரை பண்ணலாமேனு அஞ்சு வருஷத்திக்கு முந்தி ரெண்டு லட்சம் கொடுத்தேன். அது ரெண்டு நாளைக்கு முன்னாடி பத்து லட்சமா திரும்பி என் வீட்டுக்கு வந்துச்சு.. அப்பத்தான் நம்பினேன்”
“அப்ப இது மாதிரி வருதுனா, நிச்சயமா நல்ல வழியா இருக்க வாய்ப்பில்ல.. இதுல ஏதோ பயங்கரமான கோல்மால் இருக்கு”
“சரி உனக்கு விருப்பம் இல்லேனா விடு.. எதுக்கு ஏதேதோ சொல்ற!”
“என் மனசுக்கு பட்டதக் கூட சொல்றது தப்பாண்ணே!?”
“எப்பவுமே நான் சொல்ற எல்லாத்தையும் நம்புவ… இப்ப இத ஏன் நம்ப மாட்டேங்கற..!?”
“நீங்க அரசியலுக்கு போகாத வரைக்கும் அப்படித்தான் நம்பினேன். எப்ப தேர்தல் அறிக்கைனு ஒன்ன வெளியிட்டு, அதுக்கு உல்டாவா எல்லாமே செய்ய ஆரம்பிச்சிங்களோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்”
“என்னனு?”
“அஞ்சு வருஷத்துல இதப்பண்ணுவேன், அதப்பண்ணுவேனு யாரு என்ன சொன்னாலும் நம்பக் கூடாதுனு”
“!???”
– அ.வேளாங்கண்ணி
நன்றி : சிறுகதைகள்.காம்