மொழியின் செல் நெறியில்
வழிமாறி வந்தது ஒரு ஊழி
உயிர்களின் விதை நிலமாய்
உறைந்து போனது எம் தேசம்
மனிதனாய் வாழ வழியில்லை
தமிழனாய் வாழ்வது எப்படி ?
மரணம் தன் இறகுகளை நீட்டி
மல்லாக்க படுத்து சிரித்தது
பாம்புகள் ஊரும் சருகுகள் பறக்க
பேய்கள் ஆடும் கூத்தின் ஓசைகள்
மண்ணாய்ப் போன மனைகள் எல்லாம்
மலையாய் உயர்ந்த மயானங்களின் பின்னால்
தேடித் தேடி அலையும் இவர்கள்
தொலைத்த உறவுகள் சாம்பலின் எச்சமாய்
நெஞ்சாங்குழிக்குள் இன்று
நீண்டு கிடக்கின்றது ஒரு நெருடல்
அன்று பார்த்த
“வன்னி நிலம் வரவேற்கின்றது”
எங்கே போனது – இன்று
பிணம் தின்ன காத்திருக்கின்றன
கழுகுகள் வாசலில்.