கடந்த மார்ச் 2016ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டமுள்ள மையப்பகுதியில் சங்கரும் கெளசல்யாவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அதில் கெளசல்யாவின் காதல் கணவர் சங்கர் உயிரிழக்க, உயிர் பிழைத்த கெளசல்யா தனது பெற்றோரே சாதி பெருமைக்காக இந்த கொலையை செய்ததாகக் குற்றஞ்சாட்டினார். இதனை மையமாகக் கொண்டே “இந்தியாவின் தடைச் செய்யப்பட்ட காதல்” (India’s Forbidden Love) என்ற ஆவணப்படத்தை சாதனா சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.
சங்கர் கொலைச் செய்யப்பட்டதற்காக நீதி வேண்டி இருந்த கெளசல்யாவின் பயணத்தை ஒருபுறமும், தனது பெற்றோர் விடுதலை செய்யப்படுவார்கள் என காத்திருந்த அவரது தம்பி கெளதமின் பார்வையை மறுபுறமும் என இரு கோணங்களில் இப்படம் நகர்ந்துள்ளது. இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதிய படிநிலையால் இரு வெவ்வேறு பிம்பங்களாகப் பிரிந்திருக்கும் ஒரு குடும்பத்தின் கதையினை எடுத்துக் காட்டும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சாதனா சுப்ரமணியத்தின் பார்வை:
1980, 90 களில் நான் பார்த்த இந்தியா இன்று மாறியிருக்கிறது. என் வாழ்நாளில் பாதியை ஐக்கிய ராஜ்ஜியத்தில் கழித்த எனக்கு, நவீன இந்தியாவில் காணப்படும் பழமைகளுக்கும் புதுமைகளுக்குமான முரண்பாடுகளும் மரபார்ந்த பழக்க வழக்கங்களுக்கும், நவீன சிந்தனை முறைமைகளுக்குமான முரண்பாடுகளும் எனது கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இவற்றை உள்ளடக்கிய ஓர் ஆவணப்படத்தைத் தயாரிப்பது எனது எண்ணமாக இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை அதிரவைத்த உடுமலை கெளசல்யா – சங்கர் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தக் காணொளியைத் தற்செயலாகக் காண நேரிட்டது. சரியான முறையில் இந்த ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் கையாளப்பட்டால், இந்தியச் சமூகத்தில் புரையோடியிருக்கும் சாதீய அடக்குமுறைகளையும், அதற்கு எதிரான இளம் தலைமுறையின் எதார்த்த எதிர்நிலைகளையும் நேர்த்தியான முறையில் சித்தரிக்க முடியுமென நம்பினேன். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட இரு தரப்பினரது கருத்துக்களையும் உள்ளடக்குவது என முடிவு செய்தேன்.
இது ஒரு சிரமமான காரியமாக இருந்தது. சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர் தன் குடும்பத்தாருடன் இல்லை. அதேபோல் குற்றச்சாட்டப்பட்ட பெற்றோர்களோ, அவர்களின் உறவினர்களோ படப்பிடிப்பாளர்களுடன் பேச விரும்பவில்லை. இரு தரப்பினரையும் கேமரா முன் முகம் காட்டி தங்கள் குடும்பக்கதையைச் சொல்லும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு அவர்களைக் கொண்டு வருவதற்கே எட்டுமாத காலம் பிடித்தது. கெளசல்யாவின் பெற்றோர்கள் கொலைக் குற்றத்திற்கு எதிராக வழக்காடிய பொழுதிலிருந்து, அவர்களுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தை உள்ளடக்கிய 12 மாத காலத்திற்கு அவர்களைப் பின் தொடர்ந்து சென்று படமாக்க வேண்டியிருந்தது. கடந்து சென்ற இந்த நாட்கள் எனக்கு சில படிப்பினைகளை வழங்கியது.
