செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மாமருந்து | சிறுகதை | ஐ.கிருத்திகா

மாமருந்து | சிறுகதை | ஐ.கிருத்திகா

18 minutes read

வழக்கம்போல  அந்த  மஞ்சள்நிறக்குருவி  கிலுவமரக்கிளையில்  வந்தமர்ந்து  கண்கள்  மினுங்க  பார்த்தது  ஜன்னல்  வழியே  தெரிந்தது. சற்றுநேரம்  அமர்ந்து  அப்படியும், இப்படியுமாய்  தலையசைத்துப்  பார்த்த   குருவி  ஏதோ  ஞாபகம்  வந்ததுபோல்  விருட்டென  பறந்து  போனது.

அறையின்  வலது  மூலையில்  கிடந்த  கட்டிலில்  படுக்கை  விரிப்பு  நுனிகூட  கசங்காது  பெட்டி  போட்டது  போல்  அவ்வளவு  நறுவிசாக விரிக்கப்பட்டிருந்தது.

ஸ்விட்ச்  போர்டின்  கீழ்ப்பகுதியில்  ஓரங்குல  அகலத்துக்குக்  கருமை  படர்ந்திருந்தது. இளமஞ்சள்  வர்ணமடிக்கப்பட்ட  சுவரில்  ஆங்காங்கே  சின்ன, சின்ன  அழுக்குத்  திட்டுகள், எல்லாமே  உத்திராபதியின்  கைங்கர்யம்தான்.

அடிக்கடி  மரத்துப்  போகும்  கால்களின்  மீதான  நம்பிக்கையை  அவர்  சுவர்வசம்  ஒப்படைத்திருந்ததன்  விளைவுதான்  அந்த  கருந்திட்டுகள். அவர்  இருக்கும்போது  மூக்குப்பொடி  வாசம்  அறையை  நிறைத்திருக்கும்.

ஒரு சிட்டிகை  மூக்குப்பொடியை   வலது  கையால்  எடுத்து   தலையை  உயர்த்தி  மூக்கில்  வைத்து  உறிஞ்சுவார். அடுத்த  நிமிடமே  சரமாரியாக  தும்முவார்.

” நாப்பது  வயசுல  ஆரம்பிச்ச  பழக்கம். விடமாட்டேங்குது. போவட்டும், மனுசங்கதான்  கடைசிவரைக்கும்  வரமாட்டேங்குறாங்க. இதாவது  இருக்கட்டுமே ” என்று  அதற்கு  ஒரு  நியாயம்  கற்பித்க்து  கொள்வார்.

சங்கரன்  பெருமூச்சு  விட்டார். ஹேங்கரில்  உத்திராபதியின்  வெள்ளை  சட்டை  காலர்  அழுக்கோடு  தொங்கிக்கொண்டிருந்தது.

” வெள்ளை  உடுப்பு  உடுத்தினா  பார்க்கறவங்களுக்கு  கண்ணியமா  தோணும். மனசுக்குள்ள  கண்ணியமானவன்தான். இருந்தாலும்  அதை  எப்படி  படம்  பிடிச்சு  காட்டறது. அதுக்குதான்  இந்த  வெள்ளையுடுப்பு….” என்பார்  உத்திராபதி.

ஏனோ  அவர்  மேல்  சங்கரனுக்கு  அவ்வளவாக  பிடிப்பில்லை. இருவருக்கும்  பத்துவயது  வித்தியாசம். அதுதான்  காரணமென்று  சொல்லமுடியாது.

அரசியலும், ஆன்மீகமும்  பேசிப்பேசி  சலித்தாயிற்று. உடம்பில்  தெம்பிருந்தபோது,  மனதில்  தைரியமிருந்தபோது  எல்லாவற்றையும்  பேசியாயிற்று. இப்போதெல்லாம்  பேச்சை  விடுத்து  வாழ்வதிலேயே  மனம்  நாட்டம்  கொள்கிறது.

தப்பித்தவறி  யாராவது, எதையாவது  பேசினால்  புளித்தமாவு  தோசை  சாப்பிட்டதுபோல  ஒவ்வாமை  உண்டாகிறது. அதனாலும்  சங்கரன், உத்திராபதியிடம்  பேச்சைத்  தவிர்த்தார்.

