சினம்கொள் படத்தில் நடித்தபோது, ஒரு ஈழப் பெண்ணாய் முழுமையாக உணர்ந்தேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் படத்தின் நாயகி நர்வினி டேரி. டென்மார்க் நாட்டில் புலம்பெயர்ந்து வசிக்கும் நர்வினி டேரி ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். படங்களில் நடிப்பது மாத்திரமின்றி, பாடல்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். கவிதைகள் கூட எழுதுவேன் என்று புன்னகைத்தபடி பேசினார்.
2017இல் சினம்கொள் படத்தின் பணிகள் துவங்கியது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு கதாநாயகியை இயக்குனர் ரஞ்சித் தேடிக் கொண்டிருந்தார். ஈழத்துப் பெண்ணாய் நடிக்க வேண்டும் என்ற தேடலில் ஈழத்துப் பெண்ணே நடித்திருக்கிறார். “இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடித்ததும் ஒரு பாத யாத்திரை போனது போலவே இருந்தது. நிறைய விசங்களை கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு காட்சியையும் ரஞ்சித்து ரசித்து எடுப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின் உள்ள உணர்வுகளை சொல்லி, வசனங்களை பேசுவதற்கு ஒரு பாடமே சொல்லி கொடுப்பார். இந்த படத்தில் செய்த ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பையும் தாண்டி உணர்வும் கலந்தே இருக்கும். அவ்வாறு நடிக்க வேண்டும் என்றே நினைத்தேன் இயக்குனர் கதை சொல்லும்போதே..” என நிறைவோடு பேசுகின்றார்.
ஆண்டவன் கட்டளை படத்தில் இலங்கை தமிழர் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந் இந்தப் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு இந்திய இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். படத்தில் பாடல்கள், மற்றும் பின்னணி இசை என்பன அற்புதமாக வந்திருக்கிறது.
இதேவேளை படப்பிடிப்பு களத்தில் பெற்ற அனுபவங்கள் குறித்தும் நர்வினி எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். “வெயிலில் எனது சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டது, வெறும் காலில் செம் மண்ணில் நடந்ததும், ஓடியதும் காயங்கள் தந்தது, இதை எல்லாம் தாண்டி எனக்கு முழுக்க முழுக்க அந்த வாழ்க்கையை பழகியது.. ஈழத்தின் கஷ்டங்களை இந்த படத்தில் நான் நடிக்கவில்லை உணார்த்தேன். என் மூலம் மற்றவர்களுக்கு உணர வைக்க முயன்றேன்.. தீபச்செவனின் வசனங்கள் ஈர்த்தது. ஒளிப்பதிவாளரின் காட்சி அமைப்பு என்னை இன்னும் சிறப்பாக நடிக்கத் தூண்டியது. துணை இயக்குனர்கள் எனக்கு உற்சாகம் தந்தனர். புரொடொக்ஷன் டீம் என்னை பிள்ளை போல் பார்த்து கொண்டது. இந்த படத்தில் ஒரு குடும்பமாக தான் எல்லோரோடும் நம்பிக்கையோடு 90 நாள் ஈழத்திலே இருந்து இந்த படத்தை சாதித்து முடித்தோம். அங்கு வேலை செய்த எல்லாருமே ஒரு தவம் போலவே இந்த படத்திற்கு வேலை செய்தார்கள். இந்த படத்தில் நடிச்சது என் வாழ்வில் கிடைச்ச மிக பெரிய பாடமும் அனுபவமுமாகும்…” என்றபடி மெய் சிலிர்க்கிறார்.