வடக்கு கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான காணி ஒன்றில் இராணுவத்தினர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருக்கும் காட்சியை 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
அப்படி பயிர் செய்யும் நிலத்திற்கு சில மீற்றர் தூரத்தில் ஒரு இராணுவ பல்பொருள் அங்காடி காணப்படுகிறது.
அதில் அங்கு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பல வருடங்களாக அந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி அந் நிலத்திற்குரிய மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சில இடங்களில் நிலங்கள் விடுவிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. அதிபர் ரணில் அண்மையில்கூட வடக்கிற்கு வந்து சில பகுதிகளை விடுவித்திருந்தார்.
ஆனாலும் இன்னமும் தமிழர்களின் நிலத்தில் இராணுவத்தின் பயிர்கள் விளைகின்றன. தமிழர்களின் கடைகளில் இராணுவக் கடைகள் திறந்தேயுள்ளன.
மே தினம் என்பது
இப் பூமியில் எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் ஒரு தினம் இருக்கிறது. உழைப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தினம்தான் உழைப்பாளர் தினம். ஒரு வகையில் உழைப்பாளர்களின் ஆயுதமே இந்தத் தினம்தான். அவர்களின் கொண்டாட்டத்திற்குரிய ஒரேயொரு நாள் அதுவே. அவர்கள் தமக்காக தாம் போராடும் நாள்.
ஆனால் இப்போது இந்த நாள்கூட உழைப்பாளர்களிடமில்லை. இந்த நாள் முதலாளிகளின் வசம் சென்றுவிட்டது. இது முதலாளிகளின் தினமாகிவிட்டது. அரசியல் தலைவர்கள்தான் இப்போது இந்த நாளின் கதாநாயகர்கள் ஆகிவிட்டனர். உழைப்பாளர்கள் எங்கோ ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டுவிட்டார்கள்.
உண்மையில் உழைப்பாளர்களின் பிரச்சினையை அவர்களின் தளத்திலிருந்து அரசியல் ரீதியான கவனத்தை கோருவதுதான் உழைப்பாளர்களின் போராட்டம் மற்றும் மே தினம்.
ஆனால் இன்றைக்கு உழைப்பாளர்களின் அமைப்புக்களை அரசியல் கட்சிகள் குத்தகைக்கு எடுத்துவிட்டன. பல நாடுகளின் உழைப்பாளர்களின் அமைப்புக்கள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள்.
பெரும் முதலாளிகள் அரசியல் தலைவர்களாக உருவெடுத்து உழைப்பாளர் அமைப்புக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். தமது அரசியல் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர்.
18 மற்றும் 19ஆம் நூற்றாண்டில் மிகவும் அபாரமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு நாளில் 12 மணித்தியாலங்கள் வேலை நேரமாக செயற்படுத்தப்பட்டு மனித உழைப்பு சுறண்டப்பட்டது. கட்டாய வேலை பெறப்பட்டது. இதற்கு எதிராக உழைப்பாளர்களிடமிருந்து குரல்கள் வலுப்பெற்றன.
மே தினத்தின் வரலாறு
இங்கிலாந்தில் சாசன இயக்கம் உருப்பெற்று 6 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது. முக்கியமாக 10 மணிநேர வேலையை அவர்கள் தமது போராட்டத்தின்போது கோரிக்கையாக முன்வைத்தனர்.
பிரான்சில் 1830களில் 15 மணிநேரம் கட்டாய வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் பிரான்ஸ் நெசவு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.
இதனை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோசத்தை முன்வைத்து 1834இல் அவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள்.
ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1889 ஜூலை 14இல் சோசலிச தொழைிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம் பாரிசில் கூடியது. இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பிரெட்ரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்ட முக்கியமான பலர் அதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சோசலீசத்தின் தந்தை என்றும் உழைப்பாளர்களின் தலைவன் என்றும் போறப்பட்டும் கால்ஸ் மாக்ஸ் 8 மணிநேர வேலையை வலியுறுத்தினார்.
சிக்காகோ சதியை இந்த மாநாடு வன்மையாக கண்டித்தது. 1890இல் உலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றிணைத்து நடத்த வேண்டும் என்ற அறைகூவலையும் இந்தக் கூட்டம் விடுத்தது.
அந்த அறைகூவலே மே முதல் நாளை உலக உழைப்பாளர் தினமாக – மே தினமாக கொண்டாட வழிவகுத்தது.உலகில்உள்ள அனைவரும் எட்டு மணிநேர வேலையை செய்வதற்கு இந்தப் போராட்டமே காரமாண அமைந்தது.
அதன் பின்னர் உழைப்பாளர்களின் உரிமையை வலியுறுத்தும் அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் நாளாக மே ஒன்று கொண்டாடப்பட்டு வந்தது.
மேதினத்திலும் உழைப்பவர்கள்
ஆனாலும் இன்றும் பல தொழிலாளர்கள் எட்டுக்கு மேற்பட்ட மணிநேரங்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். அதிகாலை ஐந்து மணிக்கு வேலைக்குச் சென்று மாலை ஏழுமணிக்கு வீட்டுக்கு அனுப்பும் ஆடைத்தொழிற்சாலைகள் நமது மண்ணிலேயே உள்ளன.
