நான் வாசலில் நாளிதழ் படிக்கும் தருணம். தொலைபேசி அழைக்க அதைக் காதில் வைத்து பேசிய இரஞ்சினி இரண்டொரு நிமிடத்தில் தொலைபேசியை வைத்துவிட்டு என்னருகே வந்தாள்.
அவள் கண்களில் கண்ணீர் அரும்பி இருந்தது.
“உங்க அம்மா தான் பேசுனாங்க.. அப்பா..”
“கிளம்பலாம், துணிய எடுத்து வை” என்றேன்
பேருந்து காற்று முடிகளை படபடவென அடித்துச் சென்றது.மழையின் தடயங்களாக காற்றில் ஈரப்பதம் தொற்றிக்கொண்டிருந்தது.குளிமையான மாலைப் பொழுது.
இரஞ்சனி என் தோளில் தலைசாய படுத்திருந்தாள். அவள் கூந்தல் என் முகத்தை வருடிக் கொண்டிருந்தது
அப்பாவை நினைக்கையில் அழுகையும், கோபமும் ஒருங்கே வந்தது.
அப்போது கல்லூரி இறுதி ஆண்டு.நானும் இரஞ்சினியும் ஒருவரையொருவர் விரும்பினோம்.படிப்பு முடிந்தது.அவள் வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள்.
நான் “கொஞ்சம் பொறுத்துக்கோ இரஞ்சனி. அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டு, உன் வீட்டுக்கு பொண்ணு கேட்க அழைச்சுட்டு வரேன்”
அப்பாவிடம் கேட்டதுக்கு ஒரே வார்த்தை தான் சொன்னார்.
” அவ மருமகளா இந்த வீட்டுக்கு வந்தா, என் போனத்துகிட்ட தான் ஆசிர்வாதம் வாங்கணும்”
அம்மா “அந்த மனுஷன் சொன்னா செய்யுற ஆளு தான்டா. நமக்கு எதுக்கு இதெல்லாம் விட்டுடு”
என்னால் அப்போது ஒரு நிலையான முடிவை யோசிக்க முடியாமல் திணறினேன்.இதற்கிடையில் இரஞ்சினியின் அழைப்புகளையும் நிராகரிக்க தொடங்கினேன்.அன்று காலை செல்வி என்னை உலுக்கி எழுப்பி காதோரம் இரகசியம் போல சொன்னாள்.
நான் அவசரமாக எழுந்து சட்டை அணிந்து கொண்டு கிளம்பினேன். இரஞ்சினி தெருமுனைக்கு வந்து எனக்காக காத்திருந்தாள்.என்னை சந்தித்த முதல் கணமே என் கன்னம் சிவக்க அறைந்தாள்.பின் அழுதவாறே அவள் தலையை என் மார்பில் புதைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.
அப்போது தான் பார்த்தேன். அவள் கைகளில் சூட்கேஸ். நான் திணறினேன்.
“ஏய் இரஞ்சு என்ன ஆச்சு”
“நாம சென்னைக்கு போயிடலாம்.என் ப்ரண்ட்ஸ் அங்கே இருக்காங்க.என்னோட நகை கொஞ்சம் எடுத்து வந்துருக்கேன்.நாம இப்பவே கிளம்பலாம்” அவள் என் கையை பிடித்து இழுத்தாள்.
நான் ஆறுதலாக அவளை பார்க்க, என் தாமதமும் அக்கறையின்மையும் அவளுக்கு கோபத்தை அதிகரிக்க செய்திருக்கும் போல
“என்ன யோசிக்கற”
“இல்ல எப்படி எல்லாரையும் விட்டுட்டு வர்றது. தங்கச்சி.. அவளுக்கு நாளைக்கு ஒரு நல்லது கெட்டதுனா இந்த ஊரு..”
“நிறுத்து. இந்த குடும்ப அக்கறைய பேச இதெல்லாம் நேரமில்ல. எனக்கும் குடும்பம் இருக்கு. இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க. நாளைக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணிக்கிட்டு நாம கஷ்டப்படும் போது எல்லாரும் ஆறுதலுக்கு மட்டும் தான் வருவாங்க”
அவள் என்னை யோசிக்க கூட விடவில்லை. ஒருவழியாக நான் அவளுடன் செல்ல முடிவெடுத்தேன்.அப்போது கடைக்கு பொருள் வாங்க செல்வி வந்தாள்
“அண்ணா கிளம்பறியா”
மனம் பாரமாகியது
“பத்திரமா இருந்துக்கோ.அம்மா அப்பாவ பாத்துக்கோ.இனி நான் இங்க வரதுக்கு வாய்ப்பிருக்குமானு தெரியல.என்ன ஆனாலும் எனக்கு போன் பண்ணு”
அவளுக்கு விடை கொடுத்துவிட்டு இருவரும் கிளம்பி சென்னைக்கு வந்து அவள் நண்பர்கள் உதவியுடன் கல்யாணம் செய்து கொண்டோம். அவர்கள் மூலமாக ஒரு வாடகை வீட்டை எடுத்து கொண்டு வாழ ஆரம்பித்தோம்.
