ஒவ்வொரு மனிதனும் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மனதை தன்வசப்படுத்தவும், தனக்குள் உள்ள இறையாற்றலை இயற்கை சக்தியை உணரவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மூளை நன்கு சிறப்பாக இயங்குவதற்கு முத்திரைகள்
மூளை செல்கள் நன்கு இயங்க வேண்டும். மூளையில் கட்டி வரக்கூடாது. மூளை காய்ச்சல் வரக்கூடாது. மூளையில் உள்ள நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்க வேண்டும். நமது எண்ணங்கள் நல்ல நேர்முகமான எண்ணங்களாக இருக்க வேண்டும்.
நமது எண்ணங்கள் தீய எண்ணங்களாக அதிகரித்து நமது சொல், செயல் பிறருக்கு தீங்கு விளைவித்தால் மனிதர்கள் கேட்கும் கேள்வி உனக்கு மூளை இல்லையா, எப்படி இவ்வாறு கீழ்த்தரமான செயல்களை செய்ய முடிகிறது என்று தான் கேட்பார்கள். மூளை இருக்கிறது. ஆனால் அங்கு சரியாக ரத்த ஓட்டம், பிராண ஓட்டம் சரியாக இல்லை. மூளை செல்கள் புத்துணர்வு பெறவில்லை. நாம் செய்கின்ற இந்த முத்திரை பயிற்சி மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுக்கின்றது. மூளையில் உள்ள நரம்பு மண்டலங்கள் பிராண ஆற்றல் பெற்று இயங்கும். எண்ணங்கள் தெளிவாகும். நல்ல எண்ணங்கள் மட்டும் மலரும். தீய எண்ணங்கள் வளராமல் தடுக்கும்.
சின் முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து சுகாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் 20 வினாடிகள் கவனம் செலுத்தவும். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியை சேர்க்கவும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கியிருக்கவும். இருக்கைகளிலும் செய்யவும். விரல் நுனியில் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.
ஒரு மனம் விரல் நுனி அழுத்தத்தை கவனிக்கவும். மற்றோரு மனம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும். ஆழ்ந்த மூச்சு: மீண்டும் ஒரு முறை இருகைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். இரு மூக்கு துவாரம் வழியாக மிக மெதுவாக மூச்சை இழுக்கவும். உடன் மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதேபோல் பத்து முதல் இருபது முறைகள் செய்யவும்.
மூச்சை இழுக்கும் பொழுது வயிறு லேசாக வெளி வரவேண்டும். மூச்சை வெளிவிடும்பொழுது வயிறு லேசாக உள்ளே செல்ல வேண்டும். உங்கள் உணர்வை வயிற்றில் வைத்து பயிற்சி செய்யவும்.
பலன்கள்: இந்த சின் முத்திரைக்கு ஞான முத்திரை என்ற ஒரு பெயரும் உண்டு. அறிவில் மலர்ச்சி, எண்ணங்களில் தெளிவு, தெளிந்த தூய சிந்தனை. இந்த தெளிந்த சிந்தனையைத் தருவது தான் சின் முத்திரை. மூளை செல்களும், மூளை திறனும் மிகச் சிறப்பாக இயங்கும். மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிட்டும். மனிதனின் மனநிலைக்கு ஏற்ப மூளை செயல்படும் பொழுது, மூளையில் மின் அதிர்வலைகளுக்கு ஏற்ப பீட்டா, ஆல்பா, தீட்டா, டெல்டா என்று நான்கு விதமாக அதிர்வலைகள் ஏற்படுகின்றது.
நன்றி | மாலை மலர்