“அரஹர அரஹர மஹாதேவா” எனச் சொல்லிக் கொண்டும் கைகளை அதற்கேற்பத் தட்டிக் கொண்டும் நந்தனும் அவனது கூட்டாளிகள் பதினொரு பேரும் திருப்புன்கூர்த் திருத்தலத்திலிருக்கும் சிவலோகநாதரை தரிசித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சிவலிங்கத்தைக் கண்ணாரக் கண்ட ஆனந்தப் பெக்கில் அவர்கள் மூழ்கி இருந்தனர். பக்திப் பரவசத்தில் தங்களையே மறந்தவர்களாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் நடந்து சென்றனர். வெறியன் மட்டும் அப்படியில்லை. மனதில் சில சந்தேகங்கள் தோன்றி அவனை சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்தன. உடனே நந்தனிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டுமென மனது தவித்தது. ஆனால் எந்தப் பேச்சையும் காது கொடுத்துக் கேட்கும் மனநிலையில் நந்தன் அப்பொழுது இல்லை என்பதை உணர்ந்திருந்ததால் வெறியன் எதையும் நந்தனிடம் கேட்டுக் கொள்ளவில்லை. பெரும் பாக்கிம் பெற்றவர்கள் அல்லவா இவர்கள்! சிவதரிசனம் கிடைப்பபதென்ன அவ்வளவு எளிதா! அதுவும் இவர்களைப் போல் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு! இதை சிவனின் திருவிளையாடல்களில் ஒன்றெனக் கூடச் சொல்லலாமே!
திருப்புன்கூர் சிவலோகநாதர் ஆலயத்தில் இருந்த நந்தி ஈசனின் கட்டளையை ஏற்று சற்று விலகிக் கொண்டதனால் அல்லவோ நந்தனும் அவரது கூட்டாளிகளும் மூலவரைத் தூரத்தில் நின்றேனும் தரிசிக்க முடிந்தது!
அன்று காலையில் ஆண்டையிடம் நந்தனும் அவரது நண்பர்களும் எவ்வளவோ மன்றாடியும் ஆண்டை அவர்களைக் கோயிலுக்குப் போக அனுமதிக்கவில்லை. ஈஸ்வரன் மீதிருந்த ஈடில்லா ஈர்ப்பின் காரணமாக நந்தன் ஆண்டையின் கட்டுப்பாட்டையும் மீறி நண்பர்களை அழைத்துக்கொண்டு திருப்புன்கூர் வந்து விட்டான். திரும்பிப் போனபின்பு ஆண்டையிடம் என்ன தண்டனை கிடைக்குமோ என்பதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படும் நிலையில் இல்லை. அவனது பக்திப் பரவசத்திற்கு முன்பு இதுபோன்ற எந்தத் தடையும் பொருட்டல்ல.
ஆண்டையின் தடையைத் தாண்டி ஆண்டவனை தரிசிக்க வந்த இடத்தில் சாதி விதித்திருந்த தடையைத் தாண்டி சாமியிடம் அவர்களால் நெருங்க முடியவில்லை. ஆலயத்தின் முன்பு அழுது புரண்டுகொண்டிருந்தான் நந்தன். சிவன் மீது அவன் கொண்டிருந்த எல்லையில்லாக் காதலும் பக்தியும் அவனைப் பைத்தியமாக்கி இருந்தது. தாயைப் பிரிந்த கன்றைப்போல் சிவனைக் காணமுடியாமல் நந்தன் துடித்துக் கொண்டிருந்தான். அவனது பக்தியின் தீவிரத்தைப் பார்த்த துவார பாலகர்கள் நந்தன் வந்திருக்கும் செய்தியை இறைவனுக்கு அறிவித்தனர். சற்று யோசித்த ஈசன் சதாசர்வ காலமும் தனக்கு நேர்எதிரே வீற்றிருக்கும் நந்தியை சற்று விலகிக்கொள்ளச் சொன்னான். ஈசனிட்ட கட்டளையை ஏற்று நந்தியும் சற்று விலகிக்கொண்டது.
தெருவில் நின்றபடியே தூரத்துக் கருவரையில் வீற்றிருந்த கடவுளை கண்ணாரக் கண்டு களித்தனர் நந்தனு அவனது நண்பர்களும். நந்தனக்கோ தனது பிறவிப் பயனையே அடைந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. ஆண்டையிடம் பெறப்போகும் பிரம்படியைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவில்லை. தனது பாவங்கள் எல்லாம் தொலைந்து இந்தப் பிறவியோடு தனது பிறவித் தொடர் அறுந்துவிட்டது என்று நம்பினான்.
