பிரான்சில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் யூத எதிர்ப்புத் தாக்குதல்களைக் கண்டித்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் தலைநகர் பாரிஸிலும் ஏனைய நகரங்களிலும் சுலோகங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றுள்ளனர்.
இந்தப் போராட்டங்களில் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிகள் நிக்கலஸ் சர்கோஸி, பிரான்கோ ஹோலாண்டே உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
யூத எதிர்ப்புத் தாக்குதல்கள் பிரான்சில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்தோடு, சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட யூதர்களின் கல்லறைகளும் நேற்றையதினம் சேதமாக்கப்பட்டிருந்தது.
சோசலிசக்கட்சியின் செயலாளரினால் இந்தப் போராட்டத்துக்கான அழைப்பு முதலாவதாக நேற்றைய தினம் விடுக்கப்பட்ட போதிலும், 50 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளினாலும் அமைப்புக்களினாலும் அது ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.