எங்கள் இரண்டு வீட்டாரும் எங்களை அதன் பின் தலைமுழுகி விட்டனர்.இருவருக்கும் வேலை கிடைத்து, போன மாதம் தான் புதியதாக ஒரு வீட்டை வாங்கினோம்.கிரகப்பிரவேசத்திற்கு எங்கள் இருவர் வீட்டுக்கும் அழைப்பு விடுத்தோம்.
இரஞ்சனி வீட்டில் அவள் பெயரை கேட்டதுமே “சாரி ராங் நம்பர்” என அழைப்பை துண்டித்துவிட, என் வீட்டுக்கு போன் செய்தபோது தான் என் அப்பா உடல்நிலை மோசமாகி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அம்மா என்னிடம் பேசவே இல்லை
தங்கச்சி என்னை ஊருக்கு வருமாறு அழைத்தாள். ஏனோ என்னால் அப்போது அதை யோசிக்க முடியவில்லை
பேருந்து நிறுத்தம் வர இருவரும் இறங்கினோம்.மார்கெட்டில் மாலை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றோம்
அப்பாவின் உடல் வெளியே சாலையிலே வைக்கப்பட்டிருந்தது.வெயில் படாமலிருக்க பந்தல் போடப்பட்டிருந்தது.நாங்கள் வருவதை பார்த்த ஊர் மக்கள் அவர்களுக்குள்ளாகவே பேச, ஒரு சிலர் வெளிப்படையாக திட்டுவது நன்றாகவே காதில் விழுந்தது.
அப்பாவின் உடலை பார்த்ததும் இரஞ்சினி அழத் தொடங்கினாள்.நான் அவர் உடல் மீது மாலையை அணிவித்து அமைதியாக அவரை பார்த்தபடியே இருந்தேன்.அப்பா விரும்பாத மீசையும் தாடியும் முகத்தை நிரப்பி வளர்ந்திருந்தது.நான் இரஞ்சனியை சமாதானம் படுத்தும் பொருட்டு அவள் தோளில் கை வைத்தேன்.அவள் என்னை பார்த்து இன்னும் சத்தமாக அழுதாள்
அம்மா எதையும் காணாதது போல ஒரு ஓரத்தில் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.வறண்ட அவள் முகத்தில் ஈரமான கண்கள்.
செல்வி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.அவள் இப்போது பருவ வயது அடைந்திருந்தாள்.நான் இரஞ்சினியை அழைத்துக் கொண்டு மரப்பெஞ்சு ஒன்றில் சென்றமர்ந்தேன்.பெரியப்பா எல்லா வேலைகளையும் செய்தபடியே இருந்தார்.
மேள தாளங்கள் வான் பிளந்தன.குடித்து போட்ட ரஸ்னா, வாட்டர் பாக்கெட் கவர்கள் அங்கங்கே சிதறி கிடந்தன.சுவரோரம் பிராந்தி பாட்டில்கள் உருண்டு கொண்டிருந்தன.
சடங்குகள் நடந்தபடி இருந்தன.இப்போது அங்கிருந்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வி ஒன்று எழுந்தது.கொள்ளி யார் வைக்க போறது.அம்மா வாயைப் பொத்தி அழுதாள்.
பெரியப்பா “என் மகன் தான் வைப்பான்”
ஊர் ஜனங்கள் “பெத்த பையன் வந்து இருக்காரே”
என் தம்பி சொன்னது என்னனா “நாளைக்கு என் சாவுக்கு அந்த ஓடிப்போன கழுத வந்தால்கூட உன் மவன் தான் எனக்கு கொள்ளி வைக்கணும். அப்பதான் என்னோட கட்ட வேகும்”
பெரியப்பா திரும்பி என்னை பார்த்தார்
“அப்பாவோட விருப்பம் அதானா அப்படியே ஆகட்டும்”
அம்மா தலைகவிழ்ந்து அழுதாள்.அப்பா இறந்தும் என்னை பழி வாங்கிவிட்டார்
நாங்கள் இறுதி காரியம் முடிந்து வீடு திரும்ப, அம்மா வாசலில் வைத்து இரஞ்சினியை கத்தியபடி திட்டிக் கொண்டிருந்தாள்
செல்வி அம்மாவை கைப்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள்.
