ஏழை மாணவர்களின் கல்விக்காக 2013 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அமைப்பே “சென்னை ஃபவுண்டேஷன்”. தங்களுடைய நட்பு வட்டத்தில் நிதியைத் திரட்டி, 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கல்லூரிப் படிப்பைத் தொடரமுடியாத ஏழை மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்விக்கு கை கொடுப்பதே சென்னை பவுண்டேஷணின் முக்கிய பணி.
அரசுப் பள்ளியில் பயின்று வறுமை காரணமாக கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவ மாணவியர்களின் இல்லங்களுக்கே சென்று ஆய்வு செய்கிறார்கள், பிறகு குடும்பம் மற்றும் பெற்றோர்களின் சூழ்நிலையை நேரில் பார்வையிட்டு அவர்கள் படிக்க இருக்கும் கல்லூரி சேர்க்கைக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை வழங்கி அவர்கள் படிப்பை முடித்து வேலைக்கு செல்வதற்கும் உதவி செய்கின்றார்கள். இதில் கலை, அறிவியல், வணிகம், சட்டம், மற்றும் மருத்துவப் படிப்பு வரை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது.
2014-15 முதல் 2017-2018 வரையிலான கல்வி ஆண்டுகளில் ஏறத்தாழ 500 மாணவர்களுக்கு நிதியளித்து அவர்களது வாழ்விற்கு ஒளி ஏற்றி வைத்துள்ளனர். இந்த ஆண்டோடு சுமார் 100 மாணவர்கள் இளங்கலை பட்டம்(UG) முடித்து வேலைக்கும் செல்ல இருக்கிறார்கள்.
நண்பர்களிடம் திரட்டப்படும் நிதி இம்மாபெரும் பணிக்கு பற்றாக்குறையாய் இருப்பதனால், சில வர்த்தக நிறுவனங்களிடமிருந்து நிதியும், கல்வி நிறுவனங்களிடமிருந்து உதவிகளும்,சலுகைகளும் பெற்று நடத்தப்பட்டு வருகிறது. இருந்தும் ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், ஏற்கனவே உதவி பெற்று வரும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணமும் இதில் இணைவதால் அமைப்பை இயக்குவதற்கான பொருட்செலவு இன்னும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆகையால் கலைநிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடம் நிதி திரட்டுவதென முடிவெடுத்து 2014 ஆம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை ”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் மெல்லிசை நிகழ்ச்சி மூலம் நான்காண்டுகளாக நிதி திரட்டப்பட்டுள்ளது.
* பின்னணிப் பாடகர்கள் மனோ & க்ரிஷ் மற்றும் பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி, காமராஜர் அரங்கம், 2014
* பின்னணிப் பாடகர்கள் கார்த்திக் & விஜயபிரகாஷ் பங்கேற்றுப் பாடிய இசை நிகழ்ச்சி, காமராஜர் அரங்கம், 2015
* நன்கொடையாளர்கள், பயனாளிகள், அமைப்பின் உறுப்பினர்கள்
கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி, ஜி.ஆர்.டி ஹோட்டல், 2016
* இசையமைப்பாளர் டி.இமான் நேரடியாக பங்கேற்று சிறப்பித்த ”இமான் பாடல்கள்” மட்டும் இடம் பெற்ற இசை நிகழ்ச்சி, காமராஜர் அரங்கம், 2017
இவ்வருடம் 2018 ல் நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியாக….
2000 வது வருடம் ”மின்னலே” திரைப்படம் மூலமாக திரையுலகில் நுழைந்து இன்று வரை தமிழ்த்திரையுலகில் கொடிகட்டிப் பறந்து வரும் நமது அனைவரது அபிமானத்திற்கும் உரிய இசையமைப்பாளர் ”ஹாரிஸ் ஜெயராஜ்” தலைமையில், முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் முன்னிலையில், பின்னணிப் பாடகர்கள் பங்கேற்க ”ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்” மட்டும் இடம்பெறும் ”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் பிரம்மாண்டமான இசை விழா, சென்னை காமராஜர் அரங்கில் பிப்ரவரி 10 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.05 மணிக்கு நடைபெறுகிறது.
இன்றைய நாட்களில் ஒரே ஒரு குழந்தையைப் படிக்க வைக்கப் பல பெற்றோர்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சுமார் 500 மாணவர்களுக்கு பெற்றோர்களாக அவதாரமெடுத்துப் படிக்க வைக்கும் “சென்னை ஃபவுண்டேஷன்” உறுப்பினர்களுக்கு பக்கபலமாக இருக்க உங்கள் அனைவரையும் இந்த நிதி திரட்டும் நிகழ்விற்கு அழைக்கின்றார்கள்.
நீங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் நேரில் வந்து இசை நிகழ்ச்சியை கண்டுகளித்து, தங்களால் இயன்ற நிதியை ஏழை மாணவர்களின் வாழ்விற்காக வழங்கி உதவிடுமாறு வேண்டுகின்றார்கள்.
“சென்னை ஃபவுண்டேஷன்” உறுப்பினர்கள் மேலும் குறிப்பிடுகையில் ;
நீங்கள் அளிக்கும் நிதியோ உதவியோ சிறிது என்றெண்ணித் தயங்கிட வேண்டாம். அவசியம் நேரில் வந்து இவ்வமைப்பின் உறுப்பினர்கள் என்ன பணியை செய்கிறார்கள், எத்தனை பேருக்கு உதவி செய்கின்றார்கள், எப்படி செய்கின்றார்கள், யாருக்கெல்லாம் உதவி செய்கின்றார்கள் என்பதைக் கண்டு கேட்டு பின்னொரு தருணத்தில் கூட நீங்கள் உதவலாம் என அன்புடன் வேண்டுகிறோம்.
“சென்னை ஃபவுண்டேஷன்” நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உதவி பெறும் மாணவர்கள், உதவி செய்யும் அன்பர்கள் அனைவரையும் நீங்கள் காமராஜர் அரங்கில் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வருக ! ஆதரவு தருக !
முகவரி :
“சென்னை ஃபவுண்டேஷன்”
எண்,2 முதல் குறுக்கு தெரு,
செம்மம்பேட்டை,
கெல்லீஸ்,
சென்னை 600 010
தொலைபேசி : +91 98411 63378, +91 98419 02333
மின்னஞ்சல் : contactus@chennaifoundation2013@gmail.com
இணையதளம் : www.chennaifoundation.org
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் வடபழநி லஷ்மன் ஸ்ருதி இசையகத்தில் கிடைக்கும். தொலைபேசி எண் 044 44412345
கடந்த ஆண்டுகளில் நிதி திரட்டும் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள பிரபலங்கள்
இயக்குநர்கள் : பாண்டிராஜ், சுசீந்திரன்
நடிகர்கள் : விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நாசர், பிரசன்னா, அதர்வா, வசந்த் விஜய், விமல், சந்திரன் (கயல்), ஜெயபிரகாஷ்
நடிகைகள் : ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், காயத்ரி, ஜனனி ஐயர், சங்கீதா க்ரிஷ்
இசையமைபாளர்கள் : இமான், ஹாரிஸ் ஜெயராஜ்
பின்னணிப் பாடகர்கள் : மனோ, க்ரிஷ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ஜித்தின்ராஜ், வந்தனா ஸ்ரீநிவாஸ், அனிதா கார்த்திகேயன், ப்ரசன்னா, ரோஷினி, மகாலிங்கம்,
சின்னத்திரை பிரபலங்கள் : சி.கோபிநாத், நிஷா, அஞ்சனா
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ -பாரதி