செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சந்தன நுஃமான் வாழ்க | செ.சுதர்சன்

சந்தன நுஃமான் வாழ்க | செ.சுதர்சன்

1 minutes read

மனிதமே உருவும்; என்றும்
மனதிலே கனிவும்; மேவும்
புனிதமே செயலும்; நாளும்
பூவெனச் சிரிப்பும்; எந்தைத்
தனிமுக வடிவும்; பெற்ற
தாயவள் தயைவும்; நாவின்
நுனிதனில் கவியும் கொள்ளும்
நுஃமானே என்றும் வாழ்க!

குருவென ஆகி நின்றே
குவலயம் அறியவைத்தாய்!
பெருமனதோடு நல்ல
பெற்றிகள் எய்த வைத்தாய்!
‘உருவது உண்மை’ என்றே
ஊன்றி நீ பதிய வைத்தாய்!
குருவென நின்றாய்! எந்தன்
குருபர நுஃமான் வாழ்க!

ஆயுதம் விரும்பா எந்தன்
அற்புதக் குருவே! பேரில்
ஆயுதம் தாங்கி நிற்கும்
அருமையாம் சிறப்பே! என்றும்
ஓயுதல் இல்லாதோடும்
ஒருபெரும் மனிதத் தேரே!
சாயுதல் சற்றும் இல்லாச்
சந்தன..! நுஃமான் வாழ்க!

விமர்சன விழியைத் தந்தாய்!
வீறுகொள் ஆய்வைத் தந்தாய்!
சமர்புரி எழுத்தைக் காட்டி
சால்புகள் பலவும் தந்தாய்!
தமரெனத் தரணி யாவும்
தாங்கிடும் வழிகள் தந்தாய்!
அமரனைப் போன்றாய்! எந்தன்
அற்புத…! நுஃமான் வாழ்க!

அன்பினால் தடவி; நல்ல
அறிவினை ஊட்டி; நூலுள்
இன்பமாய் வீடு கட்டி
இருக்கலாம் என்று சொன்னாய்!
என்பதும் உருக்கும் பேச்சை
ஏந்தியே வாழ்வோய்! புல்லும்
தன்பதம் நோகாத் தாள்கள்
தாங்கிடு நுஃமான் வாழ்க!

மாணவர் மனதில் என்றும்
மணிதிருக் கோயில் கொண்டாய்!
நாணதில் பறக்கும் அம்பாய்
நல்கலைச் சமர்கள் கண்டாய்!
காணவே விரும்பிச் சென்றால்
கதவுகள் திறந்து வைப்பாய்!
பேணலே பெரிதென் றோதும்
பெருந்தகை நுஃமான் வாழ்க!

வகுப்பறை தன்னில் வல்ல
வடிவென விரிந்து செல்வாய்!
புகுந்துமே புத்தியுள்ளே
புதுப்பயிர் நாட்டி நிற்பாய்!
நகுதலைக் கொண்டே என்றும்
நலிவுகள் நலியச் செய்வாய்!
மகுடமே மதியாய்! எந்தன்
மணித்திரு நுஃமான் வாழ்க

விருதுகள் விரும்பா எந்தன்
வித்தக! விண்ணாய் நீளும்
பெரும்புகழ் பெற்றும் மாறாப்
பெருங்குணக் குன்ற! உள்ளத்
தெருவெலாம் தேரில் ஏகும்
செம்மையின் தெய்வ! தேவ
உருவமாய் உலவும் எந்தன்
உத்தம…! நுஃமான் வாழ்க!

மொழியியல் அறிஞ! கல்வி
மொழிவதின் வடிவ! எந்தன்
விழியது விரும்பிக் காணும்
விந்தைய! விண்ணாய் நின்று
எழிலருள் பொழியும் முகில!
என்கவிப் பொருள! என்னைச்
செழிப்புற வைத்த செம்மைய!
செந்தமிழ் நுஃமான் வாழ்க!

மேடையில் நின்றால் கொட்டும்
மேகமாய்ப் பொழிவாய்! உள்ளக்
கூடையில் மனிதர் தம்மைக்
குவித்துமே வைத்திருப்பாய்!
ஆடையில் எளிமை கொள்வாய்!
அணிகளே அணியாய்! கவியின்
வாடையில் மயங்கும் எந்தன்
வரிகளில் நுஃமான் வாழ்க!

சாதியும் பாராய்! எந்தச்
சமயமும் பாராய்! கீழ்மைச்
சேதிகள் பாராய்! கிள்ளும்
சேட்டைகள் என்றும் பாராய்!
ஆதியைப் போல வாழும்
அற்புத வாழ்வு கொண்டாய்!
ஓதியே நானும் போற்றும்
ஒருதனி நுஃமான் வாழ்க!

(அகவை எண்பது காணும் என் அன்பு ஆசானுக்கு வாழ்த்து)

செ.சுதர்சன்

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More