புதிர்விருந்து என்பது தைப்பூச நாள் அன்று நடைபெறும் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும்.பதிவு:
தைப் பூச நிகழ்வு ஈழத்தில் முக்கியமான சமயச் சடங்கு நிகழ்வாகும். ஈழத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இன்றைய நாள் வழிபாட்டு நாளாக பண்டிகை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
புதிர்விருந்து என்பது தைப்பூச நாள் அன்று நடைபெறும் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். தைப்பூச நாளன்று அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்வார்கள். பின்னர் நெல் மகசூல் அதிகமாக கிடைக்க வேண்டி இறைவனை வழிபடுவார்கள்.
வீட்டில் குத்துவிளக்கேற்றி, பிள்ளையார் பிடித்து வைப்பதும், நிறைகுடம் தண்ணீர் வைத்து, அவற்றின் முன்பாக நெல் அறுக்கும் கதிர் அரிவாளை வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். அதன்பிறகு புதிர் எடுத்தல் வைபவம் நடைபெறும்.
குடும்பத்தின் தலைவர் அரிவாளை தூக்கிக் கொண்டு, தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுடன் வயலுக்குச் செல்வார். அங்கு கிழக்கு திசை நோக்கி நின்றபடி சூரியனை வணங்கி விட்டு தேங்காய் உடைப்பார்.
அதன்பிறகு நன்கு விளைந்த நெற்கதிர்களை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனை குடும்பத் தலைவி வாங்கி, பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து வழிபாடு செய்வார். நமது வயலில் விளைந்த நெல் தானியங்களை முதன் முதலாக வீட்டிற்கு எடுத்து வரும் நிகழ்வையே ‘புதிர் எடுத்தல்’ என்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து குடும்பத் தலைவி, சில நெல்மணிகளை எடுத்து, அதில் உமியை நீக்கிவிட்டு அந்த அரிசியை வைத்து பொங்கல் சமைப்பார். குடும்பத் தலைவர் பல்வேறு காய்கறிகள், நெய், தயிர், பழங்கல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றுடன் படைக்கப்பட்ட சாதத்தை குழைத்து தனது மனைவி, பிள்ளைகளுக்கு கொடுத்து தானும் உண்பார். இதனையே புதிர் விருந்து என்று சொல்கிறார்கள்.
இலங்கையில், அதுவும் குறிப்பாக யாழ் பாணம் பகுதியில், விவசாயிகள் இதை ஒரு சமயச் சடங்காகவே செய்து வருகின்றனர்.
புகைப்படங்கள் – பேஸ்புக்