32
போர் தின்ற நிலத்தில் இருந்து பல கதைகள் இன்னமும் எழுந்துகொண்டே இருக்கின்றன. போரின் முகங்களை, போரின் வாதைகளைப் பேசும் பல கதைகளை இன்னமும் நாம் கேட்க வேண்டியிருக்கிறது. கடந்த கால கதைகளிலும் வரலாற்றிலும்தான் எம் வாழ்வும் காலமும் தங்கியிருக்கிறது. அதிலொரு கதையாய் நதுநசியின் தமிழவி கதையைத் தருகிறோம். –ஆசிரியர்
***
அண்ணா!…..
நித்திரையில் இருந்தவள் உரக்க கத்திக்கொண்டே எழுந்தாள்.
விம்மி விம்மி அழுது கொண்டே!
மலர்விழி அடுப்பை அணைத்து விட்டு ஓடிவந்தாள்.
“என்னம்மா”
அப்படித்தான் தமிழவியை அழைப்பாள்.வந்தவள் தமிழவியின் தலையை வாரிக் கொடுத்து தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
” அண்ணா”
…………..
“அண்ணா”
விம்மலுக்கிடையே அவள் வாய் உதிர்ந்து விட்ட வார்த்தைகளாய் அண்ணா மட்டுமே இருந்தது.
சூரியன் இன்னும் கிழக்கே எழவில்லை.விடிகாலை கருக்கல்.பலவகை பறவைகளின் ஓசை.குயிலும் கூட தூர இருந்த கூவிய வசந்த காலப் பொழுது.
மலர்விழியின் கண்கள் கனத்தன.இனத்தின் மீது காட்டிய வன்மத்தில் கண் முன்னே எறிகணையொன்றுக்கு அண்ணனை இரைகொடுத்தவள்; பறிகொடுத்தவள்;
அந்த நினைவுகளில் இருந்து மீண்டுவர முடியாதவளாக தமிழவி.
ஒரு இரவில் பல தடவை “அண்ணா” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்ந்தபடி திடுக்கிட்டெழுந்து விம்மி விம்மி அழுதபடி தன் காலத்தை கடந்து கொண்டிருந்தாள்.
எழுந்து அழுதடி இருக்கும் தமிழவியை
“என்னம்மா” அவ்வளவுதான்.
வேறொரு வார்த்தை வந்து அவளை தேற்றிவிட உதவிக்கு வந்ததில்லை மலர்விழி க்கு.மற்றொரு வார்த்தையும் தமிழவிக்கு தேற்றுவதாக இல்லை.
மலர்விழியின் மூத்த மகன் தான் தமிழவியின் அண்ணா.தமிழவி மலர்விழியின் கடைக்குட்டி.
போரில் வீரனாய் தந்தை சென்றுவிட மாவீரனாக கல்லறையொன்றில் மீளாத்துயிலில் தமிழவியின் அப்பா.
தமிழவியை மார்போடு அணைத்தபடி தேற்றுவதாக அவள் தலையை வாரிக்கொடுத்தபடி மலர்விழி இருந்தாள்.
இன்னமும் தமிழவியின் விம்மல் நிற்கவில்லை.கிழக்கு மெல்ல வெளிக்கத் தொடங்கியது.
ஆம்.
அன்றும் கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்த போது தான் அந்த கூவல் சத்தம் கேட்டது.கிழக்கில் இருந்து சூரியக் கதிர்கள் வருமுன்னே வந்து விழுந்து வெடிந்தன எறிகணைகள்.
வெண்நிற புகை மண்டலத்திற்கு இடையே பல வெடிப்புச் சத்தங்கள் காதை பிளந்தன.புகை வந்து கண்ணை மறைத்துவிட எங்கே என்ன நடக்கிறது என தெரியாது சில நொடிகள் கடந்து போயின.
கந்தக புகையின் வாசனை அடங்க மறுத்து அயலெல்லாம் ஆதிக்கம் செலுத்தியது.எத்தனை முறை அந்த சூழல் கந்தகப் புகையோடு உறவாடியிருக்கும்?
இரத்தவாடை காற்றில் கலந்து கந்தக வாசனையை மீறி மூக்கினைத் தூண்டியது.
மலர்விழிக்கு புரிந்துவிட்டது.பலரை இந்த ஏறிகணை காவி விட்டது என்று.அவளைச் சூழ யாரும் அப்போது முனங்கவில்லை.
காயங்கள் ஏற்படுத்திய வலியால் அங்கே யாரும் குரல் எழுப்பி அழவில்லை.ஆனாலும் இரத்தவாடை காற்றில் கலந்தது.அந்த மண்ணை நனைத்து விட்டிருந்தது.அழக்கூட வாய்ப்பளிக்காத எறிகணைகளின் உயிர்க்குடிப்பு இருந்தது.பலர் அழும் முன்னே இறந்து விட்டனர்.
