இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் மசோதா கீழவையில் வெற்றி பெற்ற நிலையில், மேலவையில் அது தோல்வியை சந்தித்துள்ளது.
ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு நிரூபிக்கும்வரை, ருவாண்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தாமதிக்கவேண்டும் எனக் கோரும் மசோதா ஒன்று மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அதற்கு ஆதரவாக 214 பேரும், எதிராக 171 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க, மசோதா வெற்றிபெற்றுள்ளது.
எனவே, ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு நிரூபிக்கும்வரை, புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் சட்டம் அமுலுக்கு வராது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு இது முதல் தோல்வியாக பார்க்கப்படுகிறது.
ருவாண்டா திட்டம்
இங்கிலாந்திற்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்களை ஏதாவது ஓர் ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி, அங்கு தங்கவைப்பதுதான் ருவாண்டா திட்டம் ஆகும்.
பின்னர் அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். எக்காரணம் கொண்டு இங்கிலாந்திற்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த ருவாண்டா திட்ட மசோதா, நாடாளுமன்ற கீழ்வையில் வெற்றி பெற்ற நிலையிலேயே தற்போது மேலவையில் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.