எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் வைக்கப்பட்டுள்ள 199 இந்திய மீனவர்களை, இம்மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை செய்யவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, முதலில் அவர்கள் லாகூருக்கு அனுப்பப்பட்டு, பின்னர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் – கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.
இதேவேளை, கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல் நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்துள்ளார்.