எறும்புக் கூட்டம் போல் பரவியிருந்த மக்களிடையே விழுந்து வெடிக்கும் ஆட்லெறி குண்டுகளின் கோரத்தாண்டவம் அந்த மக்களுக்கு இப்போதெல்லாம் பழகிப்போய்விட்ட தினசரி நிகழ்வாகிவிட்டது.
எத்தனை ஏறிகணைகள் வீழ்ந்து வெடித்தாலும் சலனமற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் கூட்டமாக அன்று அவர்கள் இருந்தனர்.அவர்களது வாழ்வும் விளிம்பில் வந்து நின்றது.
வாழ்வா சாவா?
போரும் கூடவே தன் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.வட்டுவாகல் பாலத்திற்கு இன்னும் கொஞ்சத் தூரம் தான்.
தன்னை சுதாகரித்துக்கொண்டாள் மலர்விழி.
எறிகணைகளின் கூவல் இல்லை.கர்சிப்பு இல்லை.கந்தகப் புகையின் பரவல் இல்லை.
கந்தக வாசம் இன்னமும் இருந்தது.விட்டுப் பிரிய மனமில்லாமல்.
சில நிமிட எதிரியின் குண்டுவீச்சு இப்போது முடிந்திருந்தது.பல்குழல் வழி வந்து விழும் ஏறிகணைகளுக்கு சில நிமிடங்களே அதிகம்.
நிலவிய மயான அமைதியை கிழித்துக்கொண்டு மெல்ல முனகல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன.
பெரிய காயங்கள் உடன் வலிப்பதில்லை.நேரமாக நேரமாக காயம் ஏற்படுத்திய விறைப்பு மெல்ல மெல்ல குறைய காயம் பட்ட இடம் வலியை உணரும்.
மலர்வழி ஒரு மருத்துவர்.பல காலம் போரரங்குகளில் திறம்பட செயற்பட்டு பலரின் உயிரை பிரிவுப் பயணத்திலிருந்து மீட்டு வந்திருந்தவள்.காயங்கள் ஏற்படுத்தும் துயரங்களை நன்றே அறிந்தவள்.பழகி புரிந்தவள்.
காலைப்பொழுதில் சூரியன் கிழக்கில் நன்றாகவே மேலெழுந்துவிட்டான்.
பொன்மஞ்சள் நிறத்தில் விடத்தல் காடுகளிடை கதிர்கள் ஊடுருவியிருந்தன.அழகிய இயற்கையாக அந்தக் காலை இருந்தது.ஆனாலும் பறவைகள் இடம்மாறிப் போயிருந்தன.குண்டோசையிடையே தமக்கென்ன வேலை என்று.
உடல்களில் இருந்து வழிந்தோடிய குருதியின் ஈரம் இன்னமும் காயவில்லை.
அசைவற்ற உடல்கள் பல இருக்க அவற்றிடையே சில உடல்களின் மெல்லிய அசைவுகள் காட்டிக்கொடுத்தன உயிரோடும் சிலர் இன்னமும் இருப்பதை.
மலர்விழி சுறுசுறுப்பானாள்.
களமருத்துவத்தின் தனது அனுபவங்களை எல்லாம் திரட்டி முழுமூச்சாக முதலுதவி கொடுத்திட முயன்றிருந்தாள்.ஆரம்ப சிகிச்சைகளையும் கூடவே; அவளது சிறிய மருத்துவக் குழுவோடு இணைந்து.
இறந்தவர்களின் உடல்களை விலக்கி உயிரோடிருந்தவர்களை மீட்டெடுத்தனர்.
மலர்விழியோடிருந்த அந்த சிறிய மருத்துவக் குழுவினர்.
இருந்த கொஞ்ச மருந்துகளோடு முதல் உதவிகளைச் செய்துவிட்டு ஆரம்ப சிகிச்சையாக காயங்களை சுத்தப்படுத்தி மருந்திட்டு கட்டிவிட்டனர்.
இருக்கும் இடமே மருத்துவமனை என்றாகிப் போன பின் காயம் பட்டவர்களும் ஓடிப்பரவிய இரத்த வெள்ளத்தினிடையே அப்படியே இருந்தனர்.
அந்தக் காட்சிகள் சகித்துக்கொள்ள முடியாத மிகப்பெரிய மனிதப் பேரவலம்.சகித்துத் தான் ஆகவேண்டும்.
போர் வெறிகொண்டு தாண்டவமாடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் போரின் வெற்றிக்காக காத்திருந்த பல தேசங்கள்.
செத்து வாழ்ந்துகொண்டிருந்த ஈழத்தமிழரை அவையெல்லாம் அன்று கண்டு கொள்ளவில்லை.