நான் இரஞ்சினியிடம் “என்ன ஆச்சு” கேட்க
அவள் அழுதபடியே இருந்தாள்
அம்மா “நீ தான்டி எல்லாத்துக்கும் காரணம். நீ நல்லாவே இருக்கமாட்ட. நாசமா …”
“அம்மா” நான் கத்திவிட்டேன்
அவள் அதிர்ந்து வாயெழாது உள்ளே சென்றுவிட்டாள்
நான் இரஞ்சினியை அழைத்துக் கொண்டு பின் வீட்டிற்கு வந்துவிட்டேன்
இரவு செல்வி போன் செய்தாள்
“சொல்லு செல்வி”
“அண்ணா, அம்மா உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க”
அம்மா போனை காதில் வைத்துக் கொண்டு விசும்பி அழ ஆரம்பித்தாள்
ஏனோ எனக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது
“நீ அப்படி பேசியிருக்க கூடாதுமா. என்ன மாதிரி அவளும் தன்னோட எல்லா
சொந்தத்தையும் உதறிட்டு வந்திருக்கா, என்ன மட்டுமே நம்பி”
“கோபத்தில கண்ணு, மண்ணு தெரியாம கத்திட்டன்டா. ஆனா நீங்க போனத்துக்கப்பறம், வார்த்தை நெஞ்சிலேயே கிடந்து மனச அரிச்சுடுச்சு”
“சரி விடு”
“இல்லடா, நான் ஒரு வாட்டி அவகிட்ட பேசணும்.நீ போன கொஞ்சம் அவகிட்ட கொடு”
நான் இரஞ்சினியிடம் போன் கொடுக்க
“யாரு?”
“பேசு” என்றேன்
அவள் போனை காதில் வைத்து எதிர்முனை குரலை கேட்டவுடன் அழ ஆரம்பித்தாள்.
பின் இருவரும் சமாதானமாக பேசத் தொடங்கினர்.
அன்று இரவு நானும் இரஞ்சினியும் தூங்காமல் விழித்தபடியே இருந்தோம்
திடீரென்று இரஞ்சினி கேட்டாள்
“ராம் இந்த வீட்ட வித்திடலாமா”
“வித்துட்டு”
“உங்க ஊருக்கு போயிடலாம், உங்க அம்மாக்கு துணையா”
—-
“என்ன பேச்சையே காணோம்”
“ஒருநாள் போனதேக்கே நல்லதா வரவேற்பு கிடைச்சுது”
“திட்டு வாங்கன நானே மறந்துட்டேன், நீ எதுக்கு அதையே நினைச்சுட்டிருக்க”
“எனக்கு மறக்கற சக்திய ஆண்டவன் கம்மியா கொடுத்துட்டான்”
“விளையாடாத ராம் நான் சீரியஸா கேக்கறேன்”
“இப்ப என்ன திடீர்னு… அப்பா இறந்துட்டாரே அதுக்காக யோசிக்கறயா”
“அதுமட்டுமில்ல நம்ம குழந்தையோட எதிர்கால வாழ்க்கைய யோசிச்சேன்”
“இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம அதைப் பத்தி யோசிக்கற.. ஏய்..இரஞ்சு.. இப்ப என்ன சொன்ன”
“நான் கேட்டதுக்கு முதல நீ ஆமா சொல்லு, அப்பதான் சொல்லுவேன்”
“சரி போலாம். நீ சொல்லு”
“ம்ஹூம். இப்படி அரைகுறையா சொல்லாத முழு மனசோட சொல்லு”
“சரி போலாம் டி, முதல நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லு”
உனக்கு கூடிய சீக்கிரம் இந்த அஸ்பண்ட் பொசிஷன் ல இருந்து ப்ரோமோஷன் கொடுக்கப்போறேன் போதுமா
என்னை மீறிய ஒரு துக்கமும், ஆனந்தமும் கண்களில் கண்ணீராக
“உங்க அப்பா தான் நமக்கு திரும்ப மகனா பிறக்கப்போறாரு ராம்”
“ஆமா, அவரோட கோபம் இன்னும் அடங்கல போல. எனக்கு புள்ளையா பொறந்து வேற தொல்லை கொடுக்கப் போறாரு” இருவரும் சிரித்தோம்.
விடிந்ததும் இந்த வீட்டை விற்பதற்கான வேலையில் ஆயத்தமாக வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.என் அடுத்த சந்ததி, உறவுகளை பிரிந்து, தனியாக வாழ்வதற்கு ஒருபோதும் நான் காரணமாக இருக்கக்கூடாது.
சுவரில் பல்லி சத்தமிட்டது. நான் உறங்கத் தொடங்கினேன்.
முற்றும்..
– S.Ra
நன்றி : எழுத்து.காம்