“லதா மாதிரி மருமகளை பெற நான் கொடுத்து வச்சிருக்கணும் வேணி .” என்றாள் அகிலாண்டம்.
“அப்படியா! அவ்வளவு உயர்ந்த குணமா ஆன்ட்டி அவளுக்கு?” – போனில் வியந்தாள் வேணி
“சொன்னா நம்ப மாட்டே! அவள் வந்ததிலிருந்து என் துணிகளைக்கூட என்னை துவைக்க விடாம, அவளேதான் துவைக்கறான்னா பாரேன். ஆனால் துவைத்த துணியை நான்தான் காயப் போடுவேன்.”
“பரவாயில்லையே! இந்த காலத்திலும் இப்படி ஒரு மருமகளா!” என்று ஆச்சரியப்பட்டாள் வேணி.
அந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தாள் வேணி. ஆபிஸ் லீவு என்பதால் லதா மட்டுமே வீட்டில் இருந்தாள்.
“வாங்க… வாங்க… உட்காருங்க…” என்ற வரவேற்ற லதா தொடர்ந்து அத்தை கோவிலுக்கு போய் இருக்காங்க…. என்றாள்.
“பரவாயில்லம்மா… நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். மாமியார் துணிகளையெல்லாம் நீ துவைத்துப்போட்டு, மாமியார் மெச்சும் மருமகளா நீ இருக்கறதைக் கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!” என்றாள் வேணி
எங்க அத்தை துணி துவைச்சா ஏகப்பட்ட சோப்பு, சர்ஃப் வேஸ்ட் பண்ணிடறாங்க. தேவைக்கதிகமா தண்ணி யூஸ் பண்ணி காலிப் பண்ணிடறாங்க. அதான் வேற வழியில்லாம நானே துவைச்சித் தொலைக்கலாமேன்னு…”
கோயிலில் இருந்து திரும்பிய அகிலாண்டத்தின் காதுகளில் மருமகளின் பேச்சு விழ உறைந்து நின்றாள்.
– ஆதிரை – 12 – 18 – 2021
– ஜூனியர் தேஜ்
நன்றி : சிறுகதைகள்.காம்