செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்: கருணாநிதியை காலை சந்தித்துச் சென்ற சிறிது நேரத்தில் அதிர்ச்சி அறிவிப்பு!திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்: கருணாநிதியை காலை சந்தித்துச் சென்ற சிறிது நேரத்தில் அதிர்ச்சி அறிவிப்பு!

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்: கருணாநிதியை காலை சந்தித்துச் சென்ற சிறிது நேரத்தில் அதிர்ச்சி அறிவிப்பு!திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்: கருணாநிதியை காலை சந்தித்துச் சென்ற சிறிது நேரத்தில் அதிர்ச்சி அறிவிப்பு!

4 minutes read

திமுக தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்தவரும், மத்திய அமைச்சராக இருந்தவருமான மு.க.அழகிரி, திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திமுகவில் அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு:

கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராய பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும் – திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் – அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் – அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமை யோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – என்று அன்பழகன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த அறிவிப்பின் பின்னணியில் சில தகவல்கள் கட்சி மட்டத்தில் உலா வருகின்றன.

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கலாம், ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை பார்க்க முடியாது – என்று மதுரை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், ஜன.30ல் பிறந்த நாள் காணும் தென்னகத்து எஜமானே என்று அழகிரியை முன்னிறுத்தி மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஏற்கெனவே, மதுரை நகரில் போஸ்டர்கள் யுத்தம் பிரபபலம்தான். குறிப்பாக திமுக தரப்பில் ஒட்டப்படும் போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் போஸ்டர் ஒட்டிய அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் மன்னன், கவுன்சிலர் முபாரக் உள்பட 5 பேரை திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்தது திமுக தலைமை. இருப்பினும், அதையும் கண்டுகொள்ளாமல், அடுத்து ஒரு போஸ்டர் யுத்தத்தை அழகிரி ஆதரவாளர்கள் துவக்கியுள்ளனர். போஸ்டர் விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கிய நிலையில், இன்று காலை மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று, இன்று அதிகாலை 2 மணிக்கு மு.க.அழகிரி சென்னை திரும்பினார். பின்னர் இன்று காலை 7 மணி அளவில் சென்னை கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தயாளு அம்மாளையும் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். 8 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அழகிரி புறப்பட்டுச் சென்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து திமுக வட்டாரம் கூறுகையில், வெளிநாட்டுக்குச் சென்று வந்தது குறித்து கருணாநிதியிடம் மு.க. அழகிரி விவரித்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம் என்றும், அவர்களை மீண்டும் கட்சியில் இடம்பெறச் செய்ய முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், நேற்றும் மதுரை புறநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் மாவட்ட துணைச் செயலாளர் உள்பட 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை அழகிரி – கருணாநிதி சந்திப்பு நிகழ்ந்த நிலையில், மதுரையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது என்று இன்று காலை வரை கட்சித் தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், திடீரென மு.க.அழகிரியே கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தேமுதிகவுடன் கூட்டணி கனிந்து வராத சோகத்தில் கருணாநிதி ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு கடின முயற்சிகளைச் செய்து வரும் நேரத்தில், அண்மையில் அழகிரி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தேமுதிகவுடன் திமுக கூட்டு வைத்தால் கட்சி உருப்படாது என்று போட்டுடைத்தார். இது கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதை அடுத்து, கருணாநிதியைச் சந்தித்து விளக்கம் அளிக்க அழகிரி முயன்றதாகவும், கருணாநிதி மறுத்ததாகவும்  முதலில் கூறப்பட்டது. இருப்பினும், பின்னர் அவர் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இதன் பின்னர் சில நாட்களாக அடங்கிப் போயிருந்த விரிசல் விவகாரம், மீண்டும் மதுரை மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கட்சிக்குள் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கு, கட்சியில் காணப்படும் உட்கட்சிப் பூசலும் விரிசலும் தடையாக இருக்கக் கூடும் என்று கட்சி மட்டத்தில் எழுந்த கருத்துகள், அழகிரி நீக்கம் போன்ற முடிவு எடுக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இன்று காலை நிகழ்ந்த சந்திப்பின் போது கூட, கருணாநிதி இத்தகைய கடின முடிவு குறித்து அழகிரியிடம் விளக்கி, சமாதானப் படுத்தியிருக்கக் கூடுமென்றும் பரவலாக கருத்துகள் எழுந்திருக்கின்றன.

இரு தினங்களுக்கு முன்னர், தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்காக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்ட திருச்சி சிவாவை திரும்பப் பெற்றுக் கொண்டு, அந்த இடத்தை தேமுதிகவுக்கு விட்டுத்தருவது குறித்து பரிசீலிப்போம் என்று அறிவித்தார் கருணாநிதி. மதுரையில் யார் பெரியவர் என்ற போட்டியில் இருக்கும் விஜயகாந்த் – அழகிரி போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்து, விஜயகாந்த்தை திமுக கூட்டணி பக்கம் இழுப்பதற்கு இப்போது தனது மகன் அழகிரியைப் பலிகடாவாக்கியிருக்கிறார் கருணாநிதி என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கெனவே ஒரு முறை கட்சியை விட்டு அழகிரியை நீக்கி ஒரு நாடகத்தை அரங்கேற்றிய திமுக தலைமைக்கு, இப்போது மீண்டும் ஒரு முறை அழகிரி வெளியேற்ற நாடகம், தேமுதிகவை தன் பக்கம் இழுக்கும் கணக்குக்கு ஒருவேளை உதவக்கூடும்! கருணாநிதி போடும் கணக்குக்கு விஜயகாந்தின் பதில் நடவடிக்கை எப்படி அமையும் என்பதைப் பொறுத்தே அழகிரி வெளியேற்ற நாடகம் வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More