செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மறுபடியுமா | சிறுகதை | இரகுநாத் அழகப்பா

மறுபடியுமா | சிறுகதை | இரகுநாத் அழகப்பா

5 minutes read

வழக்கம் போல் அன்று மாலை என்னுடைய நடைப்பயிற்சிக்கு கிளம்பி நடக்க ஆரம்பித்தேன். வீட்டுத் தெருவை கடந்து வலது பக்கம் திரும்பி பிரதான சாலையை அடைந்து சாலையின் இடது ஓரத்திலுள்ள நடைப்பாதையில் நடந்து கொண்டிருந்தேன்.

சூரியன் மேற்கே தன் செங்கதிர்களை பரப்பியவாறு அன்றைக்கு விடை பெற்றுக் கொண்டிருந்தது. பறவைகள் உல்லாசமாகப் பாட்டுப் பாடியவாறு குடும்பத்துடன் தங்கள் கூட்டை நோக்கி பறந்து சென்று கொண்டிருந்தன. இதமான தென்றல் வீசி செடி, கொடிகளை தாலாட்டி கொண்டிருந்தது. நான் இளையராஜாவின் இசையில் ‘இது ஒரு பொன் மாலை பொழுது…’ பாடலை கேட்டுக்கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

சிறிது தூரம் சென்றபிறகு என் பின்னால் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ஒருவர் இரு நாய்களுடன் வேகமாக வந்துக் கொண்டிருந்தார். நாய்கள் தான் அவரை அத்தனை வேகமாக இழுத்துக் கொண்டு வருகிறது என்பதைப் பார்த்ததும் புரிந்துக் கொண்டேன். அந்த நாய்களின் துறுதுறுப்பும், குறும்புத்தனமும், எஜமானரின் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த பொன் மாலை பொழுது மயக்கத்தில் குதூகலமாக வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்து குரைத்து கொண்டும் அவற்றை விரட்டிப் பிடிக்க முயற்சித்து கொண்டும் வந்த அழகை சில நிமிடங்கள் புன்முறுவலுடன் பார்த்தவாறே நின்றேன். என்னை கடக்கும் போது அவை என்னருகே வந்து என் கால்களை முகர்ந்துவிட்டு, இல்லை முத்தமிட்டு என்று சொல்வதே சரி, என்னைப் பார்த்து வாலையாட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்திவிட்டு, சென்று வருகிறோம் என்று சொல்வதைப் போல் என்னைப் பார்த்து குரைத்துவிட்டு சென்றது. அப்போது, என் நினைவெல்லாம் என் சிறுவயதில் நாங்கள் வளர்த்த செல்ல நாயான ஸ்வீட்டியின் எண்ணங்களால் நிரம்பிவழிய நான் அவர்களை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

நான் எட்டாவது படிக்கும்போது நாங்கள் நாய் வளர்க்க முடிவெடுத்து ஒரு நாய்க்குட்டி வாங்கினோம். பிறந்து இரண்டு வாரங்களே ஆன பொமரேனியன் வகை ஆண் குட்டி. உடல் முழுவதும் பனித்துளிகள் படர்ந்தது போல் வெண்மையான நன்கு வளர்ந்த முடிகள். முகத்தில் மட்டும் மூன்று சிறிய கருப்பு திராட்சைகளை வைத்ததுப்போல் இரண்டு கண்களும், மூக்கும் கொள்ளை அழகாக இருந்தது. தன் வசீகரிக்கும் அழகாலும், சுட்டித்தனத்தாலும், அன்பு பார்வையாலும், மெல்லிய முனகல் சத்தத்தாலும் குடும்பத்தில் எல்லோரையும் அவன்பால் இழுத்துக்கொண்டான். அன்றிலிருந்து அவன் எங்கள் குடும்பத்தில் ஒருவனானான். என் அம்மா அவனுக்கு ‘ஸ்வீட்டி’ என பெயர் வைத்து அழைத்தார்.

அதன்பின் ஸ்வீட்டியுடன் விளையாடுவது என் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. தினமும் காலையில் நானும் தங்கையும் பள்ளி செல்லும் போது, வீட்டு வாசல் வரை வந்து எங்களை கவலை கலந்த முகத்துடன் வழியனுப்பி வைப்பான். மாலையில் நாங்கள் பள்ளியிலிருந்து திரும்பி வரும் போது, வீட்டு வாசலை அடைந்ததும் எங்கள் வருகையை அறிந்தவுடன் அவனுடைய குதூகலுமும் விளையாட்டும் சில நிமிடங்களுக்கு அடங்காது. அவன் நெற்றியை தடவிக் கொடுத்து அவனை நலம் விசாரித்த பிறகு தான் சமாதானம் அடைவான். பிறகு நாங்கள் சாப்பிடும் போது எங்கள் அருகே உட்கார்ந்து எங்களிடமிருந்து பகிர்ந்து சாப்பிடுவான். நான் மாலையில் படிக்கும் நேரங்களில் அடிக்கடி என் அருகே வந்து உட்கார்ந்து அவன் நெற்றியை தடவி விடும் படி கேட்டு என்னையே பார்த்துக் கொண்டிருப்பான். நானும் அதனை உணர்ந்து தடவி கொடுப்பேன். இதுவும் எங்கள் இருவருக்கும் தினமும் ஒரு வழக்கமாகி விட்டது.

