கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவுகரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.
நம்முடைய கண்கள் மின்னணுக் கருவிகளைத் தொடர்ந்து பார்க்கும் வகையில் அமையவில்லை என்பதாலேயே, இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்காக நவீனத் தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயல்படும் காலகட்டத்திலும் நாம் வாழவில்லை. ஆனால், கண்கள் பாதிக்கப்படாமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது?
கணினித் தொழில் சார்ந்தவராக நீங்கள் இருந்தாலும், உங்கள் கண்களுக்கு அடிக்கடி புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ளுங்கள். இதற்கு முதல் வழி, விழியின் நண்பனாக மாறுவதுதான். அலுவலகச் சூழலும் பார்வையைப் பாதுகாக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும்.
பார்க்கும் விதம்
பொதுவாகக் கணினியில் வேலை செய்யும்போது, நம்மை அறியாமல் மணிக்கணக்கில் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். “இப்படிச் செய்வதால் சுருங்கி விரிய வேண்டிய கண் தசை இறுகிப் போகிறது.
இதற்குத் தீர்வு என்ன?
20-20-20 கொள்கையைப் பின்பற்ற வேண்டும். கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி 20 அடி தொலைவில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். “இதன் மூலம் கணினியுடன் கட்டி போடப்பட்டிருந்த கண் தசைகளுக்குச் சிறிது நேரம் ஆசுவாசம் கிடைக்கும்.
சாதாரண மனிதர் ஒருவர் கண்களைச் சிமிட்டும் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்குதான் கணினியில் வேலை பார்ப்பவர் சிமிட்டுகிறார் என்கின்றன இது தொடர்பான ஆய்வுகள். இதனால் கண்கள் வறண்டு போகின்றன.