செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இயக்குநர் கே.பாக்யராஜ் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து

இயக்குநர் கே.பாக்யராஜ் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து

6 minutes read

“உன்னால் எதுவும் முடியும் என்று நினை ஆனால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் செய்” இது புரட்சித் திலகம் பாக்யராஜ் ரசிகர்களுக்கு கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடம்.

ஒரு சிறிய தீக்குச்சிக்குள் பெரிய தீயே அடங்கி இருப்பது போல் கே. பாக்யராஜ் அவர்களிடம் நடிப்புத் திறமை, கதை, வசனம், ஜோக்கு, பாடல் போன்ற அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்த அந்தக் காட்சிகளை வெண்திரை மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் தகுதி படைத்தவர்.

சினிமாவில் கதை, வசனம், நடிப்பு மூன்று மட்டுமல்ல. கதை நடக்கும் சுற்றுப்புறமும் மக்கள் மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும். இவை அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டியவர்  பாக்யராஜ் அவர்கள்.

தொலைக் காட்சியில் ரூல்ஸ் ரங்காச்சாரியில் தொடங்கி, ஜெயா தொலைக் காட்சியில் ‘அப்படி போடு’ தொடர்வரை வெற்றி நடைபோட்டு தனது காலடியை தமிழ் மக்கள் வாழும் இடங்களில் உள்ள எல்லார் வீடுகளிலும் நுழைந்து விட்டவர் பாக்யராஜ். பாக்யராஜ் அவர்களை, அவரது பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்ட முதலில் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் கிடைத்தார்கள். பின்னர் இவர் ஓர் கோஹினூர் வைரம் போல் திரைவானில் ஜொலிக்க ஆரம்பித்து விட்டார். இவரது படத்தைப் பார்க்க மக்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

12.7.1983ல் முந்தானை முடிச்சு திரைப்படம் எடுத்தோம்.  பாக்யராஜ் அவர்கள் கதையை ரெடி பண்ணிட்டேன் கேட்கறீர்களா என்றார். கேட்டோம். நான் எந்தக் கதையானாலும் என் ரூமில்தான் கேட்பது வழக்கம். உங்கள் ஆபிசில் கேட்கக்கூடாது. பாம்குரோவில் ரூம் நம்பர் 88ல் ரிசர்வ் பண்ணி வச்சுருக்கேன். அங்கேதான் வந்து கதையைக் கேட்க வேண்டும் என்றார். ஆபிசில் முக்கிய வி.ஐ.பி யாராவது வருவாங்க. முக்கிய டெலிபோன் வரும். நான் கதை சொல்லும்போது எந்தவித டிஸ்டர்பென்சும் இருக்கக் கூடாது.

Bhakyarajஎன்னடா இது யாரும் கதை சொல்லாத மாதிரி புதுசா கதை சொல்கிறேன் என்கிறாரே என்று அப்போது நினைத்தது உண்மை. அடுத்த நாள் காலையில் அவர் சொன்னபடி பாம்குரோவ் ரூம் நம்பர் 88க்கு போனோம். அவர் அஸிஸ்டண்ட் எல்லோரையும் வெளியே இருக்கச் சொன்னார். நாங்கள் உள்ளே போனோம். அவர் ஃபைல் வச்சிருப்பாரோ, ஸ்கிரிப் பிலிங் பாட்.

பென்சில் ஏதாவது வைச்சிருப்பாரோ என்று நினைத்தோம். ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. சார் நீங்க ரெடியா, கதை சொல்லலாமா என்று கேட்டார் நாங்க ரென்னோம். கதையை சொல்ல ஆரம்பித்தார். மிக அற்புதமாகக் கதையைச் சொன்னார். இந்த இடத்தில் பிரீஸ் இடைவேளை என்று சொன்னார். எங்களுக்கெல்லாம் காப்பி கொண்டு வர சொல்லிவிட்டு அவர் வெளியே போனார்.

அவர் திரும்ப வந்ததும் காப்பி சாப்பிட்டீங்களா, கதையை சொல்லட்டுமா என்று கேட்டுவிட்டு கதையை சொல்ல ஆரம்பித்தார். கதையை சொல்லி முடித்தார். பைல் இல்லை. ஒரு பேப்பர் இல்லை. பேனா இல்லை. முழு திரைக்கதையையும் சொன்னார். நான் அம்மாதிரி திரைக்கதையை அதற்கு முன்னும் கேட்டதில்லை. அதற்குப் பிறகும் கேட்டதில்லை. அவ்வளவு அற்புதமாக திரைக்கதை சொன்னார். அவர் முடித்தவுடன் சொன்னேன். பாராட்டுக்கள். உங்கள் கிரீடத்திற்கு மற்றொரு வைரம் என்று சொன்னேன். எங்க தந்தையார் இந்த மாதிரி திரைக்கதையை கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார். அவர் இன்று இல்லையே என்ற வருத்தத்தையும் அவரிடம் தெரிவித்தேன் – எம். சரவணன்.

