கஞ்சியோ கூழோ கிடைத்ததை உண்டு
காவியோ வெள்ளையோ கசக்கி உடுத்தி
கோவில் குளமென எங்கும் சென்று
ஓலைக் குடிசையில் மகிழ்வாய் வாழ்ந்தோம்.
திருமணம் என்றனர் சிணுங்கி மறுத்தேன்
உனக்கு கீழே தங்கைகள் பலருளர்
அவர்க்கு நீயும் வழிவிட வேண்டும்
சரியென உணர்ந்து சம்மதம் என்றேன்.
கறுப்பாய் எடுப்பாய் கணவரும் வந்தார்
கடைசி வரைக்கும் காப்பேன் என்றார்
இருவரும் சேர்ந்து இணையாய் உழைத்தோம்
சிக்கனமாய் நாம் சேமித்து வாழ்ந்தோம்.
ஆசைக்கொரு பெண் ஆஸ்திக்கொரு ஆண்
அழகாய் பிறந்தனர் அன்பாய் வளர்த்தோம்
மேடும் வந்தது பள்ளமும் வந்தது
ஒருவருக்கொருவர் துணையாய் வாழ்ந்தோம்.
யுத்தமும் வந்தது எதிரியும் வந்தான்
நித்தம் நித்தம் குண்டுகள் பொழிந்தான்
ரத்தம் சிந்தி மக்கள் மாண்டனர்
சித்தம் மறந்து சிதறி ஓடினோம்.
ஓட ஓட எதிரியும் விரட்டினான்
ஊரோடொத்து நாமும் ஓடினோம்
காடு மேடெல்லாம் கடந்து ஓடினோம்
பிணங்களைத்தாண்டி பீதியோடோடினோம்.
கற்றவர் கல்லார் ஏழைகள் செல்வர்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் எவரையும் விடாது
தமிழனாய்ப் பிறந்த காரணத்தாலே
ஏவு கணைகள் வெடித்து அழித்தன.
தந்தையை இழந்தவர் தாயை இழந்தவர்
கணவரை இழந்தவர் மனைவியை இழந்தவர்
மகனை மகளை மட்டுமல்லாது
குடும்பமாய் பலரும் மாண்டுபோயினர்.
பசியால் துடித்த பிள்ளைகளுக்கு -பால்
வாங்கச் சென்ற எந்தன் கணவனை
குறிபார்த்துச் சுடும் கொடூரன் ஒருவனின்
குண்டு ஒன்று கொன்றே விட்டது.
துடியாய் துடித்தேன் துவண்டு அழுதேன்
மயக்கம் தீர்ந்து எழுந்த நானும்
மகளை மகனை நிமிர்ந்து பார்த்தேன்
கணவர் கனவை நினைவில் கொண்டேன்.
பசியில் பிணியில் பயத்திலிருந்து
பிள்ளைகளை நான் காத்திட வேண்டும்
கல்விச் செல்வம் வழங்கிட வேண்டும்
கைம் பெண் என்னைக் காப்பவர் யாரோ?
தாயகத்தோரே! புலம்பெயர்ந்தோரே !
விதியால் யானும் விதவையானேன்
என்னைப் போல்ப் பெண்கள் எண்பதினாயிரம்
ஏதிலிகளாய் பரிதவிக்கின்றோம் பாவியரானோம்.
கணவனை இழந்தவர் பல வகை உண்டு
பிள்ளைகள் பெற்றோர் பிள்ளைகள் பெறாதோர்
வயது முதிர்ந்தோர் பதின்ம வயதினர்
சில நாள் மட்டும் வாழ்ந்து முடித்தோர்.
எமக்கும் மனித உணர்வுகள் உண்டு
அண்ணல் நபியின் கதைதனை அறிவீர்
காந்தி மகானும் வேண்டுதல் செய்தார்
இன்னொரு வாழ்வை நினைப்பதும் பிழையோ?
திருமணம் என்பது வாணிபம் அல்ல
மறுமணம் செய்திட மனமும் வேண்டும்
இளைஞர் தாமாய் முன்வரவேண்டும்
விதைவைப் பெண்களும் வாழ்ந்திட வேண்டும்.
– காந்தி –