விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி வீரச்சாவு அடைந்துள்ளார். இன்று அதிகாலை 18ம் திகதி இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. நீண்ட கால போராட்ட வாழ்வைக் கொண்ட தமிழினி தனது விசாலமான ஆளுமையினால் தமிழீழ அரசியலில் காத்திரமான பங்களிப்பினை செய்துள்ளார்.
கிளிநொச்சி பரந்தனில் பிறந்து வளர்ந்து, பரந்தன் இந்து மகாவித்தியாலத்தில் கல்வி பயின்றவர். பாடசாலை காலங்களில் ஆளுமைமிக்க செயல்ப்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். மாணவ முதல்வராகவும் கலை நிகழ்வுகளில் பங்கேற்பதும் இவரது தனிச்சிறப்பு. ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தைக் கொண்ட இவர் அபார பேச்சுத்திறமை கொண்டவர்.
பன்முகப்பட்ட ஆற்றல் கொண்ட தமிழினி 90களின் ஆரம்பத்தில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டபின் மிகக் குறுகிய காலத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிக்கத் தொடங்கினார். கடந்த பல வருடங்களாக துன்பங்களை அனுபவித்து வந்தாலும் மன உறுதியுடன் வாழ்வை எதிர்கொண்டவர் இன்று நிரந்தரமாக அமைதி பெற்றுவிட்டார்.
கடந்த சில வருடங்களாக இலக்கியச் செயல்ப்பாடுகளில் முன்னெடுத்து வரும் தமிழினியின் கவிதைகள், சிறுகதைகள் பல்வேறுபட்ட ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. சில மாதங்களின் முன்னர் நடைபெற்ற பரந்தன் இந்து மகா வித்தியாலய வைர விழாவுக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது.
விடுதலைப் போராட்ட சம்பவங்களை பின்னணியாகவும் தனது போராட்டம் மீதான ஈடுபாட்டினையும் இணைத்து இவர் எழுதிய நூல் விரைவில் வெளிவர உள்ள நிலையில் இவரது இழப்பு அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இவர் எழுதிய எழுத்துக்கள் பல முக்கிய விடையங்களை பதிவு செய்து கொண்டு சென்றுள்ளது. இன்றும் தனது எழுத்துக்கள் ஊடாக ஒரு போராளியாகவே இறுதிவரை இருந்து மறைந்துள்ளார்.
இவருக்கு வணக்கம் லண்டன் தனது வீர வணக்கத்தினைச் செலுத்துகின்றது.
தமிழினியின் ஆக்கங்கள்;
http://www.vanakkamlondon.com/paranthan-hindu-mahavidyalayam-thamilini/
http://www.vanakkamlondon.com/paranthan-hindu-maha-vidyalayam-thamilini-part-2/
http://www.vanakkamlondon.com/poem-thamilini-jeyakumaran-08-29-15/
http://www.vanakkamlondon.com/poem-thamilini-jeyakumaran-01-08-15/