அரசியல் ஞானி அன்ரன் பாலசிங்கத்தின் அரசியல் வகுப்புக்களிலும் கலந்துகொண்டு தன்னுடைய அரசியல் அறிவை வளர்த்திருந்தவள் மலர்வழி.போரின் போக்கையும் உலக அரசியலையும் ஒப்பிட்டு தனக்குத் தெரிந்த வகையில் உலகின் அன்றைய மனநிலையை நன்றே உணர்ந்திருந்தாள்.
மலர்விழி தான் மட்டுமல்ல அன்றைய போரின் இறுதி நேரங்களில் பலரும் இதே எண்ணவோட்டத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.
பரபரப்பான அந்த பொழுதிலும் மலர்விழியின் மனம் இன்னொரு கோணத்திலும் சிந்தனையை அசைபோட்டபடியிருந்தது.
“அண்ணா”…….” அண்ணா”……
நித்தம் அம்மாவை உச்சரிக்கும் தமிழவியின் குரலில் அண்ணா என்ற ஒற்றை வார்த்தை வியப்போடு அச்சம் கலந்து ஒலித்தது.
மெல்லிய முனகல் கேட்டுக்கொண்ட அந்த அமைதியை தமிழவியின் அழுகை கலைத்தது.
திடுக்கிட்டவள் போல் மலர்விழி தமிழவியை நோக்கி ஓடினாள்.
தமிழவி விம்மி விம்மி அழுதபடி இடையிடையே அண்ணா என்ற வார்த்தையை உதிர்ந்து கொண்டிருந்தாள்.
மலர்விழியின் திடமான மனம் நொருங்கிப் போனது.
தமிழவியின் அண்ணா.மலர்விழியின் மூத்த மகன்.போரின் பெரும் வீரர்களில் ஒருவன்.காணக்கிடைக்காத பொக்கிசமாக பார்க்கத்துடித்த உன்னத உறவாக அவன் அன்றிருந்தான் மலர்விழிக்கு.
ஏறிகணையின் கோரத்தில் பறிபோன உயிர்களில் மலர்விழியின் மூத்த மகனின் உயிரும் ஒன்றாகிப் போயிருந்தது.
போர் வேகம் எடுத்திருந்த போதும் அம்மாவை வந்து பார்க்க; தங்கையை வந்து பார்க்க; அவனுக்கு கிடைத்தது அப்பாவின் வீரச்சாவு; அவரது வித்துடலை துயிலும் இல்லத்தில் விதைக்கும் போதுதான்.
2008 இல் மாவீரர் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முள்ளியவளை துயிலுமில்லத்தில் தந்தையின் வித்துடலை விதைத்த அந்த பதினைந்து நிமிடங்கள் தாயோடும் தங்கையோடும் நேரத்தை கடந்திருந்தான்.
ஒருவாரம் முன் தான் வந்து பார்ப்பதாக தகவல் கிடைத்திருந்தது மலர்விழிக்கு.ஆனாலும் அந்த பொழுது எப்போது என்பது தெரியவில்லை.அது இப்படியா இருக்க வேண்டும்? சிந்தை மட்டும் மலர்விழியை ஆட்டிப்படைக்கிறது.
அவளது கலங்காத விழிகள் அன்று கண்ணீரால் நிரம்பியிருந்தன.உதடுகள் வார்த்தைகளை உதிர மறுத்து நின்றன.
வீரத்தினால் உரமேறிய மனதும் உடலும் மெல்ல நிலைகுலைந்து தான் போயின.
தமிழவியும் நிலைகுலைந்து போயிருந்தாள்.ஐந்து வயது குழந்தையாக அவளால் என்னதான் முடியும்?
பத்தொன்பது வயதான போதும் அவளும் ஒரு மருத்துவ மாணவியான போதும் அண்ணாவை உயிரற்ற உடலாக கண்ட அன்றைய பொழுதுகளில் ஏற்பட்ட மனப்பாதிப்பில் இருந்து இன்னமும் மீண்டுவர முடியவில்லை.
“மலர்”
பக்கத்து வீட்டு பற்மாக்காவின் குரல் காதை துளைத்து.மலர்விழியை பழைய நினைவுகளில் இருந்து மீட்டு வந்தது; தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி
தமிழவியை படுக்கையில் சாய்த்து விட்டாள்.விம்மி விம்மி அழுதபடியே சோர்ந்து அயர்ந்து போவாள் தமிழவி.
“வாங்கோ அக்கா”
“ஓம்.வாறன் மலர் ” என்ற படியே தன் ஊன்று தடியை ஊன்றி நடந்து வந்த பற்மாக்கா
” அந்த காலை சரிசெய்திட்டியேடி பிள்ளை.”
போரில் ஒரு காலை இழந்தவர்.பொய்க்கால் ஒன்றை அப்பப்போ சரி செய்தபடி அச்சகம் ஒன்றுக்கு வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தார். அவரது பொய்க்காலை சரி செய்துகொள்ளும் தொழிற்சாலையாக இப்போது மலர்விழியே இருந்தாள்.
***
நதுநசி