செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை ஈழச் சிவத் தலங்களில் ஒன்றான உருத்திரபுரீச்சரம்! | ஜனனி மோகனதாஸ்

ஈழச் சிவத் தலங்களில் ஒன்றான உருத்திரபுரீச்சரம்! | ஜனனி மோகனதாஸ்

6 minutes read

உருத்திரபுரத்தின் பிரதான ஆலயமாக உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரம் சிவாலயம் காணப்படுகிறது. இலங்கையில் முதன்மை கொண்ட சமயமாக சைவசமயம் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. திருமூலநாயனார் ஈழத்தை சிவபூமி என்றழைத்தார். சைவத் தலங்களில் சிவனுக்குரிய திருத்தலங்களாக பஞ்ச ஈஸ்வரங்களான திருக்கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் தொண்டேஸ்வரம் ஆகிய ஐந்தும் சிறப்புடைத் தலங்களாக கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் சப்த ஈஸ்வரங்கள் இருந்ததாக கூறப்படுகின்ற போதும் இவை வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் உணரப்படவில்லை. எனவே உருத்திரபுரம் ஆலயம் இதில் ஒன்றாக இருக்கலாம் என்பது மனங்கொள்ளத்தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வன்னிநாட்டு பெரும்பகுதி காடாகிவிட்டது. வடமாகாண அதிபராக இருந்த துவையினம் துரை 1882 ஆம் ஆண்டு ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் மாட்டு வண்டியில் அக்கராயன் பரந்தன் அடம்பன் உருத்திரபுரம் முதலிய இடங்களைப் பார்வையிட்டார்.

செப்டம்பர் 2ஆம் திகதி உருத்தரபுத்திற்கு சென்றார். அவர் தமது நாட்குறிப்பில் உருத்தரபுர பெருங்குளத்தையும் அங்கு அழிவுற்று கிடந்த ஆலயத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பழம் கோயிலுக்குரிய ஆறு கற் தூண்களை கண்டதாகவும் அங்கு ஒரு காலத்தில் ஒரு நகரம் இருந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின் கிளிநொச்சி பரந்தன் முதலிய இடங்களில் மக்கள் பழையபடி குடியேறும் வரைக்கும் உருத்திரபுரம் தேடுவரற்று கிடந்தது. இரணைமடுக்குளம் திருத்தப்பட்ட பின் இப்பகுதி மக்களுக்கு நீர்பாய்ச்சல் வசதியேற்பட்டு குடியேறத் தொடங்கினர். பத்தாம் வாய்க்கால் பகுதியில் குடியேறிய மக்கள் அளவெட்டி அனலைதீவு பகுதியில் இருந்து வந்தவர்களாகையால் இவர்கள் சிவபக்தியில் சிறந்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் தாம் குடியேறிய பிரதேசத்தில் ஓர் விநாயகர் ஆலயத்தை அமைத்து வழிபட்டனர். அதுவே உருத்திரபுரம் மாணிக்க விநாயகர் ஆலயம் ஆகும்.

இப்படி வாழ்ந்து வந்தவர்கள் தங்கள் அருகாமையில் இருந்த காட்டில் ஒரு பிரதான சிவாலயம் இருப்பதை கேள்விப்பட்டதோடு விசேட காலங்களில் அக்காட்டில் இருந்து மணியோசை வருவதை கண்டறிந்தார்கள். இவ் ஓசைகள் எல்லாம் தேவர்கள் அங்கு வழிபடுவதால் ஏற்பட்டது என்று மக்கள் கூறிக்கொண்டனர். இப்படி நிகழ்ந்து வரும் காலத்தில் அரசாங்கத்தார் புனிதத்தன்மை வாய்ந்த நிலத்தை பிற மதத்தவர்களுக்கு கொடுத்துவிட்டனர். அதை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசாங்கத்திற்கு மனுச் செய்ததோடு யாழ்ப்பாணத்திலுள்ள சைவ தாபனங்களுக்கும் எழுதினர். இவ் விடயத்தில் அதிக கவனம் எடுத்தவர்களுள் ஒருவராக வேலாயுதசுவாமி காணப்படுகின்றார். அடுத்து யாழ்ப்பாணத்து சைவ ஸ்தாபனங்களில் இந்து சன்மார்க்க சங்கமே இவ் விடயத்தில் அதிக கவனம் செலுத்தியது.

வேலாயுத சுவாமி என்கின்ற திருவாளர் காந்தி வேலாயுதம் பிள்ளை என்பவர் தவத்திரு வடிவேற் சுவாமிக்கும் இவ் அற்புதத்தை தெரிவிக்க அவர் அக்காலத்தில் சமய தொண்டாற்றிய சன்மார்க்க சபையினருக்கு தெரியப்படுத்தி காட்டை வெட்டி துப்பரவு செய்தார். சிதம்பரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்தை ஒத்த கற்றூண்களும் கருங்கற் பாறைகளும் இருக்கக்கண்டு இவ்விடத்தில் ஒரு சிவாலயம் இருந்திருக்கலாம் என ஊகித்து அக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் இவ்வாலயம் பற்றி எழுதினார். அதை அறிந்த யோகர்சுவாமிகள் தன்னுடைய வேட்டி முடிச்சில் இருந்த பணத்தை எடுத்து சன்மார்க்க சபையிடம் கொடுத்து கோயிலின் கட்டிட பணிக்கு வித்திட்டார்.

