செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஆதலால், காதல் செய்வீர்… | கனக.பாரதி செந்தூரன்

ஆதலால், காதல் செய்வீர்… | கனக.பாரதி செந்தூரன்

10 minutes read

காதல் என்பது காலங்காலமாய் உயிர்களிடத்தே தோன்றும் ஓர் ஒப்பற்ற உணர்வாகும். உயிர்கள் ஓர் ஒழுங்கிற் தோன்றுவதாலே தான் உயிர்களுக்கிடையேயும் காதல் ஓர் ஒழுங்கு முறையில் ஊடுருவிவிடுகிறது. தூக்கணாங்குருவி உலகில் எந்தவொரு பொறியியலாளனும் கட்டமுடியாத கூட்டைக்கட்டிப் பெண் தூக்கணாங் குருவியின் காதலை வென்று விடுகிறது. அன்றிற் பறவைகளிற் கூடப் பெண் அன்றில் இட்ட முட்டைகளை ஆண் அன்றில் அடைகாத்துத் தன் பெண் அன்றிலின் அன்பைப் பெற்றுவிடுகிறது. இப்படி எத்தனையோ உயிர்களில் காதல் நிலைகொண்டுள்ளது. காதல், மனிதருக்கு மட்டும் உரியது என்று எண்ணியிருப்போமேயானால் அது எமது சிந்தைப் பிழையென்பேன். உயிர்களுக்கே பொதுவானதுதானே காதல்.அது மனித உறவினுள் புகுந்துகொண்டு நாடி நாளங்களிற் கூட கனவுகளைக் காணச்செய்யும் அற்புத சக்தி. ஆயினும் என்ன? ஆண்,பெண் காதல்தானே காவியகாலந்தொட்டுப் பேசப்பட்டுவருகிறது. அதனால் தான் காதல் அகம்சார் பண்புகளால் நிலையான புகழ் கொண்டு இன்று வரையும் நிலைத்து வாழ்கிறது. இனியும் நிலைத்தே நீடூழி நிற்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

                படைப்பின் சாரம் ஆண். ஆணின் சாரம் பெண் என்கிறார் கவிக்கோ அப்துல்ரகுமான். எத்தனை உண்மை வரிகள். காதல் என்பது பழைய மது. நாம் தான் புதிய புட்டிகள். அதைப் பருகுந்தோறும் இன்பம் ஊற்றெடுக்கும். வாழ்வில் ஒருமுறையாவது காதலித்துவிட்டுச் சாகுங்கள் என்றார் பேரறிஞர் அண்ணா. அதனால்தான் என்னமோ முன்பே பாரதி ஆதலால் காதல் செய்யுங்கள் என்றாரோ!

                தமிழ்மொழி பக்தியின் மொழி என்பார் தனிநாயகம் அடிகளார். காதலின் வழியே பக்தி பிறக்கின்றது என்கிறது பதிகங்கள். சங்ககாலம் தொட்டுக் காதலின் சிறப்புக்களும் பிரிவுகளும் விரகவேதனைகளும் தமிழ்ப் புலவர்களால் மீதுறப் பாடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. காலங்காலமாய்த் தோன்றும் புலவர்கள் கூட காதலைத்தான் பாடித் தீர்க்க முயன்று படுதோல்வி அடைந்திருக்கிறார்கள். கவிஞர்களும் புலவர்களும்  எப்போதும் வியப்பிற்குரியவர்கள். காதலால் பிறர் படும் துயரைத் தாம் படும் துயராகப் பாடுகையில் “ஒழுங்கு தவறிய மின்சாரத்தைத் தீண்டுபவர்களைத் தீண்டும் மின்சாரம் போல” பிறரிடத்திலும் அக்காதலைப் பரவச்செய்துவிடுவர். சங்ககாலம் தொட்டு இதற்குத் தக்க சான்றுகளுண்டு. சங்ககாலம் மட்டுமல்ல வள்ளுவன், இளங்கோ, புகழேந்தி, கம்பன் என்று நீண்டு அப்பட்டியல் பாரதியை மோதிக் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கவிக்கோ, நா.முத்துக்கமார் என்று நீண்டுகொண்டே போகிறது.

                இரண்டாயிரமாண்டுகளுக்கும் மேலான காதல், இன்றும் புதுமையாகவே இருக்கிறதே இது என்ன? அதிசயம். எந்தக் குளிர்சாதனப்பெட்டியில் யார்? அடைத்து வைத்திருக்கிறார்கள் இன்னும் அமுதசுரபியாய் இனித்து வளர்ந்துகொண்டே போகிறதே? சங்ககாலத்தில் பதுமனார் என்னும் புலமைச் சான்றோன் தான் பாடிய அகப்பாடலில் “காதல் வாய்த்த தலைவியின் மனநிலையை தலைவியாகவே கூறுகின்றார்.” ஆண்பாற் புலவன் ஒருவனால் பெண்ணின் மனநிலைகளை உள்வாங்கி எப்படிப் பாடமுடிந்தது? என்பது இன்று வரையிலும் தமிழின் சிறப்புத்தான். தலைவி சொல்கிறாளாம் “நாம் வாழும் நெய்தல் நிலத்தில் என்னோடு கூடிக்களித்திருந்து இன்பம் துய்த்த தலைவன், இப்போது என்னைத் திருமணம் செய்யும் நாளை திருமணத்திற்காகப் பொருளீட்டுவதைக் காரணம் காட்டி காலம் தாழ்த்துகிறான்” அதனால் என் உள்ளம் நோகிறது. இதை எப்படி உரைக்கிறாள் தெரியுமா?

