வாழை முதல் நாளே பார்க்க நினைத்து வேலைப்பளு காரணமாக இரண்டு நாள் தாமதமாகதான் பார்த்தேன்.
அதற்குள் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் படம் குறித்து அலசி துவைத்து காயப் போட்டிருந்தார்கள்.
எதிர்மறை விமர்சனங்களை மீறி திரையரங்கிற்குள் போனால் அரங்கம் முழுக்க நிரம்பி வழிகிறது.
வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களின் வாழ்வு தான் படத்தின் கதைக்கரு.
கொஞ்சம் பிசகினாலும் டாக்குமெண்ட்ரியாக மாறக்கூடிய கதைக்கருவை இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது திரைக்கதை வடிவமைப்பால் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களின் வரிசையில் வாழை படத்தை இடம்பெற வைத்துவிட்டார்.
அட்டகாசமான இயக்கம்..
இதை எழுதும்போதுகூட ஏதேனும் குறைகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன்.. அப்படி எதுவும் தோன்றவில்லை.
ஆனால் இந்த படத்தை மாரி செல்வராஜ் எடுத்ததால் வாழை ஒரு சாரார் படம் போல் சிலருக்கு தோன்றியிருக்கலாம்..
அப்படி நினைக்க வேண்டிய அவசியமில்லை.
“அவன் மட்டுமா கஷ்டப்பட்டான்.. நாங்களும் தான் கஷ்டப் பட்டோம்..” என்று பலரும் கடுப்பில் எழுதுவதைப் பார்த்தேன்.
இதையே வெற்றிமாறனோ பாலாவோ வசந்தபாலனோ எடுத்திருந்தால் இந்த விமர்சனங்களே வந்திருக்காது.
இந்த படம் வெறுமனே மாரியின் வாழ்வியலோ.. வாழைத்தார் சுமப்பவர்கள் குறித்தானது மட்டுமல்ல..
அவர் தனக்கு தெரிந்த கதை மாந்தர்களின் வாழ்வை பதிவு செய்திருக்கிறார்.
வாழைத்தார் சுமக்க குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே போவதில்லை. இன்று நூறுநாள் வேலைக்குப் போகிறவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகமா என்ன..?
இதே படத்தை தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு சிறுவன் வளர்ந்து படமாக எடுத்திருந்தால் அவனும் இப்படிதான் பதிவு செய்வான்.
அதுபோல் தூக்கத்தை தியாகம் செய்து அதிகாலையில் எழுந்து வீடு வீடாக பால் ஊற்றும் பால்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கும்..
மளிகைக் கடைகளில் கால் நோக நின்று பணிபுரியும் குழந்தைகளுக்கும்.. குடும்ப கஷ்டத்திற்காக அதிகாலையில் எழுந்து வீடு வீடாக போய் பேப்பர் போடும் சிறுவர்களுக்கும்..
ஏன் இன்று படிப்பு நேரம் போக பகுதி நேரமாக ஸ்விக்கி சொமோட்டாக்களில் குடும்ப சூழலுக்காக டெலிவரி வேலைப் பார்க்கும் தொழிலாளர்கள் என்று உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது வாழை படம்.
மாரி செல்வராஜ் பேசும் தலித் அரசியல் நமக்கு உடன்பாடற்றதாக இருக்கலாம்.. அவரது பேச்சுகளை நாம் விமர்சிக்கலாம்..
ஆனால் அவரது இந்த படைப்பில் விமர்சிக்க அப்படி எதுவும் இல்லை.
வாழை தமிழ் சினிமாவின் பொக்கிசம்..
படத்தில் காட்டப்படும் அந்த விபத்தில் உண்மையில் அன்று பலரை காப்பாற்றியவர்கள் அருகே இருந்த இஸ்லாமியர்களும் மறவர்களும்தான். ஆனால் படத்தில் அது இடம்பெறவில்லை.. அது இடம்பெற வேண்டும் என்ற அவசியமில்லை.
ஏனெனில் உண்மைகளை தழுவி எடுக்கப்படும் படங்கள் வேறு.. உண்மைகளை அப்படியே எடுக்கும் டாக்குமெண்ட்ரி படங்கள் வேறு.. இந்த விபத்தை டாக்குமெண்ட்ரியாக எடுத்துவிட்டு விபத்தில் உதவியர்களை பதிவு செய்யாமல் விட்டிருந்தால் அது விமர்சனத்திற்குரியதே.
ஆனால் வாழை உண்மைகளை உள்வாங்கி புனைவுகளுடன் எடுக்கப்பட்ட படம். இதில் எந்த இடத்தில் வசனம் வேண்டும்.. இசை வேண்டும்.. எந்த இடத்தில் அமைதி வேண்டும் என்பதை இயக்குனரின் புனைவு தான் முடிவு செய்கிறது. அது படைப்பு சுதந்திரம்.
படைப்பாக வாழை படம் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்றால் மிகச்சரியாக உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த அரசியல் விமர்சங்களைக் கடந்து வாழைப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. மீண்டும் கூட பார்ப்பேன்.
