கிழக்கு லண்டன் பகுதியில் ஷாப்பிங் பேக்கில் டவலில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தனது நாயை அழைத்துக்கொண்டு, நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சிசுவை அடையாளம் கண்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
விரைந்து செயற்பட்ட கிழக்கு லண்டன் பொலிஸார், சிசுவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது குழந்தை காயமின்றி பாதுகாப்பாக உள்ளதாகவும், மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாயின் நலனில் அக்கறை
அத்துடன், பிறந்து சில நாட்களே ஆன குறித்த பெண் சிசுவின் தாயின் நலனில் தாம் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் அவரை தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“எங்கள் எண்ணங்கள் இப்போது குழந்தையின் தாயின் பக்கம் திரும்புகின்றன; அவளுடைய நலனில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம், ஏனெனில், அவர் ஓர் அதிர்ச்சிகரமான நிலையில் இருந்திருப்பார் மற்றும் குழந்தை பிறந்த பிறகு உடனடி மருத்துவ கவனிப்பு அவருக்குத் தேவைப்படும்.
“பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர். நாங்கள் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் அல்லது அருகிலுள்ள மருத்துவமனை அல்லது பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
மேலும், “உங்கள் மகள் நலமாக இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ளுங்கள், உங்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தயவுசெய்து 999ஐ டயல் செய்து உதவியை நாடவும்” எனவும் கிழக்கு லண்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த தாயை தெரிந்தவர்கள் யாரேனும் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு பெப்ரவரி ஒரு பூங்காவில் ஒரு குழந்தையும், 2020 ஜனவரியில் தெரு ஒன்றில் ஆண் குழந்தை ஒன்றும் என கடந்த 4 ஆண்டுகளில் நியூஹாமில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட மூன்றாவது குழந்தை இதுவாகும்.