                என் தோழியே…! சாமப்பொழுது கழிந்துவிட்டது. நேரமோ நள்ளிரவானது. ஓசைகள் ஏதுமின்றி ஊரோ அடங்கிவிட்டது. அதுபோலவே பறவைகளும் விலங்குகளும் அயர்ந்துவிட்டது. இந்தப் பரந்த உலக மக்களும் எந்தவிதக் கவலையும் கோபமுமின்றி உறக்கம் கொள்கின்றனர். ஆனால் நானோ உலகமே ஓசையின்றிக் கிடக்கும் இவ்வேளையில் தூக்கமின்றி வாடுகிறேன் என்றாள். இதனை

                “நள்ளென்ற யாமம் சொல்லவிந்

                தினி தடங்கினரே மாக்கண் முனிவின்று

                நனந்தலை யுலகமும் துஞ்சும்

                ஓஒர் யான் மன்றது துங்சாது ஏனே?                                             எனக் காதல் வயப்பட்ட பெண்ணாகப் பாடி சங்கத் தலைவியை நம் கண்முன் நிறுத்துகிறார். காதல் என்றாலே தோழிகளின் காதுகள் சுமைதாங்கியாகி விடும் போலும்.

அணிலாடு முன்றிலாரோ, உடன்போக்கிற்குப் பெயர்பெற்ற பாலை நிலத்தில் வெந்து தகிக்கும் தலைவியின் மனநிலையை ஆளரவமற்ற வீட்டிலே குதித்தாடித் திரியும் அணிலோடு ஒப்பிடுகிறார். “அடி தோழி, என் காதலன் என் அருகில் இருந்தபோதெல்லாம் நான் மிகவும் மகிழ்ச்சியோடு திருவிழா நடைபெறும் ஊரில் இளசுகளின் மனம் மகிழ்வதைப் போன்ற மகிழ்வோடு நாட்களைக் கழித்தேன் ஆனால் இப்பொழுதோ தலைவன் என்னைப் பிரிந்து சென்றுவிட்டான் அதனால் என்மனம் ஆட்கள் இல்லாது வெறுமையுற்ற வீட்டிலே தனியாக அணில் துள்ளித் திரிவதைப்போல பொலிவிழந்து வாடுகிறேன்” என்று தோழிக்குச் சொல்கிறாள். பாவம் தோழியால் அவளை எப்படித்தான் ஆற்ற முடியும். அது காதலல்லவா? எப்படி ஆற்ற முடியும்.

                காதலர் உழைய ராகப் பெரிதுவந்து

                சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற

                அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்

                மக்கள் போகிய அணிலாடு முன்றிற்

                புலம்பில் போலப் புல்லென்று

                அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.

                                                                                என்று முன்றிலார் காதல் முள்ளை எம் நெஞ்சிற் தைத்து விடுகிறார். பாவம் அணிலாடு முன்றிலார் ஆணோ?பெண்ணோ? யாரறிவார். ஆனால் காதலை யாவரும் அறிவர் அதுதானே காதலின் சக்தி.

                வள்ளுவன் தன்னை உலகினுக்கே தமிழ்நாடு தர, வள்ளுவனோ இறவாப் புகழுடைய வள்ளவத்தை நமக்கருளினான். அத்தகைய பொய்யாமொழியார் காதலைக் கள்ளோடு ஒப்பிட்டு என்ன சொல்கிறார் தெரியுமா? கள் என்று சொன்னால் மகிழ்ச்சி த(வ)ராது அதைப் பருகினால் மட்டுமே மயக்கும். ஆனால் காதலன் தன் காதலியை நினைத்தாலே மனதில் மகிழ்வும் ஒரு மயக்கமும் ஒரேசமயத்தில் வந்துவிடும் என்கிறார்.

                உண்டார் கண் அல்லது அடுநறாக் காமம்போல்

                                கண்டார் மகிழ்செய்தல் இன்று                    இப்போது சொல்லுங்கள் எது மகிழ்வானது.