” மாசம்  எட்டாயிரம்  ரூபா  பணம்  கட்டணும். சாப்பாடு, காபியெல்லாம்  அருமையா  இருக்கும். அமாவாசை,  கார்த்திகைக்கு  வடை, பாயசத்தோட  சாப்பாடு. ரூமுக்கு  ரெண்டுபேர்வீதம்  தங்கிக்கணும். உள்ளயே  பாத்ரூம், கக்கூஸ்  இருக்கு. உடம்புக்கு  முடியலேன்னா  சாப்பாட்ட  கையில  கொண்டுவந்து  குடுத்துடுவாங்களாம். பத்திய  சாப்பாடும்  செஞ்சு  தருவாங்களாம். ஊருக்கு  ஒதுக்குப்புறமான  இடத்துல  இருக்கறதுனால  சத்தமில்லாம  அமைதியா  இருக்கும். சுத்தி  ஏகப்பட்ட  மரங்கள்  இருக்கு. வாக்கிங்  போக  தோதான  இடம்………….”

மகன்  அடுக்கிக்கொண்டே  போனபோது  சங்கரன்  எதுவும்  பேசவில்லை.

வேண்டாத  பழைய  பொருட்களை  வீட்டுக்கு  வெளியில்  போடுவது  மனித  இயல்புதானே. அதை  குறையென்று  சொல்லமுடியுமா.

ஆனாலும்  வேண்டாத  பொருளாகிவிட்டோமே  என்ற  கழிவிரக்கத்தில்  சங்கரன்  ஒடுங்கித்தான்  போனார். ஓரோர்  சமயம், போய்  சமுத்திரத்தில்  விழுந்துவிடலாமா  என்றுகூட  தோன்றும்.

வயதான  காலத்தில்  அப்படி  செய்து  ஏளனத்துக்கு  ஆளாக  பயந்து  உணர்வுகளைக்  கட்டுப்படுத்தி  கொண்டார். செத்தபிறகும்  தன்  பேரைக்  காப்பாற்றிக்கொள்ள  இந்த  மனுஷ  ஜென்மங்கள்தான்  என்னமாய்  பாடுபடுகின்றன  என்று  மனசு  எக்காளமிட்டு  சிரித்தது.

” இங்கிருக்கறதவிட  ஹோம்ல  நீ  நிம்மதியா, சந்தோஷமா  இருக்கலாம். தைரியமா  போ.  நான்  அடிக்கடி  வரப்போக  இருக்கேன்” என்று  பால்யகால  நண்பன்  திரவியம்  ஆறுதல்  சொல்லி  அனுப்பிவைத்தார்.

இல்லத்துக்கு  வந்து  ஓராண்டு  முடிந்துவிட்டது. வசதிக்கு  ஒரு  குறைவுமில்லை. மகன்  மாதம்  தவறாமல்  பணம்  கட்டிவிடுவான். கைச்செலவுக்கு  அவரின்  பென்சன்  தொகை  உதவிற்று.

ஆரம்பத்தில்  மாதம்  ஒருதடவை  வந்து  பார்த்த  மகன்  வேலையைக்  காரணம்காட்டி  இரண்டுமாதத்துக்கு  ஒருமுறை  வர  ஆரம்பித்தான். மகனிடம்  பேச  எதுவுமிருப்பதாக  சங்கரனுக்குத்  தோன்றாது. பேசாது  அமர்ந்திருப்பார்.

அவனும்  தானாக  நாலைந்து  கேள்விகள்  கேட்டுவிட்டு  புறப்பட்டு  போய்விடுவான். கடைசியாக  நான்கு  மாதங்களுக்குமுன்  வந்தது.

” நீ  பேசவே  மாட்டேங்கறியாம். அவனுக்கு  என்னவோ  போலிருக்காம். அதான்  கொஞ்ச  இடைவெளி  விட்டு  போய்ப்பார்க்கலாம்னு  இருக்கேன்னு  சொன்னான்.”

பார்க்க  வந்த  திரவியம்  சொன்னார். சங்கரன்  மகனைவிட  பேரனை  மிகவும்  எதிர்பார்த்தார். முதல்தடவை  பேரனுக்காக  பிஸ்கெட்  பாக்கெட்டெல்லாம்  வாங்கிவைத்திருந்தார். மகன்  தனியாளாய்  வந்தது  பெரும்  ஏமாற்றத்தைத்  தந்தது.

” அவனுக்கு  பரீட்சை  இருக்குப்பா. அதான்  அழைச்சிட்டு  வரல” என்று  மகன்  தரைப்பார்த்து  சொன்னான். பேரன்  முகம்  கண்ணுக்குள்ளேயே  இருந்து  அவரை  வாட்டி  வதைத்தது.

” நீ  ஏன்  தாத்தா  ஹோமுக்கு  போற….?” என்று  கிளம்பும்போது  அவன்  கேட்டான். சங்கரனுக்கு  என்ன  சொல்வதென்று  தெரியவில்லை. விரும்பிப்போகவில்லை, வலுக்கட்டாயமாக  அனுப்படுகிறேன்  என்று  சொல்லமுடியுமா…………..

‘உனக்கு  விருப்பமா, நீ  போறியா, இருக்கியா  என்றெல்லாம்  யார்  கேட்டார்கள். எல்லோருக்கும்  நியூக்ளியர்  பேமலியாக  வாழத்தான்  பிடித்திருக்கிறது. கணவன், மனைவி, குழந்தைகள்  மட்டுமே  அடங்கிய  குடும்பத்தின்  கட்டமைப்புக்குள்  தாய், தந்தை  உறவு  அந்நியப்பட்டு  போனதுகூட  மனிதமனங்களின்  விகாரம்தானே.’

சங்கரன்  பெருமூச்சு  விட்டார். அந்த  ஒருவருடத்தில்  கொஞ்சம், கொஞ்சமாக  இயந்திரமாக  வாழப்பழகியிருந்தார். கடந்த  சில  நாட்களாகத்தான்  மனசு,  கையிலிருந்ததை  தொலைத்துவிட்டு  தேடியலையும்  குழந்தையைப்போல  தவியாய்  தவிக்கிறது.

” தனிமை  நம்மள  கன்னாபின்னான்னு  யோசிக்கவைக்கும். அதனால   எப்பவும்  ஆக்குபைடா  இருங்க. அதாவது  கலகலப்பா  பேசிக்கிட்டோ, பேச  ஆளில்லாத  நேரத்துல  புத்தகவாசிப்புல  ஈடுபட்டோ தனிமைய  துரத்துங்க. வாழ்க்கை  கசக்காது” என்று  ஹோமுக்கு  வந்திருந்த  அந்த  பேச்சாளர்  சொன்னார். சங்கரனுக்கு  அது  ஞாபகத்துக்கு  வந்தது.

உத்திராபதி  அறையில்  இருந்தவரை  அவ்வபோது  பேசுவார். நன்றாக  பேசக்கூடியவர்தான். சங்கரனுடைய  அமைதிகண்டு  ஒதுங்கிப்போனார். அக்கம்பக்கத்து  அறைகளில்  இருப்பவர்கள்  வரப்போக  இருப்பார்கள். அவர்களுடன்  உத்திராபதி  சந்தோஷமாக  அளவளாவுவார். பேச்சுக்கு  ஆள்  கிடைக்காத  நேரங்களில்  தேவாரமோ, திருவாசகமோ  வாசிப்பார்.

” மனசுக்குள்ள  படிக்க  வரமாட்டேங்குது. கொஞ்சம்  சத்தமா  படிச்சிக்கிடவா….உங்களுக்கு  ஒண்ணும்  தொந்தரவு  இல்லையே…?” என்று  ஒருமுறை  அவர்  கேட்டபோது, சங்கரன்  இசைவாய்  தலையசைத்தார்.

அதிலிருந்து  குட்டிப்  புத்தகத்தை  வைத்து  கொஞ்சம்  சத்தமாக  படிக்கத்  தொடங்கினார். சங்கரனும்   அதெல்லாம்   வாசித்தவர்தான். மனைவி  இருந்தவரை   பூஜை, புனஸ்காரம்  என்று  வீடு  அல்லோலகல்லோல  படும். அவள்  போனபிறகு  எல்லாம்  அடியோடு  மாறிப்போய்விட்டது.

போனவள், இட்டு  நிரப்ப  முடியாத  சூன்யத்துக்குள்  அவரை  தள்ளிவிட்டு  சென்றுவிட்டாள். உத்திராபதி  தேவாரம்  வாசிக்கும்போது  சங்கரனின்  மனசும்  சேர்ந்து  சொல்லும். அதை  தவிர்க்க  பார்த்தும்  அவரால்  இயலவில்லை.

குழந்தையிடம்  ஒரு  கேள்வி  கேட்டால்  விடை  தெரிந்த  இன்னொரு  குழந்தை  அடக்கமுடியாமல்  சேர்ந்து  சொல்லுமே. அது  போலத்தான்  மனசும்  என்பது  போகபோகத்தான்  சங்கரனுக்குப்  புரிந்தது.

