பழங்களைப் போல அதன் தோல்கள் எந்த அளவிற்கு நம் உடலுக்கு நன்மைகள் தரும் என்பது குறித்து இங்கு காண்போம்.
பொதுவாக நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பழங்களின் தோல்களை நாம் தேவையில்லை என வீசி விடுகிறோம்.
பழங்களைப் போல் அதன் தோல்களிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சருமத்தையும், முடியையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இவை உதவும்.
அவ்வாறு குறிப்பிட்ட சில பழங்களின் தோல்களினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
வாழைப்பழத் தோல் : உடலில் இருக்கின்ற சில காயங்களை சரிசெய்ய வாழைப்பழத் தோல் உதவுகிறது. எனவே, காயங்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில், வாழைப்பழத் தோலை வைத்து 5 நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும்.
அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து இதனை செய்து வர, காயங்கள் மற்றும் தழும்புகள் விரைவில் குணமடையும்.
எலுமிச்சை தோல்
எலுமிச்சைப் பழத் தோல் என்பது சருமத்தினுடைய மிகச்சிறந்த கிளன்சராகும். எனவே, வெயிலில் எலுமிச்சைத் தோலை நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதை குளிக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எலுமிச்சைத் தோலில் உள்ள அதிக அளவிலான அமிலம் சருமத்திற்கு கொஞ்சம் எரிச்சலை தரும்.
எனவே, இதை முகத்தில் தேய்க்கும் முன்பு, முகத்தின் ஏதேனும் ஒரு ஓரத்தில் தடவி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பின்னர் பாலில் கலந்து தேய்த்தால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் சரியாகும்.
ஆரஞ்சு பழத் தோல்
ஆரஞ்சு பழத் தோலினை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து அப்படியே சருமத்தில் தேய்த்துக் கொள்ளலாம். இது சருமத்திற்கு நல்ல ஸ்கிரப்பராக அமையும்.
அத்துடன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். மேலும், முகப்பொலிவினை தரும்.
பப்பாளி தோல்
பப்பாளி பழத்தின் தோல் இயற்கையாகவே நிறப்பொலிவினை தரும். எனவே, பப்பாளி தோலின் உள்பக்கத்தை முகத்தில் நேரடியாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட வேண்டும்.
பின்னர் அதனை சுத்தம் செய்தால் சரும வறட்சி நீங்கும். மேலும் முகம் பளபளப்பும், நிறப்பொலிவும் பெறும். அத்துடன் சருமத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கரும் புள்ளிகளையும் நீக்கும்.
தர்பூசணி தோல்
தர்பூசணி பழத்தில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி, சருமத் துளைகளுக்குள் சென்று உள்ளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.
எனவே சருமத்தை சுத்தம் செய்ய தர்பூசணி தோலைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீங்கும். மேல் இந்த தோல் சருமத்தின் உட்புறம் வரை சென்று சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.
நன்றி | வவுனியா நெற்