விரசம் இல்லாமல் கீழ்த்தரமான ரசனைக்கு இடமில்லாமல் ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. பாக்யாவை படிக்கும்போது அது மிகவும் பொறுப்புணர்வோடு நடத்தப்படுகின்ற முயற்சி என்பது நன்றாகவே தெரிகிறது. துணுக்குச் செய்திகளில் கூட கவனம் செலுத்தப்பட்டு அதன் மூலமாக பயனுள்ள அர்த்தமுள்ள பொன்மொழிகள் வாசகர்களுக்கு தரப்படுகினற்து.

Bhakyarajபாக்யராஜ் அவர்களின் கேள்வி – பதில் பகுதிதான் இந்த இதழுக்கே ‘மகுடம்’ போன்றது என்பதில் சந்தேகமேயில்லை. நான் உட்பட எத்தனையோ பேர் வாகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறோம். பாக்யராஜின் பதில்கள் இவற்றிலிருந்து எல்லாம் மிகவும் வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கிறது. எங்கிருந்துதான் அவருக்கு சுவைமிக்க பொருள் பொதிந்த உவமைக் கதைகள் கிட்டுகின்றனவோ?

தன்னுடைய திரையுலகப் பணியினையும் வைத்துக் கொண்டு இந்த மாதிரி ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது அவருடைய திறமைக்கும் உழைப்புக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. அவருடைய முயற்சியை வாழ்த்துகிறேன். நகைச்சுவையும் நல்ல விஷயமும் கொட்டிக் கிடக்கும் பாக்யாவின் ஆயுள் நீண்டுக் கொண்டே போவதாக….- பத்திரிகையாளர் சோ சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘இதயம் பேசுகிறது’ இதழில் பாக்யராஜிடம் கேட்கப்பட்டது ஒரு கேள்வி “ஒரு நடிகைக்குக் கொடுக்கும் முத்தத்திற்கும் ஒரு மனைவிக்குக் கொடுக்கும் முத்தத்திற்கும் என்ன வித்தியாசம்?”

அவர் சொல்லியிருந்தார். “நடிகைக்கு கொடுக்கும் முத்தம் – ஐக்கியம் இல்லாத உணர்ச்சி. மனைவிக்கு கொடுக்கும் முத்தம் – உணர்ச்சி இல்லாத ஐக்கியம்”

இதற்குப் பிறகு பாக்யராஜுக்குள் பதுங்கி இருக்கும் நடிகரை, கலைஞரை, இயக்குநரை, தயாரிப்பாளரைக் கொஞ்சம் மறந்து விட்டு. அவருக்குள் இருக்கும் எழுத்தாளரை அதிகமாகய் அடையாளம் காண ஆசைப்பட்டேன்.

பாரதிராஜா அடித்தல் திருத்தல் இல்லாமல் என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒரே வாசகம் “எங்கிட்ட இருந்த ஒரே ரைட்டர் பாக்யராஜ்தான்; அவர்தான் ரைட்டர்” சிகரங்களை பறந்து அடைவது ஒரு வகை. சிகரங்களை நடந்து அடைவது ஒரு வகை. ஆனால் பாக்யராஜ் சிகரங்களை அடைந்தது ஊர்ந்து… ஊர்ந்து…தான் பலவீனங்களையே பலங்களாக மாற்றியதே அவர் பலம். தான் உதிர்த்த இலைகளையே தன் வேர்களுக்கு உரமாக்கிக் கொள்கிற விருட்சம் மாதிரி தன் பலவீனங்களையே பலங்களாய் மாற்றிக் கொள்கிற ரசவாதம் அவரைப் பல சந்தர்ப்பங்களில் பாதுகாத்தே வந்திருக்கிறது.

அவர்தான் பழைய வாழ்க்கையை மறக்கவில்லை. தன் மீதுள்ள தழும்புகளை அவர் மறைக்கவில்லை. வளர்ந்த பிறகு இங்கே பலர் தாங்கள் புழுதியின் புத்திரர்கள் என்பதை ஒப்புக் கொள்வதில்லை. தங்களின் நிகழ்காலப் பொன்னாடைகளால் பழைய கோவணங்களை மறைக்கவே நினைக்கிறார்கள். பாக்யராஜ் தன்னம்பிக்கை மிக்கவர். இன்று தங்கத்திரை போட்டுக்கொள்ள முடியும் என்பதற்காக – தன் இறந்த காலக் கந்தல்களை அவர் மறைக்கவில்லை.

