தன் நான்கு வயது மகளுக்குச் சிரிப்புக் காட்டியவாறே ஞாயிறு விடுமுறையைக் களித்தபடி, கழித்துக்கொண்டிருந்தார் வித்தி என்கின்ற வித்தியானந்தன். வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து தன் மகளோடு முகம் ஒட்டி முற்றத்தில் தூக்கி வைத்துச் சிறுபொழுதைக் கழித்தாற்தான் வித்தியருக்கு நிம்மதி. ஊருலகத்தில் எல்லோருக்கும்தான் மணம் முடித்துக் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் வித்தியருக்கோ இந்த மகிழ்வும் மனநிறைவும் உலக அதிசயங்களில் ஒன்று போன்றது.விபத்தொன்றில் சிக்கிச் சின்னாபின்னமாகி நீண்ட நாட்களாகக் கட்டிலோடு காலம் கழித்தவருக்குக் கல்யாணம் பேசி வந்ததே நாற்பது வயதுகளில்தான்.
‘தூரத்து உறவுக்காரி ஒருத்தி தாய், தந்தையின்றி இருக்கிறாள்,உனக்குச் சம்மதமென்றால் கட்டன் ‘
மாமன் முறையில் வந்த உறவொன்று இணைத்துவிட்ட சம்பந்தத்தைக் கொழுகொம்பாகப் பிடித்துக்கொண்டு இல்லறச் சோலையின் இதத்தை இதமாக அனுபவித்தார்.எத்தனை நாட்களின் ஏக்கமோ?இல்லை அவசரமோ? எண்ணிப் பத்தாம் மாதம் மகள் பிறந்தாள்.
தடுக்குப்பாயில் மகளை வைத்துக் கொஞ்சும் போதெல்லாம் ‘என்னைப் போலயே இவளுக்கும் சின்னக் கண்ணுகளப்பா, காது எங்கட அம்மாவைப் போல’ என்று மனைவிக்குச் சொல்லிச் சொல்லிச் சந்தோசப்படுவார். ‘அப்பாவைப் போலவே பிள்ளை இருக்கிறாள் ‘ என்று பிள்ளையைப் பார்க்க வருபவர்கள் யாரேனும் சொன்னால் பூரித்துக்கிடப்பார். ‘என்னோட படிச்சவங்களெல்லாம் தங்கட பிள்ளையளுக்கு சாமத்திய வீடு செய்யேக்கதான் நான் என்ர பிள்ளைக்கு முதல் பிறந்த நாள் கொண்டாடினான். ம்ம்… எல்லோருக்கும் எல்லா வயதிலயும் எல்லாம் கிடைக்கிறேலத்தானே’ மனைவியிடம் அடிக்கடி சொல்லிச் சிரிப்பார்.
டோங்லீ, வித்தியர் வீட்டுக் காவலன்.முதல் முதலில் அவனைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பயம் வரும். மிக நல்லவன், ஆனால் பசி தாங்கமாட்டான். இதனாலேயே பலமுறை வித்தியரின் கண்டிப்புக்கு ஆளாகுவான். வித்தியரின் மகளை வித்தியரைப் போலவே நேசிப்பவன்.புதிதாக யாரும் வீட்டுக்கு வந்தால் குழந்தையை நெருங்க விட மாட்டான். குழந்தையையே சுற்றிச் சுற்றி வருவான். தன் இரு கண்களில் ஒன்றை எப்போதுமே குழந்தை மேலே வைத்திருப்பான்.கொடுப்பதை உண்பான், ஆனால் நிறைய உண்பான்.பசி வந்தால் கண்டவற்றிலும் வாய் வைப்பான். வீட்டில் மரக்கறியென்றாலும் அவனுக்கு அசைவம்தான். வீட்டில் விரத நாட்களில் அவன் மட்டும் சோக ஆலாபனையில் சுருதி மீட்டுவான்.இன்னும் சொல்லப்போனால் டோங்லீக்கும் குழந்தை பானுவுக்கும் சம வயதுதான். அடர்த்தியான தேகக் கட்டும் அதனைச் சுற்றி மொசு மொசு என்று உரோமமுமாகச் சற்றுப் பெருத்து வளைந்த வாலுமாக ஆங்காங்கே பிரஷ்ஷில் இருந்து சிந்திய வெள்ளைச் சுண்ணாம்புப் பொட்டுக்கள் போல புள்ளிகள் படர்ந்த கரிய உடலில் வீட்டைக் காவல் செய்வான். யாரேனும் புதிதாக வந்தால் குரைத்தே கலைத்து விடுவான்.பானுக்குட்டி சிணுங்கும் போதெல்லாம் டோங்லீ சுதந்திரமாக நின்றால் வீட்டைச் சுற்றியும் சில சமயங்களில் வீட்டின் உட்புறமாயும் ஓடித்திரிவான். கட்டிப்போட்டாலோ முன்னங் கால்களால் விறாண்டியே கோபத்தை அடக்கிக் கொள்வான்.
