செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆனைக்கோட்டையில் 40 ஆண்டுகளின் பின் மீண்டும் அகழ்வாராய்ச்சி | கந்தசாமி கிரிகரன்

ஆனைக்கோட்டையில் 40 ஆண்டுகளின் பின் மீண்டும் அகழ்வாராய்ச்சி | கந்தசாமி கிரிகரன்

3 minutes read
1980 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர்களான பொ.இரகுபதி மற்றும் கா.இந்திரபாலா ஆகியோர் முன்னெடுத்த தொல்பொருள் அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய பெருங்கற்கால பண்பாடு மையம்  என உறுதிப்படுத்தும் வகையில் அடையாளப்படுத்தப்பட்ட தொல்பொருட் சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கப் பெற்ற ஆனைக்கோட்டை அகழ்வாய்வு மீண்டும் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகியது.
புலம்பெயர் நிதிப் பங்களிப்புடனும், யாழ். மரபுரிமை மையத்தின் அனுசரணையுடன் அதன் தலைவர் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் அகழ்வாய்வு ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் தென்னிலங்கை தொல்லியல்துறை பேராசிரியரான நிமல் பெரேரா, மற்றும் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா, பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவஐயர், யாழ். பல்கலைக்கழக வரலாற்று துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்தினி அருளானந்தம், பேராதனை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஜே.ஜெயதீஸ்வரன், யாழ். பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்களான சிவரூபி சஜிதரன், தி.துளசிகா, தற்காலிக உதவி விரிவுரையாளர் திருச்செல்வம், யாழ். தொல்லியல் திணைக்கள அகழ்வாய்வுப் பொறுப்பதிகாரி வி.மணிமாறன், யாழ். கோட்டையின் நிலையப் பொறுப்பதிகாரி பா.கபிலன், யாழ். தொல்லியல்  திணைக்கள முன்னாள்  பணிப்பாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க, யாழ். மரபுரிமை மையத்தின் செயலாளரும் யாழ். பல்கலைக்கழகப் பிரதிப் பதிவாளருமான இ.ரமேஷ், முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் மற்றும் முன்னாள் வலிகாமம் தென்மேற்கு தவிசாளர் அ.ஜெபநேசன், தொல்லியல் பட்டதாரிகளான க.கிரிகரன், ஜனனி, ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக தொல்லியல்துறை நான்காம் வருட இறுதியாண்டு மாணவர்கள் மற்றும்  மூன்றாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்கள், சமூக நலன்விரும்பிகள்  எனப் பலரும் பங்குகொண்டனர்.

ஆனைக்கோட்டை வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய பெருங்கற்கால மையமாகும். யாழ். குடாநாட்டின் வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஊராகும்.

நாவாந்துறைப் பகுதியைச் சீர்செய்வதற்காக கரையாம்பிட்டி மண்மேடு வெட்டப்பட்ட போது அங்கு காணப்பட்ட பண்பாட்டு எச்சங்களை மையமாகக் கொண்டு 1980 இல் பேராசிரியர்களான கா.இந்திரபாலா, பொ.இரகுபதி ஆகியோர் தலைமையில் அகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு மையங்களும், இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வின்போது இரு இடங்களில் பெருங்கற்கால மக்களது ஈமச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரு ஈமச் சின்ன மையங்களும் பத்து அடி இடைவெளியில் நான்கு அடி உயரம் கொண்ட மண்மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஈமச் சின்ன மையங்களில் 5 அடி உயரமுடைய இரு மனித எலும்புக்கூடுகள் கிழக்கு, மேற்கு திசையை நோக்கிய வண்ணமாக அடக்கம் செய்யப்பட்டிருந்தன. இதில் இரு கைகளும் கட்டப்பட்ட எலும்புக்கூட்டைச் சுற்றிவைக்கப்பட்ட மட்பாண்டங்களில் கறுப்பு, சிவப்பு , தனிக் கறுப்பு நிறக் கிண்ணங்கள், பானைகள் என்பன காணப்படடன. சில மட்பாண்டங்களில் சுறா மீன், மிருக எலும்புகள், நண்டின் ஓடுகள் என்பவற்றுடன் சிற்பி , சங்கு போன்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இங்கு இரும்பின் பயன்பாடு புழக்கத்தில் வந்ததனை உறுதிப்படுத்த இரும்புக் கருவிகளும், கழிவிரும்புகளும் கிடைத்துள்ளன.

சிற்பி, சங்கு, சுறா மீன் எலும்புகள் இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆனைக்கோட்டையில் பிராமி எழுத்து பொறித்த மட்பாண்டம் லட்சுமி நாணயம் உரோம மட்பாண்டம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு இரு ஈமச் சின்னங்களும் இற்றைக்கு 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்களுக்குரியது என உறுதிப்படுத்த முடிகின்றது.

எலும்புக்கூட்டின் தலை மாட்டின் அருகில் கிடைக்கப் பெற்ற கோவேத முத்திரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காலம் கி.மு. 3 நூற்றாண்டு 1.7 , 1.5 சென்றிமீற்றர் நீள அகலம் உடையது. இதன் மேல் வரிசையில் 3 குறியீடுகளும், கீழ் வரிசையில் 3 பிராமி எழுத்துக்களும்  உள்ளன. இது மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்டுகின்றது.

இந்தக் கோவேத முத்திரை பற்றி பொ.இரகுபதி (1987), இந்திரபாலா (1981), ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் (2023)ஆகியோர் ஆதாரபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக்கூடிய தொல்லியல்  சான்றுகள் கிடைக்கப் பெறும்  அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்று காலை 9 மணியளவில் 40 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

– கந்தசாமி கிரிகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More