நண்பர்களை அழைத்துக்கொண்டு ஆண்டவனைப் புகழ்ந்து பாடியபடி வீடு திரும்பினான் நந்தன். வீட்டிற்கு வந்தபின்புதான் யதார்த்த வாழ்வு என்னவென்பது அவனுக்குப் பிடிபட்டது. வயல் வேலைகள் அனைத்தும் போட்டது போட்டபடி கிடந்தன. ஆண்டை கோபத்தின் உச்சத்தில் இருப்பதாகச் சேரியில் பேசிக்கொண்டார்கள். ஆண்டையின் உத்தரவில்லாமல் திருப்புன்கூர் சென்றுவந்தது குற்றம்தான். அதற்காக நந்தனும் அவனது சகாக்களும் ஆண்டையிடம் சுமக்கச் சுமக்கப் பிரம்படி வாங்கினார்கள். வெறியனுக்குப் பிரம்படி கொடுத்த வலியைவிடக் கொடுமையான வலியை அவனது மனதிலிருந்த கேள்விகள் கொடுத்துக் கொண்டிருந்தன.
இரண்டு நாட்கள் கழித்து நந்தனை வெறியன் பார்க்கச் சென்றான்.
” என்ன வெறியா இந்தப் பக்கம்” என்று நந்தன் கேட்க, வெறியன் ” ஒங்க கிட்ட ஒரு விசயம் கேக்கணும்” என்றான்.
” கேளு ” என்றான் நந்தன்.
” ரெண்டு நாளைக்கு முன்னாடி திருப்புன்கூர் போனோமே! அப்ப அந்த ஆண்டவன் நந்தியை வெலகச் சொல்லி நமக்கு தெரிசனம் கொடுத்தாரு”
“ஆமா! அதுதான் அந்தக் கடவுளின் கருண. நம்ம பக்திக்குக் கெடச்ச பரிசு. எளிய சாதியில பெறந்த நமக்கு காட்சியளிச்சது நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்!” என்றான் நந்தன்.
” கடவுளு நம்ம மேல நெசமான அன்பு வச்சவரா இருந்தா இந்த மனுசப் பயக சொல்லிக்குத் திரியிற சாதிக்கு அவரும் கட்டுப்பட்டு நம்மல வெளியவே நிக்க வச்சு அனுப்பி இருப்பாரா? உள்ள வாங்கடான்னு கூப்பிட்டு இருக்க மாட்டாரு? சரி, இந்த மனுசப் பயலுகளுக்குப் பயந்தவராக் கூட இருக்கட்டும், நம்ம பக்திய மதிச்சிருந்தா அவரே வெளிய வந்து நம்மலுக்கு ஆசி வழங்கி இருக்கலாமே! நம்ம கிட்ட வந்தா தீட்டாகிப் போகும்னு அவரும் பயந்துட்டாரோ? தெருவுல நின்னு வழிபடுறதுக்கு நம்ம வீட்டுல இருந்தே சாமியக் கும்புட்டிருக்கலாமே!
நம்ம ஆண்டயும் நம்மல வீட்டுக்குள்ள விடமாட்டாரு, அந்த ஆண்டவனும் நம்மல கோயிலுக்குள்ள விடமாட்டாரு. அப்பிடின்னா ரெண்டு பேத்துக்கும் என்ன வித்தியாசம்” என்று கேட்டான் வெறியன்.
“ கடவுளைப் பத்தி தப்பாப் பேசாதப்பா! அவரு செய்யுற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு அர்த்தமிருக்கும். அது நமக்குப் புரியாது” என்றான் நந்தன்.
“ எனக்கொரு விசயம் நல்லாப் புரியுது. பெராமணர்க கர்ப்பக்கிருகத்துக்குள்ள போயி சாமியத் தொட்டுக் கும்புடலாம். அதுக்கடுத்த சாதிக்காரக கர்ப்பக்கிருகத்துக்கு வெளிய நின்டு சாமிய தரிசிக்கலாம். நம்மலமாரி எளிய சாதிச் சனங்க கோயிலுக்குள்ளய போயிரக் கூடாது. அம்புட்டு ஏன்? நாமெல்லாம் தெருவுல நின்டு கூட சாமியப் பாத்துரக் கூடாது.அதுக்குத்தான் திட்டம் போட்டு நந்தியக் கொண்டாந்து சாமிய மறச்சு ஒக்கார வச்சிருக்காக. அந்தக் கடவுள்கூட நம்ம கிட்ட வந்தா தனக்குத் தீட்டாப் போகும்ணு நெனச்சுத்தான தூரத்துல இருந்துகிட்டே நந்திய வெலகச் சொன்னாரு.
நந்தியும் கல்லுதான் சாமியும் கல்லுதான். நந்திக் கல்லு தானா வெலகுறப்ப சாமிக் கல்லுக்கு எழுந்து நம்கிட்ட வரமுடியாமப் போயிருமா? நம்கிட்ட வாரதுக்கு அதுக்கு இஷ்டமில்ல. நந்தா! இந்தச் சாமி நமக்கு பிரயோசனப் படாது. நம்ம சேரிச் சனங்க சொல்றதுதான் சரி. கருப்பணசாமிதான் நமக்குக் கண்கண்ட தெய்வம்” என்று வெறியன் சொல்ல நந்தன் பதிலேதும் கூறமுடியாமல் விழிபிதுங்கி நின்றான்.
– மனோந்திரா
நன்றி : கீற்று இணையம்.காம்