நெற்றிப் பொட்டில் முகிழ்த்தெழுந்து
வேர்கொண்டகன்று
நீண்டு
வளர்ந்து
கிளைவிரித்து உயர்ந்துயன்று
தலை முழுதும் சுழன்றுபரவும்
வலி …
நீயில்லா வலி.
சிந்தனைகளின் அழுத்தலில்-கேள்விகளின்
குடைதலில்
தலைக்குள் குருதி,
தறிகெட்டு தடைதகர்த்து குமுறிப்பாய
நரம்புகள் பின்னிப் பிணைந்து
இறுகித் தெறித்து
வெடித்துச் சிதறக்கூடும்.
நானும் சிதையக்கூடும்.
சீக்கிரம் வந்துவிடு.
……………………
அடிக்கடி
நீ அருகிலிருப்பதாய் தோன்றுவதெல்லாம்
பொய்பொய்யென
பிரமைதானென
உணர்ந்துணர்ந்து உள்குறுகும்போது
கண்முன்னே மயிர்பிடுங்கும் வேதனையில்
மனசு மருகுகின்றது.
சீக்கிரம் வந்துவிடு.
………………………………
நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து
நெக்குருகி – உடல்நடுங்கி
நீயில்லா ஏக்கம் நிரம்பி
வழிய
நிற்கிறேன்.
சீக்கிரம் வந்துவிடு.
……………………..
ஒற்றைக்குயிலின் அழுகையின் நீட்சியில்
எழுகிறது என் சோகம்
பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்
வழிகிறது என் கண்ணீர்
தனிமை தனிமை தனிமை
தனிமை தலைவிரித்தாடுகிறது
சீக்கிரம் வந்துவிடு.
……………………………..
விரக்தி மிகுந்த வெறுமையும்
வெறுமை நிறைந்த விரக்தியும்
விரவி நிற்கும்-
கையறு நிலையில்
மெய்யது தவிக்க
எற்றுண்டு கிடக்கிறேன்,
கணங்களின் கரையோரம்……
…………………………..
சீக்கிரம் வந்துவிடு.
……………………….
தாங்கவொண்ணாத் துயரமாயிருக்கிறது
உன் பிரிவு….
சீக்கிரம் வந்துவிடு.
……………………..
சீக்கிரம் வந்துவிடு!
நன்றி : தமிழினி | viduthalai.wordpress.com