சிறுவயதில் எல்லோரையும் போல் நானும் அதிகம் தின்பண்டங்கள் சாப்பிடுவேன். நான் சாப்பிடும் போது ஸ்வீட்டி எங்கு இருந்தாலும் ஓடி வந்து என் முன் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருப்பான். அவனுடன் பகிரந்து உண்ட பிறகு தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வான். சில நேரங்களில், அவனுடன் விளையாடுவதற்காக, நான் அவனுக்கு கொடுக்காமல் சாப்பிடுவேன். அப்போது, அவன் குரைத்துக் கொண்டு என் மேல் அவன் முன்னங் கால்களை வைத்து என்னையே பார்த்துக் கொண்டிருப்பான். இப்படி சிறிது நேரம் விளையாடிவிட்டு, அவனுடன் பகிர்வேன்.

விளையாட்டுக்கும் கொஞ்சலுக்கும் மத்தியில் சில சமயங்களில் அவன் அதட்டலும் அடியும் வாங்கியது உண்டு. தான் செய்த தவறுக்கு அடி வாங்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் அவன் ஓடி ஒளிந்து கொள்வான். அடி வாங்கும் சமயங்களில் வலி தாங்காமல் முனகுவான். வலி அதிகமானால் அடிக்கும் போது எதிர்த்து பல்லைக் காட்டி உறுமுவான். அடித்து முடித்த சில நிமிடங்கள் கழித்து மெதுவாக அருகே வந்து உட்கார்ந்து மிகவும் செல்லப் பார்வையோடு ஒன்றுமே தெரியாததுப் போல் என்னைப் பார்ப்பான். அந்தப் பார்வையில் என்னுடைய கோபம் தணிந்து நானும் அவன் மேல் இரக்கப்பட்டு அன்பாய் தடவிக் கொடுத்து விளையாடுவேன்.

நாட்கள் உருண்டோடி நான் பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதி அன்று மதிப்பெண் பெற்றுக் கொண்ட நாள். நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் என்னுடைய நண்பர்களை (அந்த நேரம் மட்டும் எனக்கு எதிரிகளாக மாறியிருந்தார்கள்) விட குறைவாக இருந்ததால் சிறிது கவலையோடு இருந்தேன். உறவினர்களும் பக்கத்து வீட்டு அன்பர்களும் வந்து விசாரித்துவிட்டு கவலைப்படாதே என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது பக்கத்து வீட்டு பரமேஸ்வரன் தாத்தா வந்தார். என் படிப்பில் மிகுந்த அக்கறை கொண்ட மரியாதைக்குரியவர். நான் படிக்கும் போது, சில நேரங்களில் அவர் கவனித்துவிட்டு கேள்வி கேட்பார், அல்லது என் தவறை சுட்டிக்காட்டி திருத்துவார், அல்லது அவருக்கு தெரிந்த வேறு தகவல்களை பகிர்ந்துக்கொள்வார். ஒருமுறை அவர் என்னிடம் (a+b)2-க்கான சூத்திரம் என்ன என்று கேட்டார்.  நான் பதிலளிக்க தடுமாறிய போது அவர் (a2 + b2 + 2ab) என்று சரியான பதிலை கூறினார். நான் மிகவும் வெட்கத்துடனும் ஆச்சரியத்துடனும் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் ஆச்சரியத்திற்கு காரணம் அவருக்கு அப்போது வயது 65 முதல் 70-க்குள் இருக்கும். இந்த வயதில் இவர் எப்படி மறக்காமல் சரியாக சொல்கிறார் என்ற கேள்வி என்னுள் ஓடியது. அப்போது, நான் இவர் வயதில் இப்படி இந்த சூத்திரத்தை மறக்காமல் சரியாக சொல்வேனா என்ற மற்றொரு கேள்வியும் அச்சமும் என் மனதில் தோன்றியது. இந்த அச்சத்தினாலேயே இன்றுவரை நான் இந்த சூத்திரத்தை மறக்காமல் இருக்கிறேன்.

