செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

8 minutes read

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட டாப் ஸ்டார்களின் திரைஉலக பயணத்தை நோக்கினால், இது நன்றாகவே தெரியவரும்..
இந்திய அளவில் போனால் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் தமிழக அளவில் நிறுத்திக்கொள்வோம்.

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிழை மன்னர் என போற்றப்பட்ட எம் கே தியாகராஜ பாகவதர்..1934-ல் பவளக்கொடி படம் மூலம் அறிமுகமானவர். கொஞ்ச காலத்தில் சிந்தாமணி என்ற படம் நடித்தார். அந்தப் படம்தான் தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய முதல் படம்.

மதுரையில் சிந்தாமணி வசூலை வைத்து புதிதாக ஒரு தியேட்டரை கட்டி அதற்கு சிந்தாமணி என்றே பெயர் வைத்தார்கள்..

அதே பாகவதர் நடித்து1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தொடர்ந்து மூன்று தீபாவளிகளை கண்டு புதிய சாதனையே படைத்தது. ஹரிதாஸ் வரை பாகவதர் நடித்தது வெறும் ஒன்பது படங்களே.. ஆனாலும் அவர் தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தார் காரணம் அவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம் அப்படி..

ஆனால் விதி விளையாடியது பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் கைதாகி உள்ளே சென்ற பாகவதர், விடுதலை யாகி வெளியே வருவதற்குள் நிலைமையே மாறி விட்டது..

நான்காண்டு இடைவெளியில், அவர் நடித்த ராஜமுக்தி படம் வெளிவந்தது. எம்ஜிஆர், பானுமதியெல்லாம் நடித்திருந்த அந்தப் படம் அட்டர் ஃபிளாப்..அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பாகவதர் என்ற சூப்பர் ஸ்டாரால் திரை உலகில் எழுந்திருக்கவே முடியவில்லை.. தொடர்ந்து கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று வீம்பு பிடித்தார்.. அவர் நடித்து வெளிவந்த எந்த படமும் வெற்றிகரமாக ஓடவில்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் எம்ஜிஆரும் சிவாஜியும் வளர்ந்து எங்கேயோ சென்றுவிட்டனர்..

கடைசியில் சொத்து, புகழ், உடல் ஆரோக்கியம், மன நிம்மதி எல்லாவற்றையும் இழந்த நிலையில், 1959-ல் பாகவதர் பரிதாபமாக இறந்து போனார்.. அவர் இறக்கும்போது வயது வெறும் 49 மட்டுமே.. ஒன்பது படங்கள். சூப்பர்ஸ்டார். கைது சிறைவாசம்… அடுத்த வந்த சில படங்கள் அட்டர் பிளாப்..அப்படியே மரணம்.. பாகவதர். இறந்த பிறகு வெளியான அவரின் கடைசி படம் சிவகாமிகூட 1960-ல் வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போனது. வெள்ளி அண்டாவில் பன்னீர் ஊற்றி குளிப்பார் என்றெல்லாம் பேசப்பட்ட தமிழ் சினிமா முதல் சூப்பர் ஸ்டாரின், 25 ஆண்டுகால திரைப்பயணம், கடைசியில் இப்படித்தான் கந்தல் கந்தலாகி பரிதாபமாய் போனது.

பாகவதருக்கு சமமான டாப் ஸ்டாராக விளங்கியவர் பி. யு. சின்னப்பா ..பாகவதர் வசீகரமான தோற்றத்தாலும் இனிமை யான குரலாலும் ரசிகர்களை மயக்கினார் என்றால், பி யு சின்னப்பா மயக்கியது அற்புதமான நடிப்பாலும் ஆக்சன் காட்சிகளாலும்.. பாகவதருக்கு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை சின்னாப்பாவிற்கு. திரையுலக பயணத்தில் அவருக்கு ஓய்வே கிடையாது. .தொடர்ந்து வெற்றி முகமே.. சம்பாதித்து நடித்து கிடைத்த பணத்தில் புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கித் தள்ளியவர் அவர்.. பலத்த அதிர்ச்சி என்னவென்றால், வெறும் 35 வயதில் திடீரென இறந்து போனார் சின்னாப்பா.. புகழ் உச்சியில் மின்னிக் கொண்டிருக்கும் போதே உதிர்ந்த மிகப் பெரிய நட்சத்திரம் என்ற பெருமை சின்னாப்பாவிற்கு கிடைத்தது. அவர் மரணமடைந்த மறு ஆண்டுதான் நடிகர் திலகம் சிவாஜி பராசக்தியில் கதாநாயகனாக அறிமுகமானார். .

