தாயகத்தில் இம்முறையும் அதிகம் மக்கள் மயயப்படாத ஒரு நினைவுகூர்தலைத்தான் காண முடிந்தது. அதேசமயம் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் நினைவு கூரப்பட்டுள்ளது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி முன்னைய ஆண்டுகளை விட பரவலாக ஒர் அரசியல் பயில்வாக மாறியிருக்கிறது. நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்தும் விடயத்தில் தமிழ் மக்கள் மேலும் முன்னேற வேண்டி இருக்கிறது.ஒரு கஞ்சி மட்டும் போதாது.பெருந்தமிழ் பரப்பில் தமிழ் மக்களை ஒரு உணர்ச்சிப் புள்ளியில் இணைப்பதற்கு மேலும் புதிய வழிகளை தமிழ்மக்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
நினைவுகளை எப்படி ஆழமாகவும் பரவலாகவும் தலைமுறைகள் தோறும் கடத்தலாம்? உலகப் பரப்பில் அனைத்துலக மயப்படுத்தலாம்? என்று சிந்திக்க வேண்டும்.குறிப்பாக திரைப்படத்துறையில் அதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஒரு காலம் இந்தியாவில் ஈழத் தமிழர்கள் அகதிகளாக; கையேந்திகளாக இருந்தார்கள்.ஆனால் இப்பொழுது கோடம்பாக்கத்தில் டொலர்களை முதலீடு செய்யும் ஒரு வளர்ச்சியை ஈழத்தமிழர்கள் பெற்றுவிட்டார்கள்.அவ்வாறு கோடம்பாக்கம் திரைத்துறையில் முதலீடு செய்பவர்கள் வணிக நோக்கிலான திரைப்படங்களை நோக்கியே அதிகம் உழைப்பதாக தெரிகிறது. மாறாக ஈழத்தமிழர்களின் கூட்டுக்காயங்களையும் கூட்டு மனவடுக்களையும் வெளிக்கொண்டுவரும் திரைக்காவியங்கள் எத்தனை இதுவரையிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன?
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன? இனப்படுகொலையை நிரூபிக்கும் கலைச் சாட்சியங்கள் என்று கருதத்தக்க நாவல்கள் சிறுகதைகள் ஓவியங்கள் போன்ற கலைப்படைப்புகள் எத்தனை வெளிவந்திருக்கின்றன ?இனப்படுகொலையின் ஆதாரங்களை காட்சிப் படுத்தும் விதத்தில் எத்தனை ஒளிப்படத்தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன? எத்தனை ஒளிப்படக் காட்சிகள் உலகப்பரப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன?முள்ளிவாய்க்கால் இழப்புக்களை மையப்படுத்தி முழுப்பெருந்தமிழ்ப் பரப்பையும் ஒன்றுதிரட்டவல்ல உன்னதமான பாடல்கள் எத்தனை இசையமைக்கப்பட்டுள்ளன? இவையெல்லாவற்றையும் யார் செய்வது ?
நினைவு கூர்வது என்பது அந்த இழப்புக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படமுடியாத ஒரு பகுதியே.அதன் இறுதி விளைவைக் கருதிக்கூறின் நினைவுகூர்தல் எனப்படுவது நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட்டவியலாத ஒரு பகுதிதான். அப்படியென்றால் நினைவு கூர்தல் எனப்படுவதை நீதிக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிட வேண்டும் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவது என்பது மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு கூறுவதுபோல குழந்தை பிள்ளைக்கு நிலைக்கண்ணாடியில் நிலவைக் காட்டுவது போன்றது அல்ல.மாறாக அது நிலவை நோக்கிய ஒரு பயணம். நிலவை நோக்கி எப்படி பயணம் செய்வது?அதற்குரிய பொருத்தமான வழி வரைபடம் எது? பன்னிரண்டாவது நினைவுகூர்தல் காலத்திலாவது அதைக்குறித்து தமிழ்ச்சமூகம் சிந்திக்குமா?
அந்த வழி வரைபடத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் ?முதலாவதாக தமிழ்த்தரப்பு ஒரு பொருத்தமான தேவை கருதிய ஐக்கியத்திற்காவது போகவேண்டும்.தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் தாயகத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் சட்ட வல்லுனர்களும் ஒன்றிணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.அப் பொதுக்கட்டமைப்பே நீதியை பெறுவதற்கான வழி வரைபடத்தை தயாரிக்க வேண்டும்.
