ஜப்னா பேக்கரி நாவலின் மூலம், இஸ்லாமிய வெளியேற்றத்தின் நியாயப் பக்கங்கள் குறித்து பேசி, பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் ஆளானவர் எழுத்தாளர் வாசு முருகவேல். ஈழத்தின் நயினாதீவில் 1984ல் பிறந்த இவர் தொடர்ந்து இடம்பெயர்வுகளால் அலைவுற்று, தற்போது தமிழ்நாட்டில் அகதியாக வாழ்ந்து வருகிறார். ஜப்னா பேக்கரி, கலாதீபம் லொட்ஜ் முதலிய இரு நாவல்களை எழுதிய வாசு முருகவேல், சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது முதல் நாவலான “ஜெப்னா பேக்கரி” நாவலுக்கு, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் “முதல் நெருப்பு” விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்தும் படைப்பு முயற்சிகளுடன் இயங்கி வரும், வாசு முருகவேல் வணக்கம் லண்டனுக்கு வழங்கிய நேர்காணல் இது.
ஜெப்னா பேக்கரிக்கு நாவலுக்கு ஏன் இந்த எதிர்ப்பு?
இதற்கு பல முறை பதில் சொல்லி விட்டேன். இருந்தாலும் இந்த கேள்வியை நீங்கள் மறுபடியும் கேட்பது சரிதான். ஏனென்றால் அது உருவாக்கிய விவாதங்கள் இன்னும் அடங்கவில்லை. அந்த விவாதங்கள் மேலெள வேண்டிய சூழலும் உருவாகி இருக்கிறது.
நீண்ட நெடும் காலமாக ஈழ விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், அதை மானுட விரோத செயலாக கட்டமைக்கவும் யாழ் சோனகர்கள் வெளியேற்றம் என்ற கவலைக்குரிய சம்பவம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதற்கான பதிலை கடந்த முப்பது வருடங்களில் யாரும் முன்வைக்கவில்லை. அந்த இருளில் நான் மிகச்சிறிய ஒரு ஒளி விளக்கை ஏற்றி வைத்தேன். அது அவர்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கி விட்டது. அது இன்னும் பல உண்மைகளை வரலாற்று துயர்களை வெளிக்கொண்டுவர வழிசமைத்து விடுமோ, அதன் மூலம் தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் போலி கதைகளையும், வரலாற்று திரிவுகளையும் உடைத்தெறிந்து விடுமோ, அதன் மூலம் ஈழ விடுதலைப்போராட்ட கருத்தில் இன்னும் மேலெழுந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள். ஜெப்னா பேக்கரி நாவல் எழுதியதன் மூலமாக நான் எதிர்கொண்ட, எதிர்கொண்டுகொண்டிருக்கும் எச்சரிக்கைகள் மிரட்டல்கள் எல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கு வலிகளை, காயங்களை உருவாக்கினாலும் அது என் எழுத்தை, எமது விடுதலை கனவை ஒரு துளி கூட பாதிக்கவில்லை. உண்மையை வரலாறு எப்படியும் வெளிக்கொண்டு வந்துவிடும். அதற்கு வாசு முருகவேல் ஒரு கருவி அவ்வளவு தான். நான் இல்லையென்றால் இன்னொருவர் வாயிலாக உண்மை வெளிவரத்தான் செய்யும்.
நீங்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் ஆதரவாளரா?
இந்தக் கேள்வியின் தொனி மிக அற்பமானது. ஜெயமோகனின் ஆதரவாளர் என்றும் ஆதரவற்றவர் என்றும் குறிப்பிடபடுவதையே வெறுக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் பல படைப்புக்கள் என்னை வசீகரித்திருக்கின்றன. அதைப்போல அவரின் உலோகம் போன்ற நாவலை ஒரு ஈழத்தமிழனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அவரின் வாசகன்.
நல்லதொரு நண்பனைப் போல எனது எழுத்துக்களை வாசித்து அதிலிருக்கும் புனைவின் நிறை – குறைகளை நேரில் சந்தித்து எடுத்துரைக்கும் ஒருவர். அவருக்கும் எனக்கும் அரசியல் கருத்தியல் ரீதியான முரண்கள் இருக்கின்றன. ஆனால் அவரிடம் மட்டுமல்ல இந்திய அறிவுஜீவிகள் பலரிடம் ஈழம் பற்றிய புரிதலில் அரைகுறை ஞானமே இருக்கிறது. அவரிடம் முரண்படும் வேளைகளில் முரண்பட்டு நேசம் கொள்ளும் தருணங்களில் நேசிக்கிறேன். பழகுவதற்கு எளிமையும் சமத்துவமும் தருகின்ற சக எழுத்தாளராக நான் ஜெ.மோ அவர்களை சிநேகிக்கிறேன்.