எம்கேடி- சின்னாப்புவிற்கு அடுத்து வந்ததுதான் எம்ஜிஆர்-சிவாஜி சகாப்தம். இதில் முதன் முறையாக சினிமாவிலும் அரசியலிலும் என ஒரே நேரத்தில் இரு குதிரைகள் மேல் நின்று கொண்டபடியே வெற்றிகரமாக சவாரி செய்தவர் இரண்டாவது சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆர்.

1936-ல் சின்ன வேடத்தில் அறிமுகமாகி 1947-ல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவர், தொடர்ந்து முன்னணி நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் மாறினார். நாடோடி மன்னன், எங்கவீட்டு பிள்ளை, அடிமைப்பெண், ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன் என தமிழ்திரை உலகில் வசூலில் சாதனைகளை ஏற்படுத்திவிட்டு அவற்றை உடைக்க அவரால் மட்டுமே முடிந்தது.. எம்ஜிஆரின் திரை உலகில் வெற்றிகரமான கடைசி ஆண்டு என்று சொன்னால் 1975 ஆம் ஆண்டை சொல்லலாம்.. நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி, நாளை நமதே பல்லாண்டு வாழ்க ஆகிய 4 படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியன. அதில் இதயக்கனி மெகா பிளாக்பஸ்டர்..எம்ஜிஆரின் கடைசி பிளாக் பஸ்டரும் அதுதான்..

இன்னொரு பக்கம் அதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்து மூன்றாண்டுகளாக ஆட்சிக்கு எதிரான தீவிர அரசியலை எதிர்கொண்ட நிலையில், எம்ஜிஆரால் படங்களில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.. 58 வயதை கடந்தவர், படங்களில் இளவயது ஹீரோவாக மட்டுமே நடிப்பதை நிறுத்திக் கொள்ளவும் முன்வரவில்லை..வயதுக்கேற்ற வேடங்களையும் தேர்ந்தெடுக்கவில்லை

மீனவ நண்பன், நீதிக்கு தலைவணங்கு போன்ற படங்கள் வெற்றிபெற்றாலும், பழைய எம்ஜிஆர் படங்கள் போல் ரசிகர்களை கவரவில்லை. காட்சி அமைப்புகள் அபத்தமாக இருக்கும்…உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் போன்ற படங்களை பற்றி சொல்லவேண்டியதேயில்லை…

இன்னும் ஓரிரு ஆண்டுகள் தொடர்ந்திருந்தால்கூட எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கை படு காமெடியாகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். இளவயது நடிகைகளும் டூயட் பாடும் இளவயது கதாநாயகன் என்ற வீம்புடன் அவர் மோசமாக தடுமாறிக் கொண்டிருந்தபோது, வரலாறு அழகாக அவருக்கு உதவி செய்தது. 24 ஆண்டுகால திராவிட கள அரசியல் அவருக்கு அற்புதமாக கை கொடுத்த தூக்கியதில் 1977 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். அதனால் அவருடைய திரையுலக அந்திம காலம் மிகப்பெரிய அவமானத்தில் இருந்து தப்பித்தது..

எம்ஜிஆரின் சகபோட்டியாளரான நடிகர் திலகம் சிவாஜியின் திரை வாழ்க்கை எண்பதுகள் வரை வெற்றிகரமாக இருந்தது. எம்ஜிஆர் திரை உலகை விட்டு போன சில ஆண்டுகளுக்கு பிறகும் சிவாஜி வெற்றிப் படங்களைக் கொடுக்கும் முன்னணி நடிகராகவே இருந்தார்.  இருப்பினும் ரஜினி, கமல் வளர்ந்து ஸ்டார்கள் ஆகிவிட்ட காலத்தில் சிவாஜிக்கு சிக்கலான நிலையே.