இதுவிடயத்தில் கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்த் தரப்பு முதலாவது படிக்கட்டில்தான் அடி எடுத்து வைத்திருக்கிறது.அது கூடப் போதாது. நடந்தது இனப்படுகொலை என்பதனை தாயகத்துக்கு வெளியே இருக்கக்கூடிய தரப்புக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் மேலும் வெற்றி பெற வேண்டியுள்ளது.தமிழ் வாக்காளர்களை கவனத்தில் எடுத்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மட்டும் போதாது. அவை தொடக்கமே. அவற்றுக்கும் அப்பால் அத்தீர்மானங்கள் நாடுகளின் கொள்கை முடிவுகளாக மாற்றப்படவேண்டும். பதவியில் இருக்கும்வரை இனப்படுகொலை என்பதனை வெளிப்படையாகக் கூறாத அரசியல் தலைவர்களும் நாடுகளின் தலைவர்களும் ஐநாவின் பிரதானிகளும் ஓய்வு பெற்றபின் அதை இனப்படுகொலை என்று கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா -அவருடைய காலத்தில்தான் வன்னி கிழக்கு புதைமேடு ஆக்கப்பட்டது -அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அதை இனப்படுகொலை என்று கூறவில்லை. ஆனால் அதற்கு கிட்ட வரும் ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அவரைப் போன்று ஓய்வு பெற்றவர்கள் தயங்கி தயங்கி ஒப்புக்கொள்ளும் உண்மைகளை பதவியில் இருக்கும்போதே சொல்ல வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் அண்மை ஆண்டுகளாக நினைவுகூர்தலின் போது முன்னாள் ஐநா பிரதானிகளும் ஓய்வுபெற்ற தலைவர்களும் உரை நிகழ்த்துகிறார்கள். இது ஒரு வளர்ச்சி.அடுத்தகட்டமாக பதவியில் இருப்பவர்களும் பொறுப்புக்களில் இருப்பவர்களும் அதைக் கூற வேண்டும். அதுதான் வெற்றி.இது இரண்டாவது படிக்கட்டு.
மூன்றாவது படிக்கட்டு-அவ்வாறு நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக கொள்கை தீர்மானங்களை எடுப்பதன் மூலம் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான அனைத்துலக பொறிமுறைகளை நோக்கி சான்றுகளையும் சாட்சியங்களையும் தொகுத்து செலுத்தவேண்டும். அனைத்துலக நீதி என்பது அரசுகளின் நீதிதான். அது தூய நீதி அல்ல. எனினும் அனைத்துலக நீதிப் பொறிமுறைகளூடாக சாட்சியங்களை பொருத்தமான விதங்களில் தொகுத்தளிப்பது அவசியம். அனைத்துலக நீதிமன்றங்கள் நடந்தது இனப்படுகொலை என்று தீர்ப்புக்கூறுவது என்பது தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்.ஆனால் அந்த நீதி ஒரு அரசியல் நீதியாக தூலமான ஒரு அரசியல் நடைமுறையாக மாற்றப்பட வேண்டும். இது மிக முக்கியம். அனைத்துலக நீதிப் பொறிமுறைகள் எதனிடமும் அத்தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு வேண்டிய அனைத்துலக கட்டமைப்புகள் கிடையாது. அனைத்துலக நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் பிரயோக வடிவத்தை பெறுவது என்றால் அதற்கு நாடுகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம். ஆனால் நாடுகளின் ஆதரவோ ஒத்துழைப்போ அறநெறியின் பாற்பட்டவை அல்ல முழுக்க முழுக்க நலன்களின் அடிப்படையிலானவை.
இதற்கு மிகபிந்திய உதாரணம் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக அனைத்துலக நீதி மன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் ஆகும். அத்தீர்ப்புகளை அவற்றின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியவில்லை.ஏனெனில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுத்து வருகிறது. எனவே தமிழ் மக்கள் இதுவிடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும்.
நீதிக்காகப் போராடிய எல்லா மக்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. மட்டுமல்ல பல சமயங்களில் அது உடனடியாகவும் கிடைக்கவில்லை. குறிப்பாக ஆர்மீனியர்களைப் பொறுத்தவரை அந்த இனப்படுகொலையை உலக சமூகம் இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. 106 ஆண்டுகளின் பின்னர்தான் அதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது.அதுமட்டுமல்ல ஆர்மீனியர்களை இனப் படுகொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.அதுபோலவே செச்சினியர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை.சூலு மக்களை கொன்றொழித்த குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை. பயாfறா மக்களை கொன்று குவித்த குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை.பாலஸ்தீனர்களுக்கு இன்று வரையிலும் நீதி கிடைக்கவில்லை. எனவே இந்த உலகில் எல்லா இனப் படுகொலைகளுக்கும் நீதி கிடைக்கவில்லை என்ற குரூரமான முன்னுதாரண த்தில் இருந்து தமிழ்மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இனப்படுகொலைக்கு எதிராக இதுவரை கிடைத்த நீதிகளும் தூய நீதிகள் அல்ல. அவை அரசியல் நீதிகள்தான். உதாரணமாக யூதர்களுக்கு இனப்படுகொலைக்கு எதிரான நீதி கிடைத்தது. ஏன் கிடைத்தது? அது அவர்களுடைய புவிசார் அமைவிடம் காரணமாகக் கிடைத்தது. அதே காரணத்தால்தான் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பது பின்தள்ளிப்போகிறது.