வல்லைவெளி ஆமிக்காம்பில் பழுதடைந்து சிக்கலை ஏற்படுத்திய ரான்ட்ஸ்போர்மரைத் மிகத் துல்லியமாகத் திருத்திக் கொடுத்ததற்குப் பரிசாகா, கொமாண்டர் ஜயசூரிய தனக்கு டோங்லீயைப் ரிசளித்தார் என்பதைக் கிட்டத்தட்டக் காது கேளாதவர்களைத் தவிர நெல்லியடியில் எல்லோருக்கும் சொல்லிவிட்டார் வித்தி. டோங்லீயும் சொல்லிக்கொள்ளும்படியான வெளிநாட்டுப் பரம்பரையில் வந்த வாரிசுதான். என்னவொன்று, இலங்கையில் பிறந்துவிட்டதால் கொஞ்சம் கிராக்கியான இனமாகத் தெரிந்தான்.சில மனிதர்களுக்கு இல்லாத உலகத்து நல்ல புத்திகளெல்லாம் நாய்களுக்குக் குறிப்பாக டோங்லீக்கு இருப்பது கண்டு வித்தியர் அடிக்கடி பெருமை பேசுவார். ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தாலும் ஆளரவம் கேட்டால் அறக்கப் பறக்க எழுந்து விடுவது நாய்களுக்கே உரித்தான பண்பு. ’நாய்களின் நல்ல பண்புகள் பற்றி நாலடியாரும் ஒளவையாரும் சொல்லாததையா நான் சொல்லப்போகிறேன்’ என்று வீட்டுக்கு வந்துபோபவர்களிடம் சொல்லிச் சிரிப்பார்.
‘ஏனப்பா,எனக்கு பானு எண்டு பேர் வச்சனீங்கள்?’ ஒருநாள் மாலைநேரம், தந்தையோடு விளையாடிக்கொண்டிருந்த வேளையில் பானு கேட்டாள்.
‘அதுவா,அந்தா வானத்திலே சிவப்பாத் தெரியுதே அதுக்கென்ன பேர்?’
‘சூ…ரியன்’
‘ஆ, சூரியன பானு எண்டும் சொல்லலாம்,பிள்ளையும் சூரியனப் போல சிவப்பா அழகா இருக்கிறதாலதான் அப்பா பிள்ளைக்கு பானு.. எண்டு பேர் வச்சனான்’
சொல்லும் போதே வித்தியரின் ஆன்மாவுக்குள் பிரகிருதி இல்லாத் தெய்வத்தின் பிரதிமை எட்டிப்பார்க்க, மகளை அணைத்து முன் நெற்றியில் முத்தமிட்டார்.
‘அப்போ, எங்கட டோங்லீக்கு ஏனப்பா டோங்லீ எண்டு பேர் வச்சனீங்கள்?’ தந்தையிட்ட முத்தத்தில் நாட்டமில்லாதவளாக அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
வித்தியர்,’ஹா ஹாஹஹா..’ ஓங்கிச் சிரித்தார்.
‘அதுவா அது அப்பாவுக்கு ஏழாம் அறிவால கிடைச்ச பெயர் ‘
‘ம்ம்… ’என்றாள் குழந்தை பானு, பின்னர் சிறித நேரம் எதுவும் பேசாது சிந்தனையில் இருந்தாள்.