பெண்களின் மனதை ஆண்பாற் புலவர்கள் பாடுவதில் ஒரு நயம் இருக்கிறதென்றால் ஆணின் மனதை ஆணே பாடுவதும் யதார்த்தமல்லவா? ஒரு நயமல்லவா? அத்தகைய காதலை அள்ளித் தெளித்தவன் வேறு யாருமல்ல அவன் மகாகவியேதான். சரி இனி பாரதிக்கு வருவோம். 19ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பெருங்கவிஞன் பாரதி. பிறர் மனதை அறிந்து பாடுவதிலும் பாத்திரமாகிப் பாடுவதிலும் பெரும் சமர்த்தன் அவன். காதலால்  ஆண்மகனொருவன் அடையும் துயரை “கண்ணம்மா என் காதலி” குறிப்பிடம் தவறியது எனும் பகுதியில் பிரிவாற்றாமையினை, அதன் துன்பவெள்ளத்தினை அழுந்தி, அழுத்தி இப்படிப் பாடியிருக்கிறான்.

                “தீர்த்தக் கரையினிலே தெற்கு முலையில்

                செண்பகத் தோட்டத்திலே

                பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே

                பாங்கியோடு என்று சொன்னாய்

                வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா – கண்ணம்மா

                மார்பு துடிக்குதடி

                பார்த்தவிடத்திலெல்லாம்  உன்னைப் போலவே

                பாவை தெரியுதடி..

                மேனி கொதிக்குதடி தலை சுற்றியே

                வேதனை செய்குதடி

                வானிலிடத்தையெல்லாம் இந்த

                வெண்ணிலா வந்து தழுவுது பார்

                மோனத்திருக்குதடி இந்த வையகம்

                மூழ்கித் துயிலினிலே

                நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர்

                நரகத்து உழலுவதோ?..                                                   என்று நீட்டிச் செல்கிறான்.

தினமும் காதலியைக் கண்டும் தொட்டும் முகர்ந்தும் மகிழ்ச்சி கொள்ளும் காதலன் அன்றும் வழக்கம்போல் தாம் சந்தித்துக்கொள்ளும் இடத்திற்குச் சந்திக்க வரச்சொல்கிறான். அவளும் வருகிறேன் காத்திரு என்று நீராடும் தீர்த்தக் கரையையும் அங்குள்ள தெற்கு மூலையையும் நினைவுபடுத்துகிறாள். வானில் நிலா தோன்றும் வேளையில் நிச்சயம் தான் வருவதாக குறிப்பிடமும் கொடுக்கிறாள். வரும்போது பாங்கியையும் துணைக்கு அழைத்து வருகிறேன் என்கிறாள். ஆனால் ஏனோ தெரியவில்லை அவள் வாராது போகிறாள். காத்திருந்த காதலனோ  துடித்து விடுகிறான். அவள் வாராத அந்த இராத்திரியின் நீளம் அவனுக்கு பெரும் வேதனையைக் கொடுக்கிறது. தன் மனதைத் தானே தேற்றத் துணிகிறான். “நீ வாராததால் என் மேனி கொதிக்கிறது, தலை சுற்றுகிறது, துன்பத்தையளிக்கிறது, நிலவு கூடக் குறித்த நேரத்திற்கு வானில் வந்து தன் காதலனைத் தழுவிக்கொள்கிறது. முழு உலகமுமே அரவமின்றித் துயில் கொள்கிறது. ஆனால் நான் மட்டும் உன் பிரிவால் நரகத்தில் உழல்கிறேனே! என்று அனலிடைப் பட்ட மெழுகெனத் தவித்துவிடுகிறார்.இதனைத்தான் வாலி நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும் நீயென்னை நீங்கிச்சென்றாலே என்றாரோ? யாரறிவார்.

                பதுமனாரும் அணிலாடு முன்றிலாரும் பெண்ணாக மாறிச் சொன்ன காதலை அதன் பிரிவாற்றாமையை பாரதி ஓர் ஆணாகி நினைந்துருகுகிறார். இங்கே காதற் பிரிவாற்றாமையால் மூவருமே ஒருமிக்கின்றனர். என்பதே இலக்கிய இரசிகர்களின் எண்ணமாகும்.

                காலம் மாறலாம் நம் காதல் மாறுமா? என்று வைரமுத்து கேட்பது சரிதானே? இளந்ததை மீண்டும் பெறும் போதுதான் காதலின் மதிப்பு அதிகரிக்கும். உடல் என்ற ஊடகத்தின் வழியே உள்ளம் சென்று சேரும் பயணம் தானே காதல். ஒரே கடல்தான் ஒரு துளி உப்பாகிறது ஒரு துளி முத்தாகிறது அதுபோலத்தான் காதலும். காதல் பந்தி வைத்து அதில் தன்னை இலையாக்கி நம்மையே பரிமாறி உண்டு விடுகிறது. ஆதலால் காதல் செய்வீர் ஏனென்றால் காதல் உலகத்து இன்பத்திற்கெல்லாம் தலைமையானதாகும்.

கனக.பாரதி செந்தூரன்

பரந்தன்

காதலர் தினம் – 14.02.2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More