இந்த படம் 80 , 90களில் அரசுப்பள்ளிகளில் படித்த அத்தனைப் பேருக்கும் நெருக்கமானதாக இருக்கும்.
பூங்கொடி டீச்சர் போல் எனக்கும் பிடித்த ஆசிரியைகளும் ஆசிரியர்களும் இருந்தார்கள்.
டீச்சர் டிரெய்னிங் முடிதுவிட்டு பயிற்சிக்கு வரும் இளம் ஆசிரியைகள் நமது வகுப்புக்கு பாடம் எடுக்க வந்தால் அவ்வளவு குஷியாக இருக்கும்.. அவர்களிடம் என்ன வேண்டுமானலும் பேசலாம்.. வகுப்பே ஜாலியாக இருக்கும். பூங்கொடி டீச்சரும் சிவனணைந்தானும் வரும் காட்சிகள் எல்லாம் அந்த காலத்தை நினைவு படுத்துகிறது.
அதுபோல் எங்கள் வயலில் கதிர் அறுத்து அதை சுமந்து களத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும்போது கழுத்து உள்ளே போயிருக்கும்.. சிவனணைந்தானைப்போலவே நானும் என் பாட்டியிடம் சண்டைப் போட்டிருக்கிறேன்.
ஒருமுறை கடும் வறட்சியான காலம் வந்தது.. வீட்டில் வளர்த்த மாடுகளுக்கு வாழை மூடு எனப்படும் அண்டி தான் உணவு.. அப்போது தாத்தா பொன்னையா காலமாகிவிட்டதால் ராஜாமணி சித்தப்பா தான் எங்கள் மீது பரிதாபப் பட்டு வாழை மூடுகளை தோண்டி எடுத்து கொடுப்பார்.
கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கும் பயலுகளைப் பார்த்து விளையாட முடியாத கடுப்புடன் அந்த மூடுகளை ஓலைப் பெட்டியில் தூக்கி சுமந்து கழுத்து எலும்பு தேய்ந்துபோன நாட்களும், அதே மாடுகளை பாட்டி விற்றபோது வந்த வேதனை எல்லாம் வாழை படம் பார்த்ததும் நினைவுக்கு வருகின்றன.
சிவனணைந்தானாக வரும் பொன்வேலும் அவன் நண்பன் சேகராக வரும் ராகுலும் என்னமா நடிச்சுருக்காங்க.. கதையின் நாயகனாக வரும் பொன்வேல் பயலுக்கு முதல் படம் என்றால் நம்ப முடியாது.. நாடி நரம்பு அத்தனையிலும் நடிப்பு ஊறிப்போனவனாக படம் முழுக்க நிறைந்து நிற்கிறான்.
கலையரசன் , திவ்யா துரைசாமி, ஆசிரியையாக வரும் நிகிலா, அம்மாவாக வரும் ஜானகி என அனைவரும் கதாப்பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் கடைசி காட்சிகளில் ஜானகி உருக வைத்துவிட்டார்.. ஒரு காட்சியில் பேசினாலும் சேகரின் அம்மா அரங்கத்தை சிரிப்பலையில் அதிர செய்துவிட்டார்.
படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை என்றால் அதற்கு சமமாக தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும், சூரிய பிரதாமனின் எடிட்டிங்கும் கலை இயக்குனர் குமார் கங்கப்பனின் உழைப்பும் பெரும் பலமாக வருகிறது.
“நம்ம ஊர்ல ரஜினி படம் தான ஓடுது.. கமல் படம் எங்க ஓடுது.. ” என்பதில் ஆரம்பித்து படத்தில் ரசிக்கும் படியான வசனங்கள் பல இருக்கின்றன. நொடிப்பொழுதில் வந்து அரசியல் பேசிச் செல்லும் காட்சிகளும் உண்டு.
அன்றைய இடதுசாரி தோழர்களை (கவனிக்க: அன்றைய.. 😉 ) பெருமைப் படுத்தும் விதமான காட்சிகள் இருக்கின்றன.
ஆசிரியை நடனம் சொல்லிக் கொடுக்க பயன்படுத்தும் பஞ்சு மிட்டாய் சேலை பாடலும் காட்சிகளும் அவ்வளவு பொருத்தமாக இருக்கின்றன.
இறுதி காட்சிகளில் வரும் பிள்ளைக்காரி இசக்கிகளும் அதற்கு புதுகை சித்தன் ஜெயமூர்த்தி பாடும் பாடலான பாதவத்தி எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுகிறது..
காட்சிகளும் அவரது குரலும் நம் மனதிற்குள் ஊடுருவி கலங்கடிக்கிறது..
அந்த பாடல் முடிந்த பின்பும் திரையரங்கில் அத்தனை பேரும் கணத்த அமைதியோடு எழுந்திருக்க மனமில்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்.
அதுவே ஒரு ரூபாய்க்கு வாழைத்தார் சுமந்த மாரி செல்வராஜின் சுமைக்கு கிடைத்த மிகப்பெரிய கூலி உயர்வு..
வாழ்த்துகள் மாரி செல்வராஜ்.. 🙂
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா