இந்த உலகில் மனிதாபிமானம் குறித்து எந்த பிரக்ஞையும் இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெருத்த அச்சத்தையே தருகின்றது. உண்மையில் 2009ஆம் ஆண்டில் இந்த உலகின் கண்களுக்கு முன்பாக ஈழத் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட போது, அந்த இனப்படுகொலையை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசின் இனஒடுக்குமுறை வன்மத்தை மாத்திரம் நாம் எதிர்கொள்ளவில்லை. மாறாக, இந்த உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதையும் நாம் உணரத் தலைப்பட்டுள்ளோம். கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தாத இவ் உலகம் எப்படியானது?
அதன் தொடர்ச்சியைத்தான் நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட இனவழிப்பு அநீதிகளுக்கு எதிராக, நீதியைக் கோரியபடி பிரித்தானிய நாட்டில் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நடாத்திக் கொண்டுள்ளார். தற்போது 16 நாட்களைக் கடந்து அதாவது 384 மணிநேரங்களை கடந்து தன்னுடைய உணவுத் தவிர்ப்பினை ஒரு பெருந் தவிப்பாக மேற்கொண்டுள்ளார். ஈழப் போராட்டத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பினை கொண்ட அம்பிகை செல்வகுமார் தனி ஒரு பெண்ணயாக ஈழ நீதிக்காக ஒரு அக்கினிப் போராட்டத்தை செய்கிறார்.
உண்மையில் உலகில் மிகவும் வலியொரு போராட்டமாக வலி மிகுந்த போராட்டமாக உணவுத் தவிர்ப்பு போராட்டம் கருதப்படுகின்றது. ஈழத்தில் இப் போராட்டம் ஏற்படுத்திய வரலாறுகள் மிகவும் நெகிழ்ச்சியும் வீரமும் ஈகமும் கொண்டவை. தியாக தீபம் திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு எதிராக மேற்கொண்ட பன்னிரு நாட்கள் துளியும் நீர் அருந்ததாத போராட்டம் உலகில் ஒப்பற்ற தியாகமாக கருதப்படுகின்றது. அதேபோல ஈழ விடுதலைக்காக அன்னை பூபதி அவர்கள் மேற்கொண்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஈழ அன்னையரின் உன்னதமான தியாகமாக ஒப்பற்ற போராட்டமாக கருதப்படுகின்றது.
அந்த வழியில் அகிம்சையை கையில் எடுத்துள்ளார் அம்பிகை செல்வகுமார். உண்மையில் அவர் எதனை வலியுறுத்துகிறார்? யாரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்? அவர் எந்த நாட்டுப் பிரஜை? ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ஸ்ரீலங்கா அரசை சர்வதேச விசாரணையைில் இருந்து காப்பாற்ற வேண்டாம் என்பதும், சர்வதேச நீதிமன்றத்தின் வாயிலாக ஸ்ரீலங்கா அரசு மீது விசாரணை நடாத்த வேண்டும் என்பதும் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை ஐநா நியமனம் செய்து ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்பதும் அவரது முன்னிலைக் கோரிக்கைககள் ஆகும்.
ஈழ மண்ணில் பிறந்து இங்கே நடந்த இனஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்த அம்பிகை செல்வகுமார் அவர்கள், இன்று பிரித்தானிய நாட்டின் குடிமகள். ஜனநாயக வழியில் அவர் நடாத்துகின்ற இந்தப் போராட்டத்தை உடன் செவிசாய்த்து, அதனை ஏற்று தன் முடிவில் மாற்றத்தை பிரித்தானியா வெளிப்படுத்த வேண்டும். உலகில் அரசியலமைப்பை கற்றுக்கொடுத்த நாடு பிரித்தானியா. இலங்கையின் அரசியலமைப்பை உருவாக்கிய நாடும் பிரித்தானியாவே. இன்றைக்கு சிங்களப் பெரும்பான்மையிடம் ஈழ மக்கள் சிக்கி இனப்படுகொலைக்கு உள்ளாக இந்த அரசியல் அமைப்பும் அடிப்படைக் காரணமே.
அது மாத்திரமின்றி பிரித்தானியா இலங்கையை ஆட்சி செய்துவிட்டு சுதந்திரத்தை வழங்கிய போது, இந்த நாட்டை இரண்டு தேசங்களாக்கி விட்டுச் சென்றிருந்தால் ஈழத் தமிழ் மக்கள் பாரிய இனப்படுகொலையை எதிர்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிராது. இலங்கைத் தீவில் தமிழ் இராட்சியங்களும் சிங்கள இராட்சியங்களும் காணப்பட்டமை வரலாறு. அத்துடன் வடக்கு கிழக்கில் தனித்துவமான ஆட்சியும் வாழ்க்கையும் இருந்தது. அதனை கலைத்து ஒற்றை நாடாக்கி தமது நிர்வாகத்திற்கு இலகு சேர்த்த பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்ட இன ஆதிக்கத்திற்கும் ஒடுக்முறைக்கும் ஒரு வித்தில் காரணியாகவும் இருக்கிறது.
இந்தச் சூழலில் பிரித்தானியாவுக்கு தனது பொறுப்பையும் வரலாற்றுத் தவறையும் சீர்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையையும் உணர்வையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு நீதி வழங்கும் ஒரு பொறிமுறையை ஏற்படுத்த பிரித்தானியா முன்வந்தால் அதள் வரலாற்றுப் பழி தீரும். தன் நாட்டில் தஞ்சம் புகுந்த பிரஜையை கொன்று தன் ஜனநாயக முகத்தில் பிரித்தானியா கரியைப் பூசிக் கொள்ளக் கூடாது. அம்பிகையை சாகடித்து வரலாற்றுப் பழியை சேகரம் செய்வதை பிரித்தானியா விரைந்து நிறுத்த வேண்டும்.
அம்பிகை செல்வகுமார் அவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக உலகம் எங்கும் ஆதரவுப் போராட்டங்களை அடையாளப் போராட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். பிரித்தானியாவில் உள்ள செயற்பாடளர்கள் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். உலகம் எங்கிலும் இருந்து ஈழ உணர்வாளர்கள் மெய்நிகர் வழியாக கலந்து கொண்டு நாள் தோறும் உரைகளை நிகழ்த்தி, அம்பிகை அவர்களின் போராட்டத்தின் நிலை பற்றியும் தேவை பற்றியும் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அத்துடன் இப் போராட்டம் பிரித்தானியாவின் செவிகளை அறையாமைக்கு எமது பக்கங்களிலும் பல பிழைகளும் சோம்பல்களும் இருப்பதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதுவரையில் 19ஆயிரம் கையெழுத்துக்கள் மாத்திரமே அம்பிகையின் போராட்டத்தை வலுப்படுத்தி வந்துள்ளதாகவும் இப் பூமியில் 13 கோடி உலகத் தமிழர்கள் வாழும் நிலையில் இந்தக கையெழுத்து எண்ணிக்கை குறித்து வெட்கப் பட வேண்டும் என்று ஈழத்தை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் இலங்கை தமிழ் தேசிய கட்சிகள் ஏன் இதில் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து வலுவான வகையில் குரல் எழுப்பவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி அம்பிகையின் போராட்டம் மற்றும் அவரது கோரிக்கை குறித்து ஆளும் கட்சியை வலியுறுத்தி வருகின்றது. இதேவேளை ஆளும் கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரித்தானிய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். அத்துடன் பிரித்தானியாவின் மற்றொரு பெரும் கட்சியான லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியும் அம்பிகைக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் இலங்கை இனவலழிப்பு போரின் சாட்சியங்களை திரட்டும் விடயத்தை தீர்மானத்தில் உள்ளடக்க பிரித்தானியா முடிவெடுத்தமை அம்பிகையின் போராட்டத்திற்கு கிடைத்த மிகுகக் குறைந்த அளவிலான வெற்றி எனலாம். எனவே பிரித்தானியாவை முழு இணக்கத்திற்கு கொண்டு எமது முழுக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது இப்போது நம் கையில்தான்.
உண்மையில் அம்பிகையின் போராட்டம் என்பது ஈழத்தில் வாழுகின்ற பல லட்சம் பெண்களின் போராட்டம். இங்கே வீதிக்கு வீதி தவிக்கின்ற கண்ணகிகளில் ஒருத்தியாகவே அம்பிகை இன்று அக்கினிக் கோலம் பூண்டுள்ளார். தமிழ் தலைமைகள் அனைவரும் இணைந்து பிரித்தானியாவின் தூதரகத்திடம், அந்நாட்டு அரசிடம் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தி ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் அம்பிகையின் உயிரை காக்கவும் விரைந்து செயற்படவேண்டும். இல்லையெனில் அம்பிகையை கொன்ற பழி பிரித்தானியாவுக்கு மாத்திரமல்ல, ஈழத் தமிழ் தலைமைகளுக்கும் வந்து சேரும் என்பதை உணர்ந்து விரைந்து செயலாற்றுவோம்.
தீபச்செல்வன்
நன்றி: உரிமை