இம்முறை உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்ட ஆசிய போட்டிகளில் இலங்கை கால்பந்து அணி பங்கேற்கும் வாய்ப்பு நழுவிப்போயுள்ளது.
இந்த போட்டிக்காக 23 வீரர்கள் மற்றும் 5 அதிகாரிகள் பங்கேற்கவிருந்ததோடு, அதற்கான கடவுச்சீட்டு வாங்கப்படாததன் காரணமாக இந்தப் பயணம் ரத்தாகியுள்ளது.
இளம் வீரர்களுக்கான இந்த சிறந்த வாய்ப்பு இழக்கப்பட்டதை அடுத்து போட்டியில் பங்கேற்காததன் காரணமாக 70 இலட்சம் ரூபா அபராதத்தை இலங்கை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளே உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் ஜே குழுவில் இடம்பெறும் இலங்கை இளையோர்கள் நேற்று புதன்கிழமை தென் கொரியாவை எதிர்கொள்ளவிருந்ததோடு தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் மற்றும் புரூனாய் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் முறையே நாளை (07) மற்றும் வரும் ஒக்டோபர் 09ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த திங்கட்கிழமை (03) இலங்கை இளையோர் குழாம் உஸ்பெகிஸ்தானை நோக்கி பயணிக்கவிருந்தது.
இதேவேளை இலங்கை கால்பந்து சம்மேளத்தின் தேர்தலை நடத்த முடியுமான வகையில் தற்போது வெளியிப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் மேற்கொள்வதற்கு விளையாட்டு அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அது அந்த சம்மேளனத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான முடிவை ரத்துச் செய்து விளையாட்டு அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செயலிழக்கச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் அந்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளர் தாக்கல் செய்த ரீட் மனு விசாரணைக்கு கொண்டுவரப்பட்டபோதே விளையாட்டு அமைச்சு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை மீண்டும் வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அன்றைய தினத்திலேயே இந்த செயற்பாட்டின் முன்னேற்றத்தை அறிவிக்கும்படி இரு தரப்புக்கும் உத்தரவிட்டது.