கதவு  தட்டப்பட்டது. சங்கரன்  எழுந்துபோய்  கதவு  திறந்து  கீழே  ட்ரேயில்  வைக்கப்பட்டிருந்த  காபி, பிஸ்கெட்டை  எடுத்துக்  கொண்டார். காலை, மாலை  இருவேளையும்  கதவு  தட்டி  காபி  வைத்துவிட்டுப்  போவார்கள். மாலை  மட்டும்  இரண்டு  பிஸ்கெட்டுகள்  தொட்டு  சாப்பிட  கொடுப்பார்கள்.

காபி  சுவையாக  இருந்தது. பில்டர்  காபி. உத்திராபதி  ரசித்து  குடிப்பார்.

” காபித்தூள்ல  கொதிக்க, கொதிக்க  தண்ணி  ஊத்தி  திக்கா  டிகாஷன்  இறக்கி, அளவா  சக்கரை  போட்டு  காபி  கலந்தா  தேவாமிர்தமா  இருக்கும். நீ  போடற  காபி  அப்படித்தாம்மா  இருக்கு ” என்று  சமையல்கார  அம்மாவை  ஒருமுறை  பாராட்டிக்கொண்டிருந்தார்.

அவரின்  இணக்கம் சங்கரனுக்கு  ஆச்சர்யமாக  இருந்தது.

சங்கரன்  பிஸ்கெட்டைத்  தாளில்  மடித்து  வைத்துவிட்டு  காபியைக்  குடித்தார். அறையைப்  பெருக்க  வரும்  பெண்ணிடம்  பிஸ்கெட்டைத்  தந்தால்  குழந்தைக்குக்  கொடுப்பாள். அதுவும்  உத்திராபதி  ஏற்படுத்திய  பழக்கம்தான்.

” வயசான  எனக்கு  எதுக்கு  பிஸ்கெட். உம்மககிட்ட  குடு. சாப்பிடட்டும்” என்று  தினமும்  கொடுப்பார். அந்தப்  பெண்மணியும்  சந்தோஷமாக  வாங்கிக்கொள்வாள்.

தீபாவளி, பொங்கல்  சமயங்களில்  ஹோமில்  இருப்பவர்களுக்குப்  போட்டிகள்  நடத்தப்படும். தம்பதியாக  இருப்பவர்கள்  சந்தோஷமாக  கலந்து  கொள்வார்கள்.

மற்றவர்கள்  பேருக்குக்  கலந்து  கொள்வார்கள். எல்லாம்  உட்கார்ந்தபடியே  விளையாடும்  விளையாட்டுகள்தான். அப்போதெல்லாம்  உத்திராபதி  மிகவும்  குதூகலமாக  இருப்பார்.

மைக்கைப்  பிடித்துக்கொண்டு  வயது  மறந்து  உற்சாகமாக  நிகழ்ச்சியை  ஒருங்கிணைப்பார். சங்கரனுக்குத்  தெரிந்து  அவரைப்பார்க்க  ஒருவரும்  வந்ததில்லை.

வார  விடுமுறை  நாட்களில்  ஹோமின்  எதிர்ப்புறமிருக்கும்  மரங்களடர்ந்த  மைதானம்  உறவுகளால்  நிரம்பியிருக்கும். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, மனசாட்சிக்கு  பயந்தோ, இல்லையோ  பெற்றவர்களைப்  பார்க்க  பிள்ளைகள்  வருவதும், போவதுமாயிருப்பர்.

அந்த  நேரத்தில்  உத்திராபதி  அறையிலமர்ந்து  தேவாரமோ, திருவாசகமோ  வாசித்துக்  கொண்டிருப்பார். உறவுகளை  எதிர்பார்த்து  ஏமாந்த  வேதனையின்  நிழல்  அவர்  முகத்தில்  படிந்திருந்ததாக  சங்கரனுக்கு  ஞாபகமில்லை.

‘ ஒருவேளை  வாய்விட்டு  பேசியிருந்தால்  அவரும்  மனம்விட்டு  பேசியிருப்பாரோ  என்னவோ….’

திடுமென்று  அந்த  எண்ணம்  எழுந்தது.

” உங்களுக்கு  முன்னாடி  என்  வயசுக்காரர்  ஒருத்தர்  இங்கே  இருந்தார். ரொம்ப  நல்லாப்  பேசுவார். என்ன  நினைச்சானோ, புள்ள  வந்து  கூட்டிட்டுப்  போயிட்டான்” என்று  உத்திராபதி  ஒருமுறை  சொன்னது  ஞாபகத்துக்கு  வந்துது.