‘ஏனம்மா, பிள்ளைக்கு இந்தப் பேர் பிடிக்கலையா?’ கேட்டார்.
‘இல்லையப்பா, எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு’ சொல்லிக்கொண்டே தந்தையின் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு டோங்லீயை நோக்கி ஓடினாள்.
’டோங்லீ… டோங்லீ..’ இரண்டு தடவைகள் சத்தமாகக் கத்தினாள் .மனதில் என்ன மகிழ்ச்சியோ யாருக்குத் தெரியும்.இறைவன் இப்படித்தான் சந்தோஷமாக இருப்பான் போல என்று வித்தியர் மனதுக்குள் எண்ணிக்கொண்டார். டோங்லீ கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியை வெறுத்தவனாக நாக்கை நீட்டி மூக்கைத் துழாவியபடியே செல்லங்கொஞ்சிக்கொண்டு முன்னங்கால்களை மடித்தான்.
வழக்கமாக இறைச்சி வாங்கும் கடையில் டோங்லீக்குத் தேவையான கறியையும் வீட்டுக்குத் தேவையான காய் கறிகளையும் வாங்கிக் கொண்டுவந்து மனைவியிடம் நீட்டினார்.
‘ஏனப்பா,இவ்வளவத்த அள்ளிக் கொண்டந்தனீங்கள்? நான் ஒராள் இவ்வளவத்தையும் என்னெண்டு சமைக்கிறது?பத்தாக்குறைக்கு உங்கடையும் பிள்ளையின்ரயும் என்ரயுமெண்டு எக்கச்சக்க உடுப்புகளும் தோய்க்கக் கிடக்கு’ சீறிச்சினந்தாள் திருமதி வித்தியர்.
‘இதில நாய்க்கு வேற தனிக்கறி, நாங்களென்ன மனுசரே மாடே’ … சேர்த்து வைத்திருந்த அன்றைய நாள் எரிச்சல் முழுவதையும் வார்த்தைகளால் வீசியெறிந்தாள்.வித்தியருக்கு எல்லாமே உயிர்கள் தான் .நெடு நாட்கள் தனிமையில் வாழ்ந்ததாலோ என்னவோ? உயிர்களிடத்தில் இயல்பாக அன்பு ஒட்டும்.
‘சரி, அப்ப பின்ன, நீங்க உடுப்புகளைத் தோயுங்கோவன் நான் சமைக்கிறன்’ விடுமுறை நாட்களில் கணவர்கள் சமையற்கட்டுக்குச் செல்வதொன்றும் நாட்டில் புதுமையில்லையே..அதனால் என்ன நாட்டின் பொருளாதாரமா வீழ்ச்சி காணப்போகிறது?. சிலர் கட்டாயத்தில் போவார்கள், சிலர் விரும்பிப் போவார்கள் .இப்போது வித்தியர் இரண்டுமாக நிற்கிறார், அவ்வளவுதான்.
அவிழ்த்து விடப்பட்ட டோங்லீ ஏக குஷியில் வீட்டு விறாந்தையாலும் வெளியாலும் சுற்றி ஓடித்திரிந்தான்.பானுவின் கண்களுக்கு டோங்லீ தம்பியைப் போல செல்லச் சேட்டைகளும் விட்டுத்திரிந்தான். ‘பிள்ளையைப் பாருங்கோ,நான் உடுப்ப ஊறப்போட்டுட்டு வாறன்’கிணற்றடிக்கு விரைந்தார் வித்தியரின் மனைவி.