அது மட்டுமல்ல தமிழ் மக்கள் யாரிடம் நீதி கேட்கிறோம் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும்.ஆர்மீனிய இனப் படுகொலையை இன்று வரையிலும் ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடு பிரித்தானியா.அதுதான் அன்மையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஐநா தீர்மானத்தை முன் நகர்த்தியது. அதன் பின்னணியில் நின்ற நாடு அமெரிக்கா.ஆனால் செவ்விந்தியர்களின் இனப்படுகொலையின் மீதுதான் அமெரிக்கா என்ற தேசம் கட்டி எழுப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்டு.கொன்றொழிக்கப்பட்ட செவ்விந்தியர்களுக்கு இன்றுவரையிலும் நீதி கிடைக்கவில்லை.நூரெம்பேர்க் தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தப்பட்டால் அமெரிக்காவின் எல்லா தலைவர்களையும் தூக்கில் போட வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அறிஞராகிய நோஆம் சோம்ஸ்கி கூறியிருக்கிறார்.வரும் செப்டெம்பர் மாதம் தொடங்கவிருக்கும் ஐநாவின் தகவல் திரட்டும் பொறிமுறைக்கு நிதி உதவி செய்யப்போவது ஒஸ்ரேலியா ஆகும்.அந்நாட்டின் பூர்வகுடிகளுக்கு நீதி கிடைத்ததா? எனவே யாரிடம் நீதி கேட்கிறோம் அந்த நீதியின் புனிதம் எத்தகையது என்பதை குறித்து தமிழ் மக்களிடம் அறம்சார்ந்த விழிப்புணர்வும் வேண்டும் உரிமை சார்ந்த விழிப்புணர்வும் வேண்டும். பூகோள மற்றும் புவிசார் அரசியல் உறவுகள் சார்ந்த விழிப்புணர்வும் வேண்டும்.
மிகச்சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் ஒருபுறம் இனப்படுகொலைக்கு உள்ளாகிறார்கள்.அதன் விளைவாக உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள்.இப்பொழுது மிஞ்சியிருக்கும் எல்லாருமே இனப்படுகொலையில் தப்பியவர்கள்தான்.தாயகத்துக்கு வெளியே ஆகக்கூடியது மூன்றில் ஒரு பகுதியினர் வசிக்கிறார்கள். புலப்பெயர்ச்சி ஒருவிதத்தில் தாயகத்தின் சனச்செறிவை பாரதூரமான விதங்களில் குறைத்திருக்கிறது. இன்னொரு விதத்தில் அதுவே நீதிக்கான போராட்டத்தின் பலமாகவும் மாறி இருக்கிறது. ஒரு தீமையில் கிடைத்த நன்மை அது.
இவ்வாறு கூடு கலைந்த பறவைகள் போலிருக்கும் ஈழத்தமிழர்கள் நீதிக்காக அர்மீனியர்களைப் போல நூற்றாண்டு காலம் காத்திருக்க முடியாது.தலைமைத்துவத்தின் பலவீனம் ஒடுக்குமுறையின் தொடர்ச்சியறாத் தன்மை என்பவற்றின் பின்னணியில் காத்திருக்கும் காலம் நீள நீள தமிழ் அரசியலும் நீர்துக்கொண்டு போகும் வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன.
இதுவரையிலும் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானங்களை யாரும் மையத்திலிருந்து வழிநடத்தவில்லை.அவை இயல்பாக தமிழ் உணர்வின் பாற்பட்டும் தமிழ் வாக்குவங்கியை இலக்காகக் கொண்டும் நிறைவேற்றப்பட்டவை. எனினும் இத்தீர்மானங்களை இனியாவது ஒரு மையத்தில் கோர்க்க வேண்டும்.அப்படிச் செய்தால்தான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். எதுவும் தாயகத்தை மையமாகக் திட்டமிடப்பட வேண்டும்
இது தொடர்பில் அதிகம் பொறுப்போடும் தீர்க்கதரிசனமாகவும் சிந்திக்க வேண்டியது தாயகத்திலுள்ள கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சிவில் சமூகங்களும்தான்.ஏனெனில் தாயகம்தான் மையம். இந்த மையத்தில் இருந்தே எதுவும் திட்டமிடப்பட வேண்டும். மையம் வெளியில் இருக்க முடியாது. குஞ்சுதான் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியில் வரவேண்டும். குஞ்சு முட்டைக் கோதைக் கொத்தாதவரை அதை வெளியில் இருந்து உடைக்க முற்படுவது சில சமயம் முட்டையைக் கூழாக்கிவிடும். எனவே இது விடயத்தில் தாயகத்தில் தமிழ்த் தரப்பு குறைந்தது தந்திரோபாயமாக ஆவது ஐக்கியப்பட்டு ஒரு பலமான மையமாக மாற வேண்டியது தவிர்க்கப்பட முடியாத ஒரு முன் நிபந்தனையாகும் ஐக்கியம் இல்லையென்றால் தமிழ் மக்களுக்கு நீதி இல்லை.
நிலாந்தன்