ஒருவரது உடல் சீராக செயல்பட ஐந்து லிட்டர் ரத்தம் தேவை. ஏ, பி, ஏ.பி பாசிட்டிவ், ஏ.பி. நெகட்டிவ், ஓ போன்ற ரத்த வகைகளை பற்றித்தான் பலருக்கும் தெரியும். நமக்கு தெரிந்ததை விட அதிகமான ரத்த வகைகள் உள்ளன. அதிலும் ஒரு ரத்த வகை மிகவும் அரிதானது. உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 45 பேரிடம் மட்டும்தான் அந்த ரத்த வகை இருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? ஆம்… அந்த ரத்த வகைக்கு ஆர்.எச். என்று பெயர். பூஜ்ஜிய ரத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
மிகக் குறைந்த நபர்களிடையேதான் இந்த ரத்தம் காணப்படுவதால் விலை மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த ரத்தத்தின் ஒரு துளி கூட தங்கத்தை விட அதிக விலை கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் உலகின் மிக அரிதான இந்த ரத்த வகை தங்க ரத்தம் (கோல்டன் பிளட்) என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இந்த ரத்தத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்ன வென்றால் இதில் ஆன்டிஜென்கள் இல்லை. அதாவது, இந்த ரத்தத்தை எந்தவொரு ரத்த வகையை கொண்ட நபர்களுக்கு கொடுத்தாலும், அவரது உடல் அதை ஏற்றுக்கொண்டு விடும். ஜப்பான், பிரேசில், கொலம்பியா, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ரத்த வகையை கொண்ட நபர்கள் வசிக்கிறார்கள்.
ரத்தத்தில் ஏ, பி ஆகிய இரண்டு முக்கிய ஆன்டிஜென்கள் உள்ளன. இவை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் செயல்படக்கூடியவை. இது ஆர்.எச். காரணி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரிய வகை ரத்தம் உள்ளவர்களுக்கு, ஆர்.எச் காரணி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இல்லை.
இத்தகைய ஆன்டிஜென்கள் இல்லாததால் இந்த ரத்த வகையை சேர்ந்தவர்கள் எளிதில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனை தவிர்க்க இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அரிய வகை ரத்தத்தை கொண்டிருக்கும் இவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் தேவைப்படுபவர்களுக்கு உடனே செலுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நன்றி | மாலை மலர்