கலாதீபம் லொட்ஜ் ஏனைய ஈழ நாவல்களில் இருந்து எப்படி முக்கியத்துவம் பெறுகிறது?
முதலாவது இது பல்வேறு இன மக்கள் கூடும் கொழும்பை மையமாக கொண்டது. ஈழத்திற்கு வெளியே இலங்கையின் தலைநகரில் வாழ நேரும் தமிழர்களின் வாழ்வியல் சிக்கலை அது பேசியிருக்கிறது. தமிழர்கள் – சிங்களவர்கள் ஒரு நகரத்தில் எப்படி மிக நுண்ணியமான கோட்டினால் பிரிக்கப்பட்டிருக்கிறார். எப்படி அவர்கள் அதை உணர்கிறார்கள் என்று பேசியிருக்கிறது. சிங்களவரை சிங்களவராக பேசி விட்டிருக்கு நாவல் என்று இதை நான் உறுதியாக கூறுவேன். சிங்களவர்கள் எம்முடைய எதிரி அல்ல. இலங்கை பேரினவாத அரசு எந்திரம், அதன் அரசியல் யாப்பு, அதன் அரசியல் தலைமைகள் இவைகளே எம்முடைய எதிரிகள் என்பதே வே.பிரபாகாரன், அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்றோர் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள்.
சராசரியாக தமிழர், சிங்களவர் வாழ்வு, பொருளாதார வாழ்வியல் சிக்கல்கள் ஒரேமாதிரியானவை கூட என்றே நான் கருதுகிறேன். ஈழ விடுதலை என்பதை மறுத்தாலும் கூட ஜே.வி.பி அமைப்பின் ஆயுதப்போராட்டம் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு. இந்த நாவலில் ஒரு முன்னாள் ஜே.வி.பி உறுப்பினரின் வாழ்வும் வருகிறது. அது மிகமுக்கியமான ஒரு பங்கை இந்த நாவாலில் கொண்டிருக்கிறது. இந்த நாவல் இவை அனைத்தையும் உள்ளடக்கி உள்ளது.
சம கால ஈழ இலக்கிய நிலமை பற்றிய உங்கள் கருத்து?
இது மிக முக்கியமான காலகட்டம் என்று உறுதியாக கூற முடியும். ஈழ இலக்கியத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் கூட இது முக்கியமான காலகட்டம் என்று வரையறுத்து கூறவேண்டும். விடுதலைப் போராட்ட சூழல் ஈழ இலக்கியத்தில் ஒரு இடைவெளியை உருவாக்கியது. அந்த இடைவெளியை சில சக்திகள் மிக மோசமாக பயன்படுத்தி கொண்டன. அவற்றை வெற்றுக் குப்பைகள் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அவற்றில் தமிழர் வாழ்வியலும் இல்லை. விடுதலைப்போராட்ட வாழ்வும் இல்லை. வெறும் புனைவு என்ற பெயரில் சல்லியடித்திருந்தவையே ஈழ இலக்கியம் என்று இருந்தது. தமிழகத்தில் கூட அதுவே ஈழ இலக்கியம் என்று நம்பும் ஒரு மூளை மழுங்கிய கூட்டம் இப்போதும் உள்ளது.
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வரக்கூடிய ஈழப்படைப்புகள் மிக வெளிப்படையாக தமிழர்களின் முப்பதாண்டு கால வாழ்வை முழு வீச்சில் பதிவுaஅதை தடுக்க முடியாத நிலையில் எதிர் சக்திகள் திகைத்து நிற்கின்றன. அவர்கள் எழுதும் எவையும் இனிமேல் எடுபடாது என்பதும் உண்மையை கண்டடைய வாசகர்கள் பழகி விட்டார்கள் என்பதும் அவர்களை வெறுப்புக்கும் , கடுமையான சீற்றத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது. ஆகவே ஈழ மக்களின் வாழ்வியல் சார்ந்து வரக்கூடிய எந்த ஒரு படைப்பையும் ஏழனம் செய்வது, நாலுபேர் கூட இது ஒன்றுமே இல்லை என்று அவர்களுக்குள் பேசி அதையே இலக்கிய உரையாடல் போட கட்டமைப்பது என்று இயங்கி வருகிறார்கள். ஆனால், எதுவுமே எடுபடவில்லை என்பது உண்மை. அதற்கான சாத்தியங்களும் இனிமேல் இருக்கப்போவதில்லை. உலக தமிழர்கள் உண்மையை கண்டடையத் தொடங்கி விட்டார்கள்.
நேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக தீபன்