பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணி எப்போது அடிப்பார்கள் என்று ஏக்கத்தோடு கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான், நான்காம் வகுப்பு படிக்கும் சேரன்.
அவனது சிந்தனையில்,
“பெரியதம்பி! நா வேலைக்கிப் போயிட்டு வர்றேன். தம்பிக்கு ஒடம்பு சரியில்ல. அவன் வூட்டுல தூங்கட்டும். நா சாயந்தரம் வரும்போது தம்பிக்கு மருந்தும் திங்கிறதுக்கு தூள் கேக்கும் வாங்கி வர்றேன். மத்தியானத்துக்கு பள்ளிக்கூடத்துல சோறு வாங்கி வந்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று சொல்லிக்கொண்டே சோத்துப் பானையில் இருந்த நீராரத்தை உப்பு போட்டு குடித்து விட்டு சுருமாடு துணியை எடுத்துக்கொண்டு கட்டட வேலைக்கு அவன் அம்மா புறப்பட்டு சென்றது தான் ஞாபகத்தில் அலைமோதிக் கொண்டே இருந்தது.
மணியடித்ததுதான் தாமதம். வேகமாக தட்டைக் கழுவிவிட்டு வரிசையில் நிற்பதற்குள் அஞ்சாறு பேர் நின்று விட்டனர். எப்படியோ சோறை வாங்கிக்கொண்டு விறுவிறுவென நடைபோட்டான். வெயிலின் ஆட்சிக்கு அவனது கால்கள் ஈடு கொடுக்க வில்லை. கால்கள் சுட்டுப்பொசுக்கியது. மரங்கள் கூட கண்ணீர் சிந்துவது போல் காட்சியளித்தன. பசிமயக்கம் பாடாய்படுத்தியது.
தம்பிக்கு சோறு கொடுக்கனும். வீட்டிலும் சோறு இல்லை. அம்மாவின் வார்த்தைகளை அசைபோட்டவாறு ஓடத் தொடங்கினான். அவனது வருகையை எதிர்பார்த்திருந்த ஒழுங்கற்ற கல் ஒன்று காலை தடுக்கிவிட “அம்மா” என்ற அலறலுடன் விழுந்தான்.
விழுந்தவன் வேகமாக எழுந்தான். தட்டில் மிஞ்சியது ஒரு பிடி சோறு தான். அந்தச் சோறை வாங்குவதற்கு பள்ளிக்கூடத்து ஆயம்மாவிடம் கெஞ்சியது அவனுக்குத்தான் தெரியும். “அக்கா, அக்கா! இன்னங்கொஞ்சம் போடுக்கா” “சனியனே பத்தாதா ஒனக்கு” அழுகையோ அவனது கன்னத்தை தழுவிக் கொண்டிருந்தது.
வேகமாக நடந்தான். அண்ணணைப் பார்த்ததும் தம்பிக்கு தாங்க முடியா மகிழ்ச்சி. பிஞ்சுக் கையால் அஞ்சாறு சோறையும் அவனுக்கு ஊட்டினான். தம்பியின் பார்வையோ “நீ சாப்பிடலையா” என்பது போலிருந்தது. “நா சாப்புட்டுட்டேன்” என தனது கண்களாலே உணர்த்தியவாறு தனது முழங்காலை தடவினான்.
இரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. விழுந்த போது காயம் ஏற்பட்டது அவனுக்கு இப்போது தான் தெரிந்தது. தம்பிக்கு சோறு ஊட்டிய சந்தோசத்தில் அவனுக்கு பசியும் கால்வலியும் காணாமல் போனது. தம்பிசாப்பிட்ட அந்த ஒரு பிடி சோறில் தனது வயிறும் மனதும் நிறைந்தவனாக காணப்பட்டான் சேரன்.
– சோலச்சி
நன்றி : சிறுகதைகள்.காம்