சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரில் இருந்து கனடாவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி சென்ற விமானத்தில் கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600 தங்க கட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
மொத்தம் 400 கிலோகிராம் எடை கொண்ட குறித்த தங்க கட்டிகள் அடங்கிய கன்டெய்னர், டொரண்டோ நகரில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கியது.
அதன்பின்னர் அந்த கன்டெய்னர் காணாமல் போனதுடன், போலி ஆவணங்களை பயன்படுத்தி குறித்த கன்டெய்னர் கடத்தப்பட்டதாக தெரிய வந்தது.
கனடா வரலாற்றில் இதற்கு முன் இல்லாத வகையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, கொள்ளை சம்பவத்தில், ஏர் கனடா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது.
இதனையடுத்து, 9 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதுடன், இவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர்.
இந்த நிலையில், முக்கிய சந்தேக நபரானஆர்சிட் குரோவர் (வயது 36) என்ற நபரை பொலிஸார் தேடி வந்தனர்.
கடந்த ஒரு வருடமாக சிக்காமல் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்த நபர் தற்போது கனடா பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் அமெரிக்காவிலும் குறித்த நபர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து கனடா சென்றடைந்த குறித்த சந்தேக நபரை பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கனடா பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.