திரவியம்  வந்திருந்தார். மனிதர், மனைவியுடன்  காசிக்கு  சென்றுவிட்டு  வந்திருந்தார். இரண்டு  பெண்களைப்  பெற்றவர். இருவருமே  வெளிநாட்டில். உடன்  வந்து  தங்கும்படி  வற்புறுத்துகிறார்கள். திரவியம்  பிடிகொடுக்காமல்  நழுவுகிறார்.

” அதெல்லாம்  நமக்கு  சரிப்படாதுப்பா. போய்  கொஞ்சநாள்  இருக்கலாம். பேரப்புள்ளைங்களோட  சந்தோஷமா ஒருமாசமோ, ரெண்டுமாசமோ  இருந்துட்டு  வரலாம். அதுக்குமேல  அங்கயே  இருக்கறது  தப்பு. ஒண்ணு, அந்த  ஊர்  நமக்கு  அவ்வளவா  செட்டாவாது. ரெண்டாவது, கூடவே  இருந்தா  ஒரு  கட்டத்துல  தொந்தரவுன்னு  தோணும். அதனால  விலகி  இருக்கறதுதான்  நல்லது. எப்பவும்  நம்மஊர்  தான்  நமக்கு  சாசுவதம். அப்படியே  எங்களுக்குத்  தனியா  இருக்க  பயமாயிருந்தா  ஹோமுக்கு  வந்துடறோம். இங்க  இருக்க  எல்லாரும்  நிம்மதியாத்தானே  இருக்காங்க” என்று  ஒருமுறை  கூறிய  திரவியம்  சங்கரனை, சரிதானே  என்பதுபோல்  பார்த்தார். அவ

” மனசுல  எதையும்  வச்சிக்காம  கலகலப்பா  இருப்பா. இங்க  இருக்கறவங்கள  உறவுக்காரங்களா  நினைச்சிக்க. நமக்கெல்லாம்  வயசாயிடுச்சு. இன்னும்  எத்தினிநாள்  இருக்கப்போறோம்  சொல்லு. இருக்கவரைக்கும்  சந்தோஷமா  இருப்போமே” என்று  நண்பனை  அவ்வபோது  உற்சாகமூட்டுவார். அவர்  வரப்போக  இருப்பது  சங்கரனுக்கு  மிகப்பெரிய  ஆறுதல்.

திரவியம்  தீர்த்தம், விபூதிப்  பிரசாதத்தை  சங்கரனிடம்  தந்தார்.

” ரொம்ப  திருப்தியா  காசிக்கு  போயிட்டு  வந்தோம்ப்பா. நாலுநாளும்  கங்கையில  குளிச்சோம், மூதாதையர்களுக்கு  திதி  குடுத்தோம். விசுவநாதரை  கண்குளிர  ஏகப்பட்ட  தடவைகள்  தரிசிச்சோம். என்   மனைவியோட  ரொம்பநாள்  ஆசை  நிறைவேறிடுச்சு” என்ற  திரவியம்,

” தீர்த்தத்தை  உன்கூட  இருக்க  பெரியவருக்கு குடு…” என்றார்.

” அவர்  ரூம்ல  இல்லப்பா…”

” ஏம்ப்பா….ஊருக்கு  ஏதும்  போயிருக்காரா….?”

” ரெண்டுநாளா  மூச்சுவிட  சிரமமாயிருக்குன்னு  சொல்லிக்கிட்டிருந்தார். நாலுநாளைக்கு  முன்னாடி  தஞ்சாவூர்ல  காட்டிட்டு  வர்றேன்னு  கிளம்பிப்போனார். ஆளைக்காணும்.”

” அடடா…..தனியாவா  போனார்…?”

” ஆமாம்ப்பா. தனியாத்தான்  போனார்” என்ற  சங்கரன்  குரலில்  குற்றவுணர்ச்சி  தெரிந்தது. இருவரும்  ஹோம்  நிர்வாகியிடம்  விசாரித்ததில்  மருத்துவமனையில் இருப்பதாக  தகவல்  கிடைத்தது.

” போய்  பார்த்துட்டு  வந்தா  தேவலாம்னு  தோணுது. நீயும்  வர்றியா…?” என்று  சங்கரன்  கேட்க, திரவியம்  மறுக்கவில்லை.

