ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களிலும், காந்தி சிலை முன்பாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து காங்கிரசார் இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் இந்த போராட்டம் தொடங்கியது.
காந்தி சிலைகளின் முன்பு நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரசார் பெரும் திரளாக பங்கேற்றனர்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்க பிரியங்காகாந்தி, ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் இன்று காலை புறப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் நடத்த இருந்த ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த பகுதியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி மறுத்தனர். எனினும், பொலிஸாரின் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி நினைவிடம் அருகே நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரசாரின் போராட்டத்தையொட்டி டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.