இத்தகைய மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய தாத்தா என்னிடம் வந்து என் மதிப்பெண் கேட்டறிந்தார். என் கவலைக்கான காரணத்தையும் தெரிந்துக்கொண்டார். என்னை கடுமையாக கடிந்துக் கொள்வார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த போது சற்றும் எதிர்ப்பார்க்காத கருத்தைக் கூறினார். அவர் கூறியது, “நீ குறைந்தது 50 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதற்குக் காரணம் ஸ்வீட்டி தான். நீ படிக்கும் போது அவனுடனேயே விளையாடிக் கொண்டிருப்பாய்” என்றார். நான் அமைதியாக அவர் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த உரையாடலின் போது ஸ்வீட்டி எங்கள் அருகில் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். “ஸ்வீட்டி தான் காரணம்” என்று தாத்தா சொன்ன போது, அவன் விழித்து தலையை மட்டும் தூக்கி எங்கள் இருவரையும் பார்த்து குரைத்தான். நாங்கள் இருவரும் அமைதியானோம்.

நான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சேரும் முன், நாங்கள் வேறு ஊரில் புதியதாக கட்டியிருந்த வீட்டுக்கு மாறிச் சென்றோம். புதிய வீடு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்தது. அந்த சாலையில் எப்போதும் கனரக வாகனங்கள் சென்றுக் கொண்டிருக்கும். ஸ்வீட்டியை  நெடுஞ்சாலைக்கு அருகே செல்லாதாவாறு கவனித்துக் கொண்டோம்.

நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது ஒரு நாள் நான் கல்லூரிக்கும், தங்கை பள்ளிக்கும் மற்றும் பெற்றோர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கும் காலையிலேயே சென்றுவிட்டோம். மாலையில் நான் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது தங்கை சோகத்தோடு அழுதுக் கொண்டிருந்தாள். என் வருகையை அறிந்து எப்போதும் என்னைப் பார்த்து ஓடி வரும் ஸ்வீட்டியை காணவில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, அழுதுக் கொண்டிருந்த தங்கை, “அங்கே பார்” என்று கூறி வலது கையை நீட்டி காட்டினாள். அங்கே ஒரு சாக்கு விரித்துப் போடப் பட்டிருந்தது. அதன் அடியில் ஏதோ இருப்பது புரிந்தது. மனதில் சிறு கலக்கத்துடன் அருகே சென்று மெதுவாக சாக்கை தூக்கிப் பார்த்தேன். ஸ்வீட்டி!!! எந்த அசைவும் இல்லாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனிடம் அசைவில்லை. அவனை அந்த நிலையில் பார்த்து என்னால் அசைய முடியவில்லை. ஆனால், என் இதயம் மிகவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. மனதிற்குள், “ஸ்வீட்டி, நான் வந்துவிட்டேன். வா, விளையாடலாம்”, என்று தடுமாற்றத்துடன் கத்தினேன். கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தன. ஸ்வீட்டி இனிமேல் என்னுடன் விளையாட மாட்டான், சாப்பிட மாட்டான், சண்டையிட மாட்டான், அவன் நெற்றியை தடவி விட கேட்க மாட்டான் என பல எண்ணங்கள் நெஞ்சில் மோதியது. வாழ்க்கையில் முதல் முறையாக எனக்கு மிகவும் நெருக்கமான, நான் மிகவும் நேசித்த மற்றும் என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தோடு பழகிய அன்பு தோழனின் இழப்பை ஏற்றுக் கொள்ள மனது மறுத்தது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவன் நெடுஞ்சாலைக்குச் சென்று, அங்கு ஒரு கனரக வண்டி (லாரி) அவனை மோதியுள்ளது என்று புரிந்துக் கொண்டேன். மெதுவாக சுதாரித்துக் கொண்டு இப்போது அவன் முழு உடலையும் கவனித்தேன். தலை முதல் அடி நெஞ்சு வரை அவன் உடலில் எந்த காயமும் இல்லை. ஆனால், நெஞ்சுக்கு கீழ் உடல் முழுவதும் சிதைந்து சதையும் இரத்தமுமாக இருந்தது, இல்லை இருந்தான்!!! அவனை மேலும் அந்த நிலையில் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் சாக்கை மெதுவாக அவனுக்கு வலிக்கதாவாறு அவன் மேல் போர்த்திக் கொண்டு, அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொண்டு எழுந்து நடந்தேன்.

இப்போது நடக்கும் போதும் அந்த நினைவுகள் மனதை கனமாக மாற்றியது. வீட்டில் பிள்ளைகள் சில நேரம் நாய் வளர்க்கலாம் என்று ஆசையோடு கேட்பார்கள்.  பிறகு பார்க்கலாம் என்று சமாளித்து விடுவேன். உண்மையைச் சொன்னால், எனக்கும் ஆசை உண்டு. ஆனால், மறுபடியும் ஒரு இழப்பை தாங்கமுடியுமா என்ற கேள்வி என்னை தடுத்துவிடும். ஸ்வீட்டி நினைவாக மறுபடியும் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

அப்போது, சாலையில் ஒரு கனரக வண்டி உறுமியவாறு என்னை கடந்துச் செல்ல, என் மனம் திக்திக்கென்று அடித்தது.

 

நிறைவு..

– இரகுநாத் அழகப்பா | அவுஸ்திரேலியா

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More