–முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் அஞ்சலி
ஈழத்து மரபுவழி பண்டித கல்வியின் பேராசானை தமிழுலகம் இழந்து நிற்கின்றது. கடந்த அரை நூற்ராண்டுகாலமாக மரபுவழித் தமிழ் கல்வி நிறுவனமான ஆரிய திராவிடபாஷா விருத்தி சங்கத்தினை பல்வேறு இன்னல்களின் மத்தியில் காத்து நின்ற செயல் வீரனின் மறைவு ஈடு செய்யமுடியாதது. இந்தப்பயணத்தில் அவரோடு இசைந்த கணங்கள் அர்த்தம் நிறைந்தவை, மறக்க முடியாதவை .
தொல்காப்பியத்தில் தோய்த்த அவரது இலக்கண அறிவின் ஆழம் ; காப்பியதாசனாக மரபுவழி பண்பாட்டு சிந்தனைகளை இலக்கியமாக்கி விதைத்த அவரின் எழுத்தாற்றல் ,தீந்தேன் என சிறுவர்களோடு உறவாடிய பாடல்கள் என பன்முக ஆளுமை மிக்கவர் கடம்பேசுவரன். முன்னைப்பழமைக்கும் பின்னைப்புதுமைக்கும் பாலமாய் விளங்கிய பெருமகன்.
பண்டித வகுப்புகளோடு எங்கள் பல்கலைக்கழக உயர்பட்ட பீடத்தின் தமிழ் முதுமாணி கற்கையின் விரிவுரையாளராக அவரது ஆழ்ந்த புலமை பயன் விளைத்தமை குறிப்பிடத்தக்கது,
அண்மையில் எங்கள் பல்கலைக்கழக திறந்த –தொலைக்கல்வி நிலையத்துடன் இணைந்து மரபுவழி பண்டித கல்வியை வழங்கும் அவரின் நெடு நாள் கனவு மெய்ப்படும் வேளையில் இந்த இழப்பு நேர்ந்திருக்கிறது. மரபுவழி தமிழ்க்கல்வியில் ஆர்வம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து அவர் தொடங்கிய பணியினை காத்தும் வளர்த்தும் நிற்பதே அவருக்கான அஞ்சலியாகும்