பகற் சாப்பாடு முடிந்ததும் ‘உண்ட களை தொண்டனுக்கும் உண்டு’ என்பது போல வீட்டு விறாந்தையில் பாயை விரித்துக் குட்டித் தூக்கம் போட்டனர் மூவரும். டோங்லீ வீட்டு முற்றத்தில் நடப்பட்டிருந்த நிழல் மரவள்ளிக்குக் கீழே தன் முன்னங்கால்களை நீட்டி அதற்குள் தலையைக் கிடத்திக்கொண்டு கண்ணயர்ந்தான். குழந்தை பானுவோ, குட்டித்தூக்கத்தில் உடன்பாடில்லாதது போலத் தந்தையின் அரவணைப்பிலிருந்து எழுந்து வெளிக்கதவுக்குச் சென்று எட்டிப்பார்த்தாள். வீடே அமைதியாக இருப்பது அவளுக்கு என்னவோ போல இருந்தது இது காலையா மாலையா என்ற வேறுபாடு கூடத் தெரியவில்லை.சுற்றும் முற்றும் பார்த்தாள். படுத்திருக்கும் தந்தையின் முகத்தை நோக்கி செல்லங்கொஞ்சிக்கொண்டு வந்தமர்ந்தாள்.வந்தவளுக்கு தந்தையின் தூங்கு முகம் பிடிக்கவில்லைப் போலும். மூக்கில் செல்லமாக நுள்ளினாள்,தன் பிஞ்சு விரல் நகங்களால் கன்னங்களை விறாண்டினாள். வித்தியர் துடிச்சுப் பதைத்து எழுந்தார் ‘ச்சீ பிள்ள, அப்பிடிக் கீறக்கூடாது கைய எடுங்க’ கொஞ்சம் கோபம் கலந்து கத்திவிட்டார். மனைவியும் கண்களை விழித்துக்கொண்டாள். சிரித்து விளையாடிக் கொண்டிருந்த பானுவுக்கு வித்தியரின் அந்தத் தொனி கிலியை ஏற்படுத்தியது.அப்படியே குந்திவிட்டாள் பிள்ளையின் இந்தச் சடுதியான மாற்றத்தை உணர்ந்த வித்தியர் மறுகணமே
‘அம்மாக்குட்டி ஏன் இருந்திட்டீங்க அப்பா சும்மாதான் கத்தினான். இந்தா இப்பிடி விறாண்டுங்கோ’ மகளின் இரு கைகளையும் எடுத்து மழித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட கன்னங்களில் போட்டார். பானுவோ சற்று முன்னர் இருந்த மனநிலையை இழந்து சோம்பிப் போனாள். நடக்கின்ற சம்பவங்களைப் பார்த்த வித்தியரின் மனைவி தன் தலையைச் சொறிந்து கொண்டே ‘பேசாமல் படம்மா’ மகளை இழுத்துக் கட்டிக்கொண்டாள்.
’அப்பா, டோங்லீய ஏனப்பா கட்டி வச்சு வளக்கிறீங்கள்?’ இரவு வாசலில் நின்று வித்தியரைப் பார்த்துக் கேட்டாள் .வித்தியருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘அதுவா, டோங்லீ எங்கட வீட்டு நாய் தானே வேற ஆக்கள் டோங்லீயப் பிடிச்சுக்கொண்டு போகாமலிருக்கத்தான் கட்டி வச்சிருக்கிறம்’ பதில் சொன்னார். ’ப்ப டோங்லீயக் கட்டிவைக்காட்டி யாரும் பிடிச்சுக்கொண்டு போயிருவினமா?’ சோர்ந்துபோனாள்.
சிறிது நேரத்தில்..
‘அப்போ ஏனப்பா, என்னைக் கட்டி வளக்கேல?’
