மணிப்பூர் வழியாக மியான்மருக்கு கடத்தப்படவிருந்த 108 பேர் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அம்மாநில காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 73 பேர் நேபாளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள மோரே பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதல் வேட்டையில் 5 பெண்கள், 15 ஆண்கள் உள்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள இம்பால் நகர காவல்துறை அதிகாரி பாபி, “எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் அந்த 103 பெண்கள், 05 ஆண்கள் உள்பட 108 பேரை பல விடுதிகளிலிருந்து மீட்டோம்”.
இதில் மீட்கப்பட்ட பெண்களை முதலில் மியன்மாருக்கு கொண்டு சென்று அங்கிருந்து துபாய் மற்றும் ஈராக்குக்கு கொண்டு செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
இவ்வாறான கடத்தல்களை தடுக்கும் விதமாக இந்திய-மியான்மர் எல்லையோர பகுதியான மோரேவில் தேடுதல் பணியை தொடர்வோம் என மணிப்பூர் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.