குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகத் திகழ்வது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்.
இதைவிடப் பெரிதாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் கட்டப்படுகிறது. இது குறித்து கூறியுள்ள குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமள் நாத்வானி, “உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டம். இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டிகளை கண்ட களிக்கும் வசதி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் நகரில் மொடீரா பகுதியில் 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானத்தின் கட்டுமான பணி ரூ.700 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரிய இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3000 கார்கள், 10000 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு பார்க்கிங் வசதி இருக்கும், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளமும் மைதானத்துக்குள்ளே அமைக்கப்படுகிறது.