இருவரும்  மறுநாள்  பாசஞ்சர்  ட்ரெயினில்  புறப்பட்டுப்போனார்கள். மருத்துவமனை  நகரின்  மையத்தில்  அமைந்திருந்தது. விசாரித்துக்கொண்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த

அறைக்குப்  போனபோது  ஒரேயொரு  இளைஞன்  மட்டுமே  உடனிருந்தான். உத்திராபதி  சோர்வாய்  படுக்கையில்  சாய்ந்திருந்தார். கையில்  குளுக்கோஸ்  ஏறிக்கொண்டிருக்க, முகத்தில்  ஆக்சிஜன்   மாஸ்க்  பொருத்தப்பட்டிருந்தது.

சங்கரனையும், திரவியத்தையும்  பார்த்தவர்  சோர்வையும்  மீறி  புன்னகைத்தார். வாங்கி  வந்திருந்த  பழங்களை  மேசையில்  வைத்துவிட்டு  சங்கரன்  அருகில்  செல்ல,  அவர்  கையை  நெகிழ்ச்சியுடன்  பிடித்துக்கொண்டவர்  பல்ஸ்  பார்க்க  வந்த  நர்ஸிடம்  மாஸ்க்கை  எடுக்க  சொல்லி  வற்புறுத்தினார்.

” அஞ்சு  நிமிஷம்தான்  தாத்தா. அதுக்குமேல  அனுமதிக்கமாட்டேன்”  என்று  நர்ஸ்  உறுதியாக  கூறிவிட்டு  செல்ல  மெதுவாக  தலையசைத்தவர்,

” என்னைப் பார்க்கறதுக்காக  இவ்ளோதூரம்  வந்திருக்கீங்களே. உங்க  ரெண்டுபேருக்கும்  ரொம்ப  நன்றி…” என்று  கையெடுத்துக்  கும்பிட்டார்.

” ஐயய்யோ….நீங்க  பெரியவங்க, இப்படியெல்லாம்  பேசக்கூடாது.”

திரவியம்  பதறி  அவர்  கைகளைப்  பற்றிக்கொண்டார்.

” இருக்கட்டும். இந்தமாதிரி  நேரத்துல  ஒருத்தருக்கொருத்தர்  அனுசரணையா  இருக்கறதுதான்  நம்மமாதிரி  ஆளுங்களுக்கு  பலம். காசு, பணம்  யாருக்கு  வேணும். நம்ம  வயசுக்கு  நாமெல்லாம்  நிறைய  பார்த்தாச்சு. நிம்மதியா  சொச்ச  நாளை  கழிக்கணும். வலியில்லாம  போய்ச்சேரணும்” என்று  மூச்சிழுத்தபடியே  பேசியவர், சங்கரனைப்  பார்த்து  சிரித்தார்.

” சங்கரன்  ரொம்ப  பேசுற  ஆளில்ல. தேவைக்கு  மட்டுமே  பேசுவார். என்னை  மாதிரி  ஒரு  லொடலொட  ஆசாமியோட  இருந்து  பாவம், ரொம்ப  கஷ்டப்பட்டுட்டார். அடுத்தது  வர்ற  ஆளாவது  அவருக்கு  தோதா  அமையணும்.”

” ஏன்  அப்படி  சொல்றீங்க. உடம்பு  குணமானதும்  நீங்கதான்  என்னோட  வந்து  இருக்கப்போறீங்க.”

சங்கரன்  அவசரமாக  சொன்னார்.

” வருவேங்கற  நம்பிக்கை  இல்லீங்க.  இப்போதைக்கு  நல்லபடியா  போய்ச்சேரணுங்கற  நினைப்புதான்  மனசு  பூரா  இருக்கு. எழுபத்தெட்டு  வயசாவுது. இந்த  வயசுக்கு  உடம்பு  படுத்தாம  வாழ்ந்துட்டேன். இதுக்குமேல  இருந்து  என்ன  செய்யப்போறேன். பாவம், இந்தப்பையன்  என்னால  கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கான். இவனுக்காகவாவது  நான்  சீக்கிரம்  போய்ச்சேர்ந்துடணும்.”

அவர்  சொல்லிக்  கொண்டிருந்தபோதே  மருத்துவர்  வர, மூவரும்  ஒதுங்கி  வெளியே  வந்தனர்.

” நீங்க  பெரியவருக்கு  உறவா, தம்பி….?”

திரவியம்  கேட்க, அவன்  மறுத்து  தலையசைத்தான்.

” நான்  ஐயாவோட  மாணவன்ங்க. ஐயா  தமிழ்  வாத்தியார். அருமையா  பாடம்  எடுப்பார். அவர்  பாடம்  எடுத்தா  படம்  புடிச்சாப்ல  கண்ணுக்கெதிரே  காட்சிகள்  விரியும். பாடம்  நடத்துறதோட  என்னைமாதிரி  ஏழை  மாணவர்களுக்கும்  நிறைய  உதவிகள்  பண்ணியிருக்கார். அவரோட  காசுலதான்  நான்  படிச்சேன். இன்னிக்கு  நல்ல  நிலைமையில  இருக்கேன்.”