‘ஹா ஹா ஹா..’ வித்தியர் சிரித்துவிட்டு ,
‘அம்மா பிள்ளைய சின்னனில குழப்படியெண்டு காலில கட்டி வச்சுத்தான் வளர்த்தவா. இப்ப பிள்ளை வளர்ந்திட்டீங்க தானே! அதுதான் கட்டுறேல’ சொல்லிக்கொண்டே மகளைத் தூக்கிக் கொஞ்சினார்.சிந்திக்காமல் கேட்கிறாளா இல்லைச் சிந்தித்துக் கேட்கிறாளா விளங்கிக்கொள்ள முடியாத விளங்காத வித்தியருக்குக் குழந்தையின் ஒவ்வொரு கேள்வியும் ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வித்தியருக்கு ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் படித்துவிட்டு மேசையில் வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று ஏதோ அலுவலகம் சார்ந்த அலுவலில் மூழ்கியிருந்தார். அந்தப் பக்கமாகத் தன் வெண்பொங்கற் கால்களால் நடந்து வந்துகொண்டிருந்த பானு ,அந்தக் கடிதத்தை அதன் வெண்மையை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாள் .அதன் வெண்மையை இரசித்தவளுக்கு அதனை அள்ளியெடுத்து விளையாட வேண்டும் போல இருந்தது. மேசையில் அங்காத்திருந்த பேனாவைத் தன் பிஞ்சுப் பச்சை மிளகாய் போன்ற விரல்களால் கையிலெடுத்து மனம் போன போக்கில் கிறுக்கல் ஓவியங்களாக வரைந்துகொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஓவியத்தில் ஆர்வமில்லாதவளாக சிற்பக்கலைக்குச் சிமெந்து குழைப்பது போல அக் கடிதத்தைக் கசக்க ஆரம்பித்தாள். அலுவல் முடிந்து வந்த வித்தியர் மகளைப் பார்த்தார் மகள் சந்தோசமாக இருப்பது தெரிந்தது. குசினிக்குள் சென்று ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து தன் வாயைத் திறந்து உறிஞ்சிய பின்தான் கடிதத்தின் மீதான மகளின் கலவரத்தைக் கண்டுணர்ந்தார்.
‘ஐயோ, பிள்ள என்ன செய்து வச்சிருக்கிறாய்..’ கோபம் குரங்குப் பாய்ச்சல் போட்டு உச்சிக்குச் சென்றது. ஓங்கி ஒரு அறையை அவள் முதுகில் வைத்தார். பாவம் பானு வலியால் துடிதுடித்து நடுங்கிக் கொண்டே வீரிட்டுக் கத்தினாள்.தந்தையின் கோபச் சுவாலையிற் பொசுங்கியவளாகத் தாயிடம் ஓடிச் சென்று மடியில் வீழ்ந்து கதறினாள். அடுத்த கணமே பிள்ளையின் வலி தாங்க முடியாதவளாக
‘நீங்க மனுசரே மாடே?இப்பிடிப் போட்டுப் பிள்ளைய அடிச்சிருக்கிறீங்க’
‘கடிதத்தை என்ன செய்து வச்சிருக்காள், பார் ஒருக்கா!
‘நான் ஏன் பாக்கோணும்?முக்கியமான கடிதமெண்டால் அதை நீங்கதானே கவனமா எடுத்து வச்சிருக்கோணும், பிள்ளையள் எண்டால் இப்பிடித்தான் எடுத்து விளையாடுங்கள் ,கிறுக்குங்கள்,அதுசரி, மனுசர் மக்களோட கிடக்காமல் தனியக் கிடந்ததுகளுக்கு இப்பிடித்தான் இரணியப் புத்தி வரும்’ வித்தியரின் மனைவி மகளுக்காக வித்தியரை வார்த்தைகளால் வெளுத்து அடுக்கினாள்.
’ஐயோ! பிள்ளையை இப்படி அடித்து விட்டேனே கடவுளே! கடவுளே!’
இப்பொழுதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பியவராகத் தன்னைத் தானே நொந்துகொண்டார்.ஆனாலும்
‘இஞ்ச பார், எனக்கு வந்த புரமோஷன் கடிதத்தை என்ன செய்து வச்சிருக்கிறாள் எண்டு’
‘பிள்ளைக்கு உது புறமோஷன் கடிதமெண்டு தெரியுமே? அதுக்காக இப்பிடியா அடிக்கிறது ?என்ன மனுசன் நீங்க,சின்னப் பிள்ளையப் போட்டு இந்த அடி அடிச்சிருக்கிறீங்கள்.இப்படியா அடிக்கிறது?’சட்டையைக் கழற்றி மகளின் முதுகைக் காட்டினாள். தன்னைப் போல கண்ணும் மூக்கும் வாயும் என்று அடிக்கடி பேசிக்கொள்ளும் வித்தியருக்குத் தன் கைவிரல்கள் முதுகில் புடைத்துக் கிடப்பது தெரிந்தது.சில நிமிடத் தாடகையாக மாறியிருந்த மனைவியின் தாக்குதலை சமாளிக்க முடியாதவராக வித்தியர் முகங் கோணியிருந்தார். மகளைத் தூக்க மனைவியின் அருகே போனார்
‘இஞ்ச விடுங்கோ, காணும்….’
