11
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிறன்று கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் ‘ஆவி வந்த மாப்பிள்ளை’ என்கிற நகைச்சுவை நாடகம் கோவையில் நடைபெற்றது.
சத்யசாய் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை நாடகம் ‘ஆவி வந்த மாப்பிள்ளை’. எழுச்சூர் அரவிந்தன் கதை வசனம் எழுத, மாப்பிள்ளை கணேஷ் இந்நாடகத்தை இயக்கியுள்ளார்
சொந்தமாக கிளினிக் நடத்தி வாடிக்கையாளர்கள் இல்லாமல் தவிக்கும் இளம் டாக்டர் அருணாசலம். தொழில் சரியாக இல்லாததால் பிரபலமான மருத்துவமனையில் வேலைக்கு சேர மருத்துவர் ஞானசம்பந்தரிடம் நேர்காணலுக்கு செல்கிறார். அந்த சந்திப்பில் இருவருக்கும் உரசல் ஏற்பட்டுவிடுகிறது. தங்களைப் போலவே ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு உரிமையாளர் ஆகிறேன் ஆகிக் காட்டுகிறேன் என்று சூளுரைக்கிறார் அருணாசலம். மருத்துவர் ஞானசம்பந்தரின் மகள் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவரது மருத்துவமனைக்கே உரிமையாளர் ஆகிவிடலாம் என்று யோசனை சொல்கிறார் அருணாசலத்தின் நண்பரான கம்பவுண்டர் கந்தசாமி. கிருஷ்ணாவைக் காதலிக்கும் முயற்சியில் அவர்களுக்கு ஒரு ஆவி உதவ முன்வருகிறது. அந்த ஆவி காதல் நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் ஆவி.
ஆவியின் உதவியினால் வெகு விரைவில் பிரபலமான டாக்டர் ஆகிவிடுகிறார் அருணாசலம். ஞானசம்பந்தானே முன்வந்து தன் மகள் கிருஷ்ணாவை அருணாசலத்திற்குத் திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகும் அருணாசலத்தின் உடலை விட்டு வெளியேற அந்த ஆவி யாமினி மறுக்கிறது. அதனால் குடும்பத்தில் நிகழும் சுவாரஸ்யமான கலாட்டாக்கள்தான் ஆவி வந்த மாப்பிள்ளை நாடகம். முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பும் இந்த நாடகம் பிரபல திரைக்கதையாசிரியர் எழுச்சூர் அரவிந்தனுடைய கதை வசனத்தில் உருவானது. நாடகத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் குபீர் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது.
மிக எளிமையான கதையை எடுத்துக்கொண்டு மிகக் குறைவான அரங்க பொருள்களின் உதவியுடன் நாடகம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது சமகால அரசியல் விஷயங்களும் நையாண்டி கலந்து நாடகத்தில் விமரிசிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரித்து நாடகத்தை ரசித்தனர்.