பலமொழி, பல கலாச்சாரங்களை, உள்ளடக்கிய பிரம்மாண்ட இந்தியா! அது எவ்வளவு தூரம் நவீனத்தைத் தழுவிச் சென்றாலும் சாதீயக் கட்டமைப்பும், அதுசார்ந்த பாரம்பரிய பழக்க வழக்கமும், நம்பிக்கையுமே அதன் ஆதாரமாக இன்னமும் தொடர்கிறது என்ற உண்மையை எனக்கு உணர்த்தியது. இதன் தாக்கம் பெண்கள் மீது அதிகமாக இருக்கிறது. சாதி மறுப்புத் திருமணம், மாற்று மதத்தவரை மணம் புரிபவர் மீது காட்டப்படும் காழ்ப்புணர்ச்சிகள், அவமரியாதைகள், வன்முறைகள் வெளிக்கொணரப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அறியப்படாமலே போய் விடுகின்றனர். ஆனால் துணிச்சல் மிக்க இளம் மங்கை கெளசல்யா, தனது கணவனின் கொலைக்கு நீதி கேட்டு போராடுவதும், தன் மீது பாரம்பரிய கட்டுக்கள் செலுத்த முனையும் ஆதிக்கத்திற்கு அடி பணிய மறுப்பதும் எனது கவனத்தை ஈர்த்தது.
மற்றொரு வகையில் கெளசல்யாவின் குடும்பமும் சாதீயக் கட்டமைப்பிற்கு பலியாகிப் போனவர்கள் என்ற உண்மை என்னைஆச்சர்யப்பட வைத்தது. தங்கள் மகள் மாற்று சாதியினரை மணம் முடித்தபோது, அந்தச் சமூகம் அவர்கள் மீது செலுத்திய நிர்பந்தம், அவமரியாதை, பழிச்சொல் என அனைத்தையும் நான் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. அவற்றை நேர்செய்து மீள அவர்கள் செய்த ஆணவக்கொலை எனும் கொடூரத்தை நியாயப்படுத்தவே முடியாது. இருப்பினும் அப்படிப்பட்ட நிலைக்கு உள்ளாகும் குடும்பங்கள் தங்களது சொந்தங்களின் முன்னால் வெட்கித் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும் நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது. தனிப்பட்ட குடும்பங்கள் மீது சாதீயச் சமூகம் ஏற்படுத்தும் அழுத்தங்களைப் புரிந்து அதற்குரிய தீர்வு தேடாமல் இப்படிப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தை என்னுள் எழுப்பியது. சாதீயம் சார்ந்த வன்கொடுமைகளை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக அணுகாமல், சமூகக் கலாச்சாரப் பொருளியல் பின்னணியுடன் கூடிய அணுகுமுறை இந்தியாவிற்கு நீண்டகால நன்மை புரியுமென நம்புகிறேன்.
எனது இந்த ஆவணப்படம் சாதீய அடக்குமுறையையும், ஆணவக்கொலைகள் பற்றிய புரிதலையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். இப்படிப்பட்டப் படங்களைக் காட்டுவதன் மூலம் அப்பாவி மனிதர்கள் இவற்றால் அனுபவிக்கும் துயரங்கள் வெளிக்கொணரப்பட்டு உயர்ந்த அளவிலான ஆரோக்கியமான விவாதத்திற்கு அனைத்தையும் உட்படுத்த முடியும். அதன்மூலம் சமூகப் பார்வை அல்லது கண்காணிப்பு தம்மை நோக்கி நகரும் என்ற நம்பிக்கையைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தும். பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தரப்புக் கதையைக் கேட்க முடிவதில்லை. ஒன்று பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருப்பதில்லை. மற்றொன்று தப்பித்தவர்கள் குடும்பத்துடன் இணைந்து விடுவதால் தகவல்கள் வெளி வருவதில்லை.
இந்த ஆவணப்படம் சாதீய அடக்குமுறை, ஆணவக்கொலை பற்றிய ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துமென்பது எனது நம்பிக்கை. சமூகத்தில் ஆணவக்கொலைகள் ஏற்படுத்தும் பெரும் தாக்கங்களையும், சீரழிந்த விளைவுகளையும் துல்லியமாகக் காட்ட முயன்றுள்ளேன். அதன்மூலம் ஆணவக் கொலையின் அடிப்படை பற்றிய அறிவைப் பெறவும் பிரச்சனையின் கணத்தை ஆய்ந்துணர்ந்து அடிப்படைத் தீர்வை நோக்கிச் செல்லவும் இந்த ஆவணப் படம் உதவுமென நம்புகிறேன் எனக் குறிப்பிடடார்.
நன்றி – அல் ஜஸீரா தொலைக்காட்சி / இயக்குனர் சாதனா சுப்ரமணியம்
https://www.youtube.com/watch?time_continue=215&v=4aLys8M90Uk