அவன்  கண்கள்  கலங்கின.

” சொந்தக்காரங்க  யாரும்……..”

” ஐயாவுக்கு  ஒரு  தம்பி, ஒரு  தங்கச்சி. அவங்கெல்லாம்  இப்ப  உயிரோட இல்ல. அவங்களோட   பசங்க  வெளிநாட்டுல  இருக்காங்க. யார்கூடவும்  போய்  இருக்க  ஐயாவுக்கு  விருப்பமில்ல” என்றவன்  சங்கரனின்  முகக்குறிப்பறிந்து,

” ஐயா  திருமணமே  செஞ்சிக்கலீங்க. அவர்  ஒரு  பொண்ண  விரும்பியிருக்கார். அந்தப் பொண்ணுக்கு  வேற  இடத்துல  திருமணம்  முடிச்சிட்டாங்க. ஐயா  அந்தப்பொண்ண  மறக்க  முடியாம  அப்படியே  இருந்துட்டார். இதெல்லாம்  எங்கப்பா  சொல்லி  எனக்குத்  தெரியும்” என்றான். சங்கரனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.

” ஐயா  தம்பி, தங்கச்சிய  நல்ல  நிலைமைக்கு  கொண்டுவந்தார். அவங்க  தலையெடுத்ததும்  விலகி  வந்துட்டார். நான்  துபாய்ல  இருக்கேன். அப்பப்ப  செல்போன்ல  ஐயாவோட  பேசுவேன். இந்தமுறை  ஊருக்கு  வந்தப்ப  ஐயா  ஆஸ்பத்திரியில  சேர்ந்திருக்கறதா  சொன்னார். உடனே  ஓடி  வந்துட்டேன்” என்றவன்,

” ஐயாவுக்கு  ப்ளட்  கேன்சர். ரொம்ப  முத்திப்போயிட்டதா  டாக்டர்  சொன்னார்” என்று  கூறிவிட்டு  குரலுடைந்து  அழ, சங்கரன்  திரும்பி  நின்று  அவசரம், அவசரமாக  கைக்குட்டை  எடுத்து  கண்களைத்  துடைத்துக்  கொண்டார். அறையை  விட்டு  வெளியே  வந்த மருத்துவர், கையிலிருந்த  ரிப்போர்ட்டைக்  காட்டி  விபரம்  சொன்னார்.

” பெரியவர்  க்ரிட்டிக்கல்  ஸ்டேஜில  இருக்கார். எவ்ளோநாள்  தாங்கும்னு  சொல்லமுடியாது. தெரிவிக்க  வேண்டியவங்களுக்கு  தெரிவிச்சிடுங்க. அப்புறம், இங்கேயே  இருக்கணும்கற  அவசியமில்ல. டிஸ்சார்ஜ்  செஞ்சு  கூட்டிட்டு  போறதாயிருந்தாலும்  சரிதான்.”

” வேண்டாம்  டாக்டர். அவர்  மூச்சுவிட  சிரமப்படறார். என்  வீட்டுக்கு  அழைச்சிட்டு  போய்  வச்சிக்கறது  கஷ்டம். அவர்  உங்க  கண்காணிப்புலேயே  இருக்கட்டும் ” என்றான்  அந்த  இளைஞன்.

மருத்துவர்  அகல, மூவரும்  உள்ளே  வந்தனர். உத்திராபதி  மூச்சுத்திணறலோடு  உறங்கிக்கொண்டிருந்தார்.

” தூங்கறதுக்கு  ஊசி  போட்டிருக்கு. யாரும்  அவரைத்  தொந்தரவு  பண்ணாதீங்க.”

நர்ஸ்  கூறிவிட்டு  செல்ல, திரவியம், சங்கரனைப்  பார்த்தார்.

” நீ  கிளம்பறதாயிருந்தா  கிளம்புப்பா. நான்  இன்னிக்கு  ஒருநாள்  தங்கிட்டு  நாளைக்கு  வர்றேன். மனசு  என்னவோ  போலிருக்கு. ”

” நான்மட்டும்  போய்  என்ன  செய்யப்போறேன். பக்கத்து  லாட்ஜில  ரூம்  போட்டு  தங்கிட்டு  நாளைக்கு  முழுக்க  இவரோட  இருந்துட்டு  சாயங்காலமா  கிளம்புவோம்  சரியாப்பா…?”