பாகவதர், எம்ஜிஆரை போல நடித்தால் சோலோ ஹீரோதான் என்ற வீம்புடன் சிவாஜி இருக்கவில்லை. மகனான பிரபுவுடன் மட்டுமின்றி, கார்த்திக் சத்யராஜ் போன்ற இளம் கதாநாயகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.. இருந்தாலும் பிற்காலத்தில் நடிகர் திலகம் என்ற இமேஜை அவருக்கு மீண்டும் மீண்டும் பறைசாற்றிய படங்கள் இரண்டே இரண்டு தான் ஒன்று, முதல் மரியாதை. இரண்டாவது தேவர்மகன்..

சிவாஜி தொடர்ச்சியாக நடிக்கவும் இல்லை, நடிக்காமலும் இருக்கவில்லை.. திரை உலகில் இருந்தாக வேண்டுமே என்ற ஆசையில் உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும் வயதுக்கேற்ப கவுரவ வேடங்களில் நடித்தார். பெரிதும் பேசப்பட்ட படையப்பா வந்த இரண்டு ஆண்டுகளிலேயே நடிகர் திலகம் காலமாகிவிட்டார்..

சிவாஜியை பொறுத்தவரை வயதுக்கு மீறிய வேடங்களை 1950களிலேயே ஆரம்பித்து விட்டார் அதனால் அந்த விஷயத்தில் அவருக்கு பிரச்சினை ஏதும் இருக்கவில்ல. முற்றிலும் தன் வயதுக்குத் தகுந்தாற்போல் முழு கதாநாயகனாக நடித்த, முதல் மரியாதை படம் வெளிவந்தபோது சிவாஜிக்கு வயது 57..

ஆனால் இதே 57 வயதில் தமிழ் சினிமாவின் மூன்றாவது சூப்பர் ஸ்டாரான ரஜினி நடித்ததுதான் ஏவிஎம்மிற்காக ஷங்கர் இயக்கிய சிவாஜி என்ற பிரமாண்டமான ஆக்சன் படம். . நுணுக்கமாக பார்த்தால் ரஜினியின் வெற்றிகரமான, நீண்ட திரையுலக வாழ்க்கைக்கு பெரிய அளவில் முதன்முதலில் சிக்கலை ஏற்படுத்திய படம், பாபா.. அதில் விழுந்த ரஜினிக்கு சந்திரமுகி என்ற படத்தின் மூலம் மீண்டும் எழுந்து நிற்க மூன்று வருடங்கள் பிடித்தது. அடுத்து வந்த ஏவிஎம்மின் சிவாஜி திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது என்றாலும்.. அளவுக்கு அதிகமாக போடப்பட்ட முதலீட்டை எடுக்க, படம் ரிலீசாகும் முதல் நாளிலேயே எண்ணற்ற திரையரங்கு களில் வெளியிட்டாக வேண்டிய என்ற புதிய பாதைக்கு தள்ளப்பட்டது…

வெளியிட்ட ஓரிரு வாரங்களிலேயே மொத்தத்தையும் தேற்றிவிடவேண்டும் என்ற கோட்பாட்டில் வெளியான குசேலன், எந்திரன், கோச்சடையான், லிங்கா, காலா, கபாலி, 2.0 போன்ற படங்கள் வசூல் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு ரஜினியை கொண்டு போய்விட்டது. தயாரிப்பு நிறுவனம் அமோக வெற்றி என்று சொல்லும். ஆனால் வினியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர் களில் ஒரு தரப்பினர் தங்களுக்கு நஷ்டம் என்றும் இழப்பீடு தரவேண்டும் என்றும் சொல்வார்கள்..ஆனாலும் அடுத்த ரஜினி படத்தை வாங்க அவர்களே முண்டியடிப்பார்கள். அது ஒரு அதிர்ச்சி கலந்த அதிசயம்.