‘விடு,பிள்ளைய நான் பாக்கிறன்’
‘நீங்க பாத்தது காணும் தூக்காதீங்கோ…’
’பானு, அப்பாட்ட வாம்மா.’
வித்தியரின் குரல் தழுதழுத்தது. என்னதான் பிள்ளைக்காக வாதாடினாலும் ஒரு ஆண்மகன் அதுவும் தன் தவறை உணர்ந்து ஊமையாக அழுது தகிக்கும் கணவனின் நிலையை மனமானியில் வாசித்தறிந்த மனைவிக்கு மறுகணமே கோபம் தளர்ந்தது. மகளின் முதுகை நீவியபடியே,
‘ஒண்டுமில்ல ஒண்டுமில்ல. பிள்ளைக்கு ஒண்டுமில்ல…அப்பாட்டப் போங்கோ அப்பாட்டப் போங்கோ’
‘ங்ங்..போகமாட்டன்’
‘பிள்ளை அப்பாட்டப் வாங்கோ ‘
‘ம்ம் – வரமாட்டன்’
தந்தையின் அந்நேர அன்பை நிராகரித்தவளாகத் தாயின் தோளை இறுகப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். கேவிக் கேவி அழுகையை விழுங்க நினைக்கும் மகளைப் பார்த்து வித்தியர் தன்னைத் தானே உள்ளூரத் திட்டிக்கொண்டார்
வலுக்கட்டாயமாகத் தூக்க முனைந்த வித்தியர் ‘என்ர பிள்ளையெல்லா அப்பாட செல்லமல்லா வாம்மா…!’ கெஞ்சிக் கூத்தாடி சிறிது நேரத்தின் பின் ஒருவாறு மார்போடு சேர்த்துக்கொண்டார்.
‘அப்பா பிள்ளையைத் தெரியாமல் அடிச்சுப்போட்டன்,அழாதீங்கோ, அழாதீங்கோ, என்ர பிள்ளையல்லா..! அழாதையம்மா..!’
மார்போடு மகளை மணிவைரமாகப் போர்த்திக் கொண்ட வித்தியர் இப்போதும் பானுவுக்கு மேலாகத் துடித்தார். டோங்லீ நடப்பவற்றை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் ஆத்திரத்துக்கு அடையாளமாகத் தன் முன்னங்கால்களால் மண்ணைக் கிண்டி ஒரு பள்ளத்தை கிண்டிவைத்திருந்தது. அதன் வாயில் தொங்கிக் கொண்டிருக்கும் நாக்கில் ஈரலிப்புத் தன்மை காய்ந்திருந்தது.
அந்தச்சம்பவத்துக்குப் பின் பானு தன்னை அப்பா என்று அழைக்காதது வித்தியருக்கு என்னவோ போலவிருந்தது.பீங்கானிலிருந்து கை விரல்களில் சென்ற புட்டு தொண்டைக்குழிக்குள்ளால் பயணம்போனதென்பதை மாத்திரம் உணர்ந்திருந்தார்.இரவுச் சாப்பாடு எப்படி முடிந்தது? எப்படி இறங்கியது என டோங்லீ உட்பட யாருக்கும் விளங்கவில்லை.பானு வித்தியரின் தோளில் சாய்ந்து கண்ணயர, தாய் வாரியணைத்துப் படுக்கையில் கிடத்தினாள். மறுபடியும் மகளின் முதுகைப் பார்த்தார். தன் பற்களுக்கிடையில் அடித்த அந்த விரல்களை வைத்துக் கடித்துக்கொண்டார் ஒரு சிறுபிள்ளை போல.
காலையில் மகள் எழுந்ததும் ’அப்பா’ என்றாள். வித்தியருக்கு இப்போதுதான் உயிர் வந்தது. நிம்மதிப் பெருமூச்சொன்றினை சீதளமாக வெளியேற்றினார்.