இந்து சன்மார்க்க சங்கத்தை சேர்ந்தவர்கள் 1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி உருத்திரபுரம் சென்று பழைய சிவாலயம் இருந்த இடத்தில் கூட்டம் நடத்தினர். அக் கூட்டத்திற்கு இந்து சன்மார்க்க சங்கத் தலைவர் கலைப்புலவர் க. நவரத்தினம் இணைக்காரியதரிசி வடிவேலு சுவாமிகள் வேலாயுத சுவாமி அவர்கள் நடேஸ்வராக் கல்லூரி அதிபர் ஆ.மார்க்கண்டு வைத்திஸ்வரா கல்லூரி அதிபர் காந்தீய சேவா சங்க காரியதிகாரி சி. வேலாயுதம் பிள்ளை முதலியோர் சமூகம் கொடுத்தனர். சைவப் புலவர் க. நவரத்தினம் வன்னி நாட்டின் பண்டைச் சிறப்பையும் அங்கு சைவம் வளர்த்த வரலாற்றையும் எடுத்துக் கூறி உருத்திரபுரம் சிவாலயத்தை அதன் பண்டை சிறப்புக்கு ஏற்ப புனருத்தாரணம் செய்ய வேண்டிய அவசியத்தை விளக்கினார். குடியேற்றப் பகுதிகளில் வறுமை நோய் என்பவற்றைக் ஏதுக்களாகக் கொண்டு சைவ மக்களை மதமாற்றுவதை தடுக்க வேண்டிய அவசியத்தை பலர் வற்புறுத்தினர். அக் கூட்டத்தில் சிவாலயத்தை புனர்நிர்மாணம் செய்வது என்றும் தீர்மானித்து சிவாலயத்திற்கு சிவலிங்கத்தை 1955 ஜூன் மாதம் 29ஆம் தேதி பிரதிஷ்டை செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. இச் சிவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம் இரண்டு மைல் தொலைவிலுள்ள பொறிக்கடவை அம்மன் கோயிலில் இருக்கிறது என்றும் அதயே பொருத்தமான லிங்கத்தை செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும் அனைவரும் விரும்பினர். அம்மன் கோவிலுக்கு சென்று பார்த்த பொழுது அந்த பழைய ஆவுடையார் லிங்கம் நன்நிலையில் இருப்பதைக் கண்டு அதையே ஸ்தாபிப்பது என்று நிச்சயிக்கப்பட்டு அதற்கேற்றபடி லிங்கம் செய்யப்பட்டது. இந்த ஆவுடையாரை எடுத்து முன்னர் கூறப்பட்டது போன்று ஜூன் மாதம் 29ஆம் தேதி சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அழிவுற்ற உருத்திறபுரீஸ்வரம் ஆலயத்தினை மீளமைக்கும் வேலைகள் 1949ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிவாலய பிரதிஷ்டை வன்னி நாட்டின் சைவ சமயத்திற்கு புத்துயிர் அளித்தது என்று கூறுதல் மிகையாகாது. பரந்தன் கிளிநொச்சி முதலிய இடங்களிலிருந்து மக்கள் கால்நடையாகவும் மாட்டு வண்டிகளிலும் பால் பழம் முதலிய அபிஷேக திரவியங்களுடன் வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்வாலயம் ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. அதாவது ராஜராஜ சோழன் காலத்திற்கு முற்பட்டது என்று இன்றுவரை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உருத்திரபுரீஸ்வரமும் அதன் சூழலும் ஒரு காலத்தில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய தற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஈழத்தில் காணப்பட்ட சிவாலயங்கள் பல அந்நியர் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்டது போல இவ் ஆலயமும் அழிக்கப்பட்டுள்ளமைக்கான பல தடயங்கள் காணப்படுகின்றன. இக் கோயில் சோழப் பெருமன்னர் காலத்திற்கோ அல்லது அதற்கு முற்பட்டதோ என்பதனை அக்காலத்து லிங்கம் கிடைக்காவிடினும் அப்போத் கண்டுபிடிக்கப்பட்டு இந்த சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆவுடையார் பகுதி விளங்குகிறது.

இவ் ஆவுடையார் சதுர வடிவமானது பிரம்மா விஷ்ணு உருத்திரன் என்ற மூன்று பாகங்களாக அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் காலத்திற்கு முற்பட்டது அல்லது ஆரம்ப சோழர் காலத்திற்குரியது.அக் காலத்தில்தான் சதுர வடிவ ஆவுடையார் கொண்ட லிங்கம் சிவாலயங்களில் வைத்து வழிபட்டு வரப்பட்டது. பிற்பட்ட காலத்தில் வட்டமான ஆவுடையாரே பிரதிஸ்டை செய்யப்பட்டது.