இன்னொரு பக்கம், ரஜினியை வைத்து சுழன்று அடித்த இன்னொரு சர்ச்சை, வயதுக்கேற்ற வேடங்களை ஏற்காமல் சின்னச்சின்ன பெண்களுடன் சுற்றிவந்து டூயட் பாடுகிறார் என்றும் வெறும் கிராபிக்ஸ், நம்பமுடியாத ஆக்ஷன் என ஓவராக காட்டப்படுகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.. தற்போதைய தர்பார் படத்தையும் அந்த சர்ச்சை விட்டுவைக்கவில்லை,. விரல்களை காட்டினாலே பின்னால் வரும் எதிரிகள் தரையில் குப்புறவிழுவது போல காட்டப்படும் காட்சிகளுக்கும் ஒப்புக்கொண்டு ரஜினி நடிக்கிறார். கடுமையான விமர்சனங்களை புறந்ததள்ளிவிட்டு, தலைவா, தலைவா என அவர் ரசிகர்களும் வரவேற்கிறார்கள், தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள்.

வயதில்70 வது ஆண்டில் காலடி எடுத்து ஒருமாதம் நிறைவு செய்திருக்கும் ரஜினி, இன்னமும் படங்களில் கதாநாயகனாக நடிக்கப்போகிறார். நெகட்டிவ் விமர்சனங்களை வரப்போகும் அவரின் படங்கள் ஒடுக்குமா? இல்லை இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்ற நக்கல் இன்னும் பலமடங்க அதிகரிக்குமா என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்யும்.

24 ஆண்டுகால கட்சி அரசியல் வாழ்வு, எம்ஜிஆருக்கு கடைசி நேரத்தில் அழகாக திரையுலகில் இருந்து இழுத்து மாநிலத்தின் ஆட்சியையே மகுடமாக சூட்டியது. ஆனால் அரசியலுக்கு வராமல் அடிக்கடி அரசியல் பேசும் ரஜினிக்கு, திரைஉலக பயணம் எப்படி விடைகொடுக்கும், அரசியல் உலகத்திற்குள் அவர் போவாரா? என்பதையெல்லாம் இப்போதைக்கு தெளிவாக கணிக்க முடியவில்லை.

பி.யு.சின்னாப்பா, சிவாஜி வரிசையில் வரும் உலகநாயகன் கமலஹாசன், 61 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு சொந்தக்காரர். விஸ்வரூபம் என்ற பிரமாண்டத்தையும் பாபநாசம் என்ற எளிமையான படத்தையும் அவரால் கொடுக்கமுடிகிறது. வர்த்தம் வசூல் என பெரியதாக அவர் போட்டு அலட்டிக்கொள்வதில்லை. ஆனாலும் அதிகாரபூர்வமாய் அரசியல் அவதாரம் எடுத்துவிட்டதால், அவர் சினிமா பயணம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

கமலைப்பொறுத்தரை அவரின் சினிமாக்கள் எந்த காலத்திலும் ரசிக்கக்கூடிய அளவுக்கு இருப்பவை. அரசியல்வாதியாகிவிட்ட கமல், ரசிகர்கள் தீர்மானிக்கும் முன்பே தானாகவே ஹீரோ என்ற கமலை கழட்டிவிடுவதால் அவரின் திரையுலக அந்திம காலம் பற்றி எந்த பரபரப்பும் இருக்கப்போவதில்லை.

நெம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்து அதை 40 ஆண்டுகளாக தக்கவைத்து, கறுப்பு-வெள்ளை, கலர், அனிமேஷன், 3D என பல தலைமுறை கடந்து தொழில் நுட்ப மாற்றங்களுக்குள் புகுந்து, உலக அளவில் சாதனையாளராக திகழும் சூப்பர் ஸ்டார், ரஜினிக்கு மட்டுமே, திரைஉலக பயணம் இனி எப்படி இருக்கும் என்ற சஸ்பென்சை காலம் வைத்திருக்கிறது.

நன்றி : பத்திரிகை.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More