‘குழந்தைகளின் சோகங்களும் சந்தோசங்களும் ஒரு குட்டித் தூக்கத்தோடு மறந்து விடும். வளர்ந்தவர்கள் நாங்கள்தான் ஆழ்மனதில் வைத்து வினோத உயிரினங்களாக அலைகின்றோம் ’வித்தியருக்கு தத்துவமொன்று எட்டிப்பார்த்தது. தன் இரு கைகளாலும் மகளை வாரியணைத்து முத்தாடினார். கண்கள் பூழையால் பிசுபிசுத்துக் கிடந்தது, கடவாயில் வீணி வாய்க்கால் வெட்டியிருந்தது. அவர் எதனையும் பொருட்படுத்தவில்லை. முதுகைத் தடவிக்கோண்டே கன்னத்தில் இரண்டு முத்தத்தை அழுத்திப் பதித்தார்.
வார இறுதி நாட்கள் இரண்டும் போயாவுமாக மூன்று நாட்களை வீட்டோடு செலவு செய்துவிட்டு மறுநாள் வித்தியர் வேலைக்குப் போக ஆயத்தமானார். தனது நீளச் சேர்ட்டின் கைகளை மடிக்கத்தொடங்கினார்.மனைவியும் வீட்டு வேலைகளோடு பரபரப்பாயிருந்தார். மனைவி நேற்றைய நாளில் எஞ்சியிருந்த இறைச்சியினை அடுப்பிலேற்றிச் சுடவைத்தார். தீப்பிடித்து நெகிழ்ந்த இறைச்சி வாடை வீட்டைத் தாண்டி டோங்லீயின் பூமரத்தடிக்கும் போய்ச் சேர்ந்தது. அவிழ்த்து விடப்பட்டிருந்த டோங்லீ இறைச்சி வாடையை மோப்பம் பிடித்துக்கொண்டு குசினி வாசலாலும் வீட்டு வாசலாலும் தன் நீளமான இரத்தச் சிவப்பு நாக்கை ஈரலிப்பாக்கித் தொங்கப் போட்டுக்கொண்டு செக்குமாட்டைப் போல சுற்றிவந்தது. டோங்லீ அங்கும் இங்கும் ஓடித் திரிந்தது வெளிக்கிட்டுக் கொண்டிருந்த வித்தியருக்கு எரிச்சலைத் தந்தது.
‘இந்த நாயை என்ன செய்யலாம்,ரெண்டு அடி போட்டால் தான் திருந்தும்’ மனைவியைப் பார்த்துச் சொன்னார்.
வித்தியரின் அருகே நின்று கொண்டிருந்த பானு அப்பாவையும் நாயையும் மாறி மாறிப் பார்த்தாள்.
‘டோங்லீ, ப்போ ,ப்போ..’ என்றாள்.
டோங்லீ போவதாகத் தெரியவில்லை
‘அப்பா, அண்டைக்கு எனக்கு அடிச்சீங்க அதப்போல ஒரு அடி வீச்சா அடியுங்க டோங்லீக்கு- அப்பதான் டோங்லீ போகும்’ என்றாள். மனம் எங்கோவோர் மூலையில் செம்மனச்செல்வியை நினைவுக்குக் கொண்டுவந்தது. காலையுணவுக்காக மனைவி ஆக்கிவைத்திருந்த புட்டில் கைவைத்த வித்தியருக்குக் கண்கள் பனித்துப் போயின.சாப்பிட மனம் வரவில்லை. கைகளை அலம்பினார். உதடுகள் துடித்தது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு கதிரையில் அமர்ந்தார்.
அவர் மனக்கண்ணில் டோங்லீயின் முதுகில் தன் கைவிரல் இருப்பது தெரிந்தது. ‘அப்பா,ஏன் சாப்பிடேலை?’ பானு கேட்டாள்.வித்தியர் மகளை மார்போடு அணைத்துக்கொண்டே மனைவியைப் பார்த்தார்.அவரது மறுகை டோங்லீயின் முதுகை வருடத் தொடங்கியது.
கனக.பாரதி செந்தூரன் (பரந்தன்)