விசிட்டர்ஸ் நேரம்வரை   உத்திராபதியுடன்  இருந்துவிட்டு  இருவரும்  லாட்ஜிக்குக்  கிளம்பினர்.

” தம்பி, பணம்  தேவைன்னா  சொல்லுங்க, நான்  தர்றேன்.”

சங்கரன்  ஏ. டி. எம்  கார்டை  கையிலெடுத்தார்.

” வேண்டாம்  சார். இப்பவரைக்கும்  நான்  ஒருபைசா  செலவு  பண்ணல. ஐயா  தன்னோட  ஏ. டி.எம்  கார்டை  எங்கிட்ட  குடுத்துட்டார். நீ  ஒரு  ரூபா  கூட  எனக்காக  செலவு  பண்ணக்கூடாதுன்னு  கண்டிச்சு  சொல்லிட்டார்” என்றான்.

இரவு  சங்கரனுக்கு  உறக்கம்  வரவில்லை. நெருங்கிய  உறவின்  தவிப்பை  உள்வாங்கியதுபோல்  மனசு  ஆசுவாசமின்றித்  தவித்தது.

மறுநாள்  மருத்துவமனைக்குச்  சென்றபோது  உத்திராபதி  நிலைகொள்ளாமல்  தவித்துக்  கொண்டிருந்தார். உடலில்  தங்கியிருந்த  நோயின்  தீவிரம்  அவரை  ஏகமாய்  இம்சித்தது.

ஆக்சிஜன்  மாஸ்க்கை  எடுத்துவிட்டு  மூக்கில்  சிறு  குழாயைப்  பொருத்தியிருந்தார்கள். குழாய்  முகத்தைச்  சுற்றி  ஓடி  ஒரு  கருவியோடு  இணைந்திருந்தது. படுக்கை  சாய்த்து  வைக்கப்பட்டிருக்க  உத்திராபதி  அதில்  தளர்வாய்  சரிந்திருந்தார்.  மார்பில்  ஆங்காங்கே  குழாயோடு  இணைக்கப்பட்டிருந்த  வெள்ளை  வில்லைகளை  ஒட்டியிருந்தனர்.

வலது  புறமிருந்த  மானிட்டரில் சிக்சாக்  கோடுகள்  ஓடிக்கொண்டிருக்க, இடதுபுறம்  குளுக்கோஸ்  பாட்டில்  தொங்கிக்கொண்டிருந்தது. உத்திராபதி  உறங்க  முடியாமலும், விழித்திருக்க  இயலாமலும்  போராடிக்கொண்டிருந்தார்.

” இந்த  நேரத்துல  நமக்கு  என்னாகுமோங்கற  பயத்துல  தூக்கம்  வராதுங்க” என்றாள்  தரை  துடைக்கும்  பெண்மணி.

” இ….இல்ல, இல்ல…..பயப்படறதுக்கு…….எ….எதுவுமில்ல. வேலை  முடிஞ்சா  சரி…” என்றார்  உத்திராபதி  திக்கித்திணறி.

” ஐயா  தன்னோட  உடம்பை  மருத்துவ  கல்லூரி  மாணவர்கள்  ஆராய்ச்சிக்காக  தானமா  எழுதி  குடுத்துட்டார்…” என்றான்  அந்த  இளைஞன்.

மாலை நான்கு மணியளவில் சங்கரனும், திரவியமும் கிளம்பிவிட்டனர். சங்கரனுக்கு உத்திராபதியை விட்டுக் கிளம்ப மனசேயில்லை. இருத்தலிலிந்து விடுபடத் துடிக்கும் ஒற்றைச் சுடரொளி காற்றுக்கு அசைவது போன்ற பிரமை தட்ட சங்கரன் கலங்கிப்போனார். நிழலின் சாயல் படிந்த உத்திராபதியின் கண்கள் எதையோ உணர்த்துவது போலிருக்க, ரயில் பிரயாணத்தில் அவை சங்கரனுடன் தொடர்ந்து வந்தபடியிருந்தன. மறுநாள் மதியவாக்கில் உத்திராபதி இறந்த செய்தி வந்தது. சங்கரன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. ஹேங்கரில் உத்திராபதியின் வெள்ளை சட்டை காலர் அழுக்கோடு தொங்கிக் கொண்டிருந்தது.

– ஐ.கிருத்திகா

நன்றி : பதாகை இணையத்தளம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More