அப்பாவி கூலித்தொழிலாளர்களின் நிலமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவர்கள் தினக்கூலிக்காக வேலை நேரத்திற்கு அதிகமாக வேலை வாங்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு தொழிற்சங்கங்களோ, அமைப்புக்களோ இல்லை. அவர்கள் சமூகத்தில் உதிரிகளாக பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இன்றைய மே தினத்தில்கூட அவர்கள் எங்கோ கூலிக்கு வேலை செய்தடியிருப்பார்கள்.
இன்றைய மே தினத்தை கொண்டாடும்முதலாளிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சமைத்து உணவுகொடுக்கும் சமையல் தொழிலாளியின் நிலைதான் இன்றைய உதிரி உழைப்பாளர்களின் நிலை.
இன்றைக்கு பல்தேசிய கம்பனிகள் உழைப்பாளர்களை கடுமையாக சுறண்டுகிறது. அங்கு பணியாற்றும் உழைப்பாளிகளின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் வாய் திறக்க முடியாது.
வேலை நேரத்திற்கு அதிகமான வேலை, சுயமரியாதையை பாதிக்கும் அணுகுமுறைகள்என்பவற்றால் உழைப்பாளர்கள் உளமளவில் பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இத்தகைய பல்தேசிய கம்பனிகள் தாராளமாய் விளைந்துவிட்டன. அவை வடகிழக்கிலும் பெருகிவிட்டன.
ஒருவரது உழைப்பை முடிந்தவரை சுறண்டிவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பும் பல்தேசிய கம்பனிகள் தமதுகொள்கையாக வைத்துள்ளன. பின்னர் புதிய ஒருவரை எடுத்து அவரது குருதியை உறிஞ்சும் செயற்பாட்டை ஆரம்பிக்கும்.
வடக்கு கிழக்கில் உழைப்பாளர் நெருக்கடி
வடகிழக்கில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். மீனவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமது கடற்தொழிலை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களையும் தடைகளையும் ஒடுக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
பரந்தன் இராசயனத் தொழிற்சாலை, கந்தபுரம் கரும்புத் தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் இராணுவத்தின் முகாங்களாக உள்ளன. இதில் தொழில்புரிந்த தொழிலாளர்கள் பல வருடங்களாக தொழிலின்றி தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுதல், இன ஒடுக்குமுறை, இராணுவ ஆக்கிரமிப்பு, இராணுவ ஆதிக்கம், உரிமையற்ற வாழ்வு என்பவற்றால் தொழிலாளர்கள்தான் முன்னரங்கில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அவர்களின் பாதிப்பே தமிழ் சமூகத்தின் பாதிப்பாக அமைகிறது. போருக்குப் பிந்தைய நிலையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குருதியையும் உழைப்பையும் சுறண்டும் நிறுவனங்கள் தமிழர் மண்ணில் கூடாரமிட்டுள்ளன.
லீசிங் முறையில் ஒரு பொருளை கொடுத்துவிட்டு ஒரு லீசிங் கம்பனி உழைப்பாளி ஒருவரை கொல்லுகிற சம்பவங்களும் நடக்கின்றன.
உழைப்பால் உயர்ந்துள்ள ஈழத் தமிழர்
போருக்குப் பின்னர் வடக்கில்தான் நுண்நிதி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இவை போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உழைப்பை – நிதியை வெகுவாக சுறண்டுகின்றன.
இதனால் பல குடும்பங்கள் கண்ணீரில் தள்ளாடுகின்றன. நொந்துபோன, காயப்பட்ட சமூகத்தில் தமது எண்ணங்கள் ஈடேறும் என்று நிதி நிறுவனங்கள் கருதுகின்றன.
இவ்வாறு பல வழிகளிலும் உழைப்பு சுறண்டப்படுகிறது. தொழிலாளர்களின் நிம்மதி பறிக்கப்படுகிறது. உழைத்துழைத்து நிம்மதியின்றி அல்லல்படும் உலகின் அனைத்து தொழிலாளர்களின் பிரச்சினையையும் தீரக்கப்படவேண்டும் அவர்களின் வாழ்வில் உண்மையான விடிவு ஏற்படவேண்டும்.
தமிழ் தேசிய மே தினத்தைக் கொண்டாட வடக்கு கிழக்கு தயாராகி வருகின்றது. தமிழர் தேசத்தில் உழைப்பாளர்களின் பொருளாதார உரிமைகளுடன் அரசியல் உரிமையையும் இந்நாள் அவாவி நிற்கிறது.
ஒரு தேசமாக நாம் விடுதலை பெறுகின்ற போதுதான் பொருளாதார ரீதியாக நாம் சந்தித்துள்ள இடர்கள் எம்மைவிட்டு அகலும். சிறிலங்காவின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையிலும் உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் உழைப்பால் அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகின்றனர்.
எமக்கான தேசம் மலர்கின்ற போது எம்மை மாத்திரமின்றி சிறிலங்காவுக்கும் கைகொடுக்கும் வலுவான பொருளாதாரச் சூழல் தளைக்கும். அதற்காகவும் ஒன்றுபட்டு இன்றைய நாளில் அறைகூவல் விடுப்பது நம் அனைவரின் கடமையுமாகும்.
-தீபச்செல்வன்