லண்டன் தமிழர்களை அதிர்ச்சியடையச்செய்த ஒரு சம்பவம் கடந்த 26ம் திகதி வட்போர்ட் (Watford) என்னும் லண்டன் வடமேற்கு புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இரண்டு வர்த்தக நிறுவனங்களை வைத்து நடாத்தும் இளம் வர்த்தகரான 34 வயதுடைய பிரசன்னா அருள்செல்வம் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் மேலதிக சிகிச்சைக்காக புனித மேரிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டபோதும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்போர்ட்ல் உள்ள கொஸ்ட்கோ மொத்த விற்பனை நிலையத்துக்கு கொள்வனவு செய்வதற்காக சென்றபோதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மதியத்துக்கு பின்னான பகல் பொழுதில் இச்சம்பவம் நடைபெற்றமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் 11 நாட்களாக உயிருக்கு போராடி கடந்த 05ம் திகதி மரணமடைந்துள்ளார். இவரது மரணத்தை பொலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள். இச் சம்பவம் விபத்தா அல்லது கொலையா என பொலிசார் குழம்பிப்போய் உள்ளார்கள், மேலும் இவ்விபத்திற்கு முன்னர் அல்லது பின்னர் வெள்ளை நிற வான் ஒன்று இவ்வாகன தரிப்பிடத்திலிருந்து ஹர்ட்ஸ்பிரிங் வழியே வெயியேறுவதை எவரேனும் கண்ணுற்றிருந்தால் பொலிஸ் நிலையத்துடன் 01707 355959 அல்லது 0800 555 111 எனும் தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ளுமாறும் அவர்களுடைய விபரங்கள் மிகவும் இரகசியமாகவே பேணப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.