1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் மாதம் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. அன்று உருத்திரபுரம் சிவாலயத்திற்கு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு .மா. ஸ்ரீகாந்தா என்பவர் அத்வாரம் இட்டார். இவ் ஆலயத்தை கட்டும் பொறுப்பை பிரபல மோட்டார் வாகன வர்த்தகர் திரு செல்லையா ஏற்றுக்கொண்டார்.

. 16 6 1956 இல் நிர்வாக சபையை பொறுப்பேற்ற டாக்டர் குருசாமி அவர்களது அயராத முயற்சியால் நிதி சேகரிக்கப்பட்டு மூலக் கருவறை தேவி மண்டபம் விநாயகர் ஆலயம் என்பன கட்டி முடிக்கப்பட்டு 27.08. 1958இல் குடமுழுக்கு இடம்பெற்றது பிள்ளையார் விக்கிரகம் அம்பாள் விக்கிரகம் ஆகியன இந்தியாவிலிருந்து கலை புலவர் நவரத்தினம் அவர்களால் வடித்து கொண்டு வரப்பட்டது.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி அம்பாள் கோயிலை கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிற்பர் க கனகசபை அவர்கள் அம்பாள் கோயிலுக்கு அத்திவாரம் இட்டார். 1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி பிள்ளையார் ஆலயத்திற்கு சுப்பிரமணிய ஆலயத்திற்கும் குலசிங்கம் மடத்துக்கும் அத்திவாரம் இடப்பட்டது. இவ் அத்திவாரத்தினை ஸ்ரீகாந்தா சுவாமி வாரனந்தர் மற்றும் அப்புக்காத்து குலசிங்கம் அவர்களின் மகன் உருத்திர சிங்கம் அவர்களும் அத்திவாரம் இட்டனர். பிள்ளையார் கோயிலை கட்டும் பொறுப்பை திரு. க. சதாசிவம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். குலசிங்கம் மடத்தை கட்டும் பொறுப்பை குலசிங்கம் அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இக் கும்பாபிஷேக நிகழ்வுகள் யாவும் கீரிமலையிலிருந்து வந்த ஐயம்பிள்ளை சிவாச்சாரியார் என்பவரால் தமிழிலேயே செய்யப்பட்டமை சிறப்புக்குரியது. அதன் பின்பு அவருடைய சந்ததியினரே ஆலயத்தின் நித்திய நைமித்திய பூசைகள் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயம்பிள்ளை உருக்கள் தீர சைவத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சிவாலயம் மூர்த்தி தலம் தீர்த்தம் விருட்சம் என்பன ஒருங்கே அமையப் பெற்றது. ஆலயத்தின் தென்கிழக்கு புறமாக 50 யார் தொலைவில் மிகவும் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. உருத்திரபுரீஸ்வர பெருமானது பெயரே சூட்டப்பட்டுள்ளது. உருத்திர பெரும் குளம் என ஆதியிலும் உருத்திரபுரக் குளம் என தற்போது அழைக்கப்பட்டு வருகின்றது . இக் குளமே சிவாலயத்தின் தீர்த்தமாகும். கோயிலின் தென்புறத்தே குளக்கரையில் ஏறக்குறைய 10 அடி சுற்றளவு உடைய புளியமரம் ஒன்று உண்டு. இப் புளியமரம் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக காணப்படுகிறது. இப் புளிய மரமே தலவிருட்சமாக காணப்படுகிறது.

1980 ஆவணி மாதம் நயினை பிரம்ம ஸ்ரீ பரமேஸ்வர குருக்கள் மூலம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.20. 01. 2011ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் இடம்பெற்றது. ஈலத்திலுள்ள பழமைவாய்ந்த ஆலயமான உருத்திறபுரீஸ்வரரீ ஆலயத்தில் தினமும் மூன்று வேளை பூஜை வழிபாடுகள் இடம்பெறுகிறது. அனி உத்தரத்தை தீர்த்தமாகக் கொண்டு அதற்கு முன்னர் வரும் 10 நாட்கள் மகோற்சவத் திருவிழா பிரதோசம் விரதம் கேதாரகௌவரி விரதம் திருவம்பாவை மகா சிவராத்திரி நித்திய பூஜைகள் சாவம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சோழர்கால பெருமை மிகுந்த சிவாலயம் எழில் மிக்க பிரதேசத்தில் அமைந்துள்ள தோடு தொல்பொருட் சின்னங்கள் உள்ள ஆலயமாக இலங்கை புத்தசாசன அமைச்சினால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இவ்வாலயமானது பழமை வாய்ந்த சிவனது அருளாசியால் பல கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற திருவருள் கொண்டது. அதற்கமைய இன்று ஆலயப் புனருத்தாரண வேலை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனனி மோகனதாஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More