10 வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் சனிக்கிழமை(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
உறவுகளை தொலைத்து 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு எமது என்ன நடந்தது சர்வதேசம் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் .
காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாடுகளில் உள்ளதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில் அவ்வாறு உயிருடன் இருந்தால் நாங்கள் உயிருடன் ஒப்படைத்த உறவுகள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நாளை(30) போராட்டம் ஒன்றினை வட கிழக்கில் மேற்கொள்ள உள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இப்போராட்டத்தை குழப்புவதற்காக சில தரப்பினர்கள் இறங்கியிருக்கின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடாமல் எம்முடன் இணையுங்கள்.
அம்பாறை மாவட்டத்தில் 10 வருடங்களாக நாங்கள் செயற்பட்டு வரும் நிலையில் இடம்பெறவுள்ள போராட்டத்தில் தங்களது பிள்ளைகள், தங்களது உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.