Bhakyaraj“என் பாட்டி சாணி தட்டிக் கொண்டிருந்தபோது” என்று தான் தன் மலரும் நினைவுகளை அவர் ஆரம்பிக்கிறார். பாலுணர்ச்சிகள் பாதிக் கண் விழிக்கத் தொடங்கிய பருவத்தில் பள்ளி மாணவிக்கும் காதல் கடிதம் எழுதிக் கன்னம் கிழிந்த  கதையைப் புன்னகையோடு புலப்படுத்துகிறார். விஜயவாடாவில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டிய சம்பவங்களை சபையில் அறிவிக்கிறார். அந்த இறந்த காலப் பக்கங்களை ஈரத்திலிருந்துதான் நிகழ்காலத்துக்கு நீர் கிடைக்கிறது என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.

அவரிடம் நான் குறிப்பெடுத்துக் கொண்ட குணங்களுள் ஒன்று மிகையின்மை. கதை, நடிப்பு, கலைவாழ்க்கை, நடவடிக்கை இவற்றில் எதிலுமே ஒர மில்லிகிராம் கூட அவர் மிகை காட்டியதில்லை. தான் கதாசிரியன் மட்டுமில்லை. இயக்குநர் என்று நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது வென்றும் காட்டினார்.  யாரையும் சார்ந்திருப்பது ஒரு சாபம். சுயமாய் நிற்க முடியாதா என்று ஒரு சுடு கேள்வி பிறந்தபோது தான் தயாரிப்பாளராகவும் முடியும் என்று சாதித்துக் காட்டினார்.

முதல் மனைவி மறைந்தபோது பாக்யராஜின் இடம் வெற்றிடமாகி விடுமோ என்று காரணமுள்ள ஒரு கவலைப் பிறந்தபோது பூர்ணிமா என்ற அறிவார்ந்த பெண்மணியைத் துணைவியாக்கிக் கொண்டு நிரப்ப முடியாத இடத்தை நிரப்பிக் காட்டினார்.

தன் படத்துக்கு தானே இசையமைத்துக் கொள்ள வேண்டும் என்று தவிர்க்க முடியாத முடிவுக்கு அவர் தள்ளப்பட்ட போது அதுவரை தொட்டுப் பாத்திராத ஆர்மோனியத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்தியாவின் விலை உயர்ந்த தற்கொலை என்று கருதப்படுகிற பத்திரிகைத் துறையிலும் நுழைந்து தன்னையும் காப்பாற்றி தன் பத்திரிகையையும் காப்பாற்றி இரவு பகலாய் புத்தி தானமும், ரத்த தானமம் செய்து உழைக்கச் சலிக்காமல் நிலைக்கச் செய்திருக்கிறார்.

பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்த வானத்தின் கீழ் எதுவும் சாத்தியம் என்பதற்குத் தடுத்து விட முடியாத எடுத்துக்காட்டு என்றே பாக்யராஜை நான் பார்க்கிறேன். தான் பள்ளத்தில் கிடந்தபோது பரிமாறியவர்களுக்கெல்லாம் மேட்டுக்கு வந்த பிறகு கை கொடுத்திருக்கிறார். சிலர் இவரால் மேட்டுக்கு வந்திருக்கிறார்கள். சிலரால் இவர் பள்ளத்துக்கும் போயிருக்கிறார்.

ஒரு நாள் –

Bhakyarajஇரவு ஏழு மணிக்குப் போனவன் நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொல்லிய கருத்து ஆட்டோ கிராபில் எழுதித் தர வேண்டிய அற்புதமான கருத்தாகப்பட்டது. “தொடர்ந்து வெற்றி மட்டும் போதாது. மனிதனுக்கு தோல்வியும் தேவை. தொடர்ந்து வெற்றியே வந்தால் அது அதிர்ஷ்டம் என்று கொச்சைப்டுத்தப்படும். தோல்வியும் வந்தால்தான் பெற்ற வெற்றி உழைப்பினால் வந்த ஊதியம் என்ற உண்மை விளங்கும்.

தோல்வி கூட வெற்றிக்குக் கிடைக்கிற வெளிச்சம் என்று புரிந்து வைத்திருக்கிற பக்குவம் கண்டு பூரித்துப் போனேன்.

அவர் அஸ்திவாரம் பெரிது; ஆற்றல் பெரிது; அனுபவம் பெரிது. அவர் ஒரு நாளும் ஓய்ந்து போக மாட்டார். அவர் அவ்வளவுதான் என்று யாரும் எப்போதும் முடிவுகட்டி விட முடியாது. ராத்திரி வந்தவுடன் நட்சத்திரங்களெல்லாம் கூடி ‘சூரியன் அவ்வளவுதான்’ என்று முடிவு கட்டி விட முடியுமா என்ன?

– கவிப்பேரரசு வைரமுத்து

நன்றி : lakshmansruthi.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More