செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கோவிட் காலத்தில் அதிகரிக்கும் குழந்தையின் உடல் எடை! தீர்வு என்ன?

கோவிட் காலத்தில் அதிகரிக்கும் குழந்தையின் உடல் எடை! தீர்வு என்ன?

2 minutes read

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி.

கொரோனா காலத்தில் என் குழந்தை உட்பட பல குழந்தைகளும் உடல் எடை அதிகரித்துள்ளார்கள். இதன் காரணம் என்ன? எடையைக் குறைக்க என்ன வழி?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.ஸ்ரீனிவாஸ்.

கொரோனா தொற்றும் ஊரடங்கும் எல்லோரது வாழ்க்கை முறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகளின் வாழ்க்கைமுறையும் விதிவிலக்கல்ல. நேரம் தவறிய சாப்பாடு, அதிக நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது, மனச்சோர்வின் காரணமாக வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடுவது என உணவுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே உடல்பருமனுக்கான பிரதான காரணம்.

நடப்பது, விளையாடுவது, பள்ளி சென்று வருவது என உடல் இயக்கத்துக்கான வாய்ப்பே இல்லாமல் மாதக் கணக்கில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது இன்னொரு காரணம். ஆன்லைன் வகுப்புகள், வீடியோ கேம்ஸ் என செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. தொலைக்காட்சி பார்க்கும் நேரமும் அதிகரித்திருக்கிறது. குழந்தைகளின் தூங்கும்நேரம் முறைதவறிப் போயிருக்கிறது. இவையும் உடல்பருமனுக்கான காரணங்கள்.

குழந்தையின் எடையை குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது பார்த்து, அதிகரித்திருப்பது தெரிந்தால் உடனே அதற்கான காரணம் மற்றும் தடுக்கும் முறையை யோசிக்க வேண்டும்.

குழந்தைகளை எளிமையான வீட்டுவேலைகளைச் செய்யச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு உடல் இயக்கமும் இருக்கும், பெற்றோரின் வேலைப்பளுவும் குறையும். குழந்தைகளின் மன அழுத்தமும் குறையும்.

குழந்தைகள் வீட்டில் இருந்தாலும் அவர்களை சரியான நேரத்துக்குச் சாப்பிடவும், ஆரோக்கியமான சரிவிகித உணவுகளைச் சாப்பிடவும் பழக்கப்படுத்த வேண்டும்.


குழந்தைகளுக்கு எதற்கு உடற்பயிற்சி என்று நினைக்காமல் நடைப்பயிற்சி போன்ற எளிய பயிற்சிகளை தினமும் 45 முதல் 60 நிமிடங்கள் செய்ய வைக்கலாம். ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரம் தவிர மற்ற நேரத்தில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்ல வேண்டும். பிஸ்கட், சாக்லேட், ஐஸ்க்ரீம், சிப்ஸ், பாட்டில் குளிர்பானங்கள் போன்றவற்றை உணவுகளை 100 சதவிகிதம் தவிர்க்கச் சொல்லிப் பழக்க வேண்டும்.

யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் மூலம் குழந்தைகளை மன அழுத்தமின்றி வாழப் பழக்கலாம். குழந்தைதானே…. குண்டாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என நினைக்காமல், வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற சரியான எடையில் இருக்க மேற்சொன்ன வழிகளில் குழந்தைக்கு உதவ வேண்டிய கடமை பெற்றோருக்கானது.”

நன்றி – விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More