இந்தியாவில் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றதுடன், வாக்குகள் கடந்த 4ஆம் திகதி எண்ணப்பட்டன. ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியதுடன், கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.
தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
இதற்காக இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மோடி சந்தித்து தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார்.
அத்துடன், ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவு கடிதத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்த நிலையில், நாளை மறுநாள் (9) மாலை